சாரல் 23 | Tamil Novel | Jeyalakshmi Karthik Novels

 

சாரல் 23

 


புஷ்பா என்ற பெண் சொன்ன தகவலில் அங்கிருந்த அனைவரும் அமைதியாக நிற்க, ரவி தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டான். அவனை அப்படிப் பார்க்கப் பிடிக்காத எழில்,

 

"சார் ஏன் இடிஞ்சு போய் உட்கார்ந்துட்டீங்க? ராகினி அவளா வெளில போயிட்டா அவ்வளவு தானே? சந்தோஷப்படுங்க சார். அவளுக்கு எந்த ஆபத்தும் இல்லன்னு. அவளுக்கு இங்க இருக்கப் பிடிக்கலன்னு சொல்லிகிட்டே தானே இருந்தா. அதான் நேத்து பொறுமை இல்லாம கிளம்பி போயிருப்பா. அவ ஒன்னும் குழந்தை இல்ல சார். வளர்ந்த பொண்ணு தானே. பயப்படாம, இங்க இல்லன்னா எங்க போவான்னு யோசிங்க. நீங்களே இப்படி இடிஞ்சு போனா பெரியவங்களுக்கு யார் சார் தைரியம் சொல்றது?" என்று அவனை தன் வார்த்தைகளால் திடமாக்கிக் கொண்டிருந்தாள்.

 

ரகுராம் மனதிலும் அவள் சொன்ன வார்த்தைகளில் இருந்த உண்மை புரிய,

 

"எழுந்திரு ரவி, சென்னை வீட்டு ஆளுங்களுக்கு போன் பண்ணி அவ வந்தாளான்னு கேளு. நாம இவ்வளவு நேரமும் சொந்த பந்ததுக்கு தான் கூப்பிட்டோம். அந்த வீட்டை மறந்து போயிட்டோம்ல?" என்று மகனை எழுப்பி நிறுத்த முயன்றார்.

 

அதற்குள் புஷ்பா முன்னே வந்து, "சார் அந்த பொண்ணு ஒன்னும் தனியா போகல சார். ஒரு பையன் கூட பைக்குல ஏறிப் போச்சு. நீங்க சொல்ற மாதிரி இருந்தா ஏன் வண்டில ஏறி போகணும்?" என்றதும் மீண்டும் குழப்பம் சூழ்ந்தது.

 

இதற்கிடையில் எழிலின் கைபேசி அலற, மைக்கேல் எண்ணைக் கண்டு வேகமாக அதை ஏற்றாள்.

 

"அக்கா அவன் வண்டி பஸ் ஸ்டான்ட் பக்கத்துல இருக்கற டூ வீலர் ஸ்டாண்ட்ல நிக்குது." என்றவன், சிறு தயக்கத்துக்குப் பின்,

 

"அது மட்டும் இல்லக்கா, ஸ்டான்ட் வச்சிருக்கற பொன்னுரங்கம் அண்ணே சொல்லுது, புகழ் யாரோ ஒரு பொண்ணை கூப்பிட்டுக்கிட்டு சென்னை பஸ்ல ஏறினத பார்த்தேன்னு" என்று இழுத்தான்.

 

அமைதியாக ஆட்கள் இருந்த பகுதியை விட்டு நகர்ந்து வந்த எழில், "என்ன சொல்ற மைக்கேல்? அவனுக்கு பொண்ணுங்க கூட எந்த பழக்கமும் இல்லயே!" என்று நெஞ்சில் கை வைத்து பயத்துடன் பேசினாள் எழில்.

 

இந்த விவகாரத்தில் புகழ் சிக்கிவிட்டால் இனி இந்த ஊரில் சுத்தமாக தலை நிமிர்ந்து நடக்க முடியாது. ஏற்கனவே தாயும் அவனும் செய்த வினைகளால் தந்தை பணியிடத்தில் படும் அவமானங்களும், தனக்கு வெளியே செல்லும்போது கிடைக்கும் குத்தும் பார்வைகளும், சில நேரங்களில் பரிதாபப் பார்வைகளும் இனிமேல் யோசிக்காமல் சொல்லம்பால் துளைத்து விடும் என்று நடுங்கினாள்.

 

போலீசார் அங்கிருந்த காவலர் மூலம் தகவல் அறிந்து சென்னையில் அவர்கள் வீடு இருக்கும் சரகக் காவல் நிலையத்திற்கு தகவலளித்து விசாரிக்க முயன்றது.

 

நேரம் காலை பதினொன்று கடந்திருக்க, வைதீஸ்வரி மனம் தாளாமல் அழுது கரைந்து மயங்கி இருந்தார்.

 

உடனே அங்கிருந்தவர்கள் ஶ்ரீதரனை முதலுதவி செய்ய அழைக்கச் சென்றனர்.

 

உதவிக்கு வந்த ஶ்ரீதரன் தன் மகள் தள்ளி நின்று பதற்றமாக இருப்பதை கவனித்த வண்ணம், வைதீஸ்வரிக்கு முதலுதவி செய்தார்.

 

வைதீஸ்வரி சற்றே தெளிந்ததும் மகள் அருகில் வந்தவர், "என்னாச்சு செல்லம்? ஏன் பதட்டமா இருக்க? இன்னும் அந்த குடிக்காரப் பயலைப் பத்தி கவலைப்பட்டுகிட்டு இருக்கியா?" என்று புகழின் நினைவில் பல்லைக் கடித்தார்.

 

இவர்கள் தனியே பேசுவதை கவனித்த புஷ்பா, இவர்களுக்கு பின்னால் வந்து நின்று கொண்டார்.

 

இதை கவனிக்காத எழில், "அப்பா மைக்கேல் போன் பண்ணினான், புகழ் யாரோ ஒரு பொண்ணை கூட்டிகிட்டு சென்னை போனதா சொல்றான். எனக்கு ஒன்னும் புரியல பா. ஒருவேளை அது இந்த பொண்ணு ராகினியா இருக்குமோ?" என்று பயத்துடன் வினவ,

 

"அதானே பார்த்தேன், இந்த ஊர்ல ஒரு பெரிய சம்பவம் நடக்குதுன்னா அதுல உன் ஆத்தா தம்பி ரெண்டுல ஒன்னு தலையீடு இல்லாம இருக்காதே!" என்று புஷ்பா பின்னால் இருந்து நொடிக்க, எழில் மனமுடைந்து அழ ஆரம்பித்தாள்.

 

“புஷ்பா அக்கா, ஏன் இப்படி பேசுறீங்க?” என்று கண்ணீரோடு வினவ,

 

"ஏங்க அந்த மைக்கேல் பய இருக்கான்ல, அதான் போர் போடுற கம்பெனில வேலை செய்யறான்ல, அவனுக்கு போன் போட்டு கேளுங்க உண்மை என்னானு தெரியும்." என்று நகர்ந்து ரவி அருகில் வந்தவர்,

 

"சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க தம்பி, இந்த குடும்பத்து சகவாசம் தேவையா உங்களுக்கு, ஆள் கூலி இல்லன்னா பிரஸிடென்ட்டு கிட்ட கேட்டு இருக்கலாம். இப்படி அந்த பயலை வேலைக்கு கூப்பிட்டு உங்க வீட்டை பொண்ணை ஒரே நாள்ல இழுத்துட்டு ஓடிட்டான் பாருங்க." என்று பேசிக்கொண்டே போக ரவீந்தருக்கு தலை சுற்ற ஆரம்பித்தது.

 

"இல்லங்க அந்த பையன் இன்னிக்கு வேலைக்கு வற்றதா தான் இருந்தான். என் தங்கச்சி கிட்ட பேசக் கூட இல்ல. அவன் எதுக்காக அவளை கூப்ட்டுட்டு போகணும். இதுல ஏதோ தப்பு இருக்கு. போலீஸ் விசாரிக்கட்டும்." என்று புஷ்பாவை அமைதிப்படுத்தினான்.

 

எழில் அவனை நன்றிப் பார்வை பார்க்க, அதற்குள் காவல் ஆய்வாளர் மைக்கேலுடனும், சைக்கிள் ஸ்டான்ட் பொன்னுரங்கத்துடனும் அங்கு வந்து சேர்ந்தார்.

 

"சார் உங்க தங்கச்சி இவங்க வீட்டு பையன் புகழேந்தி கூட கிளம்பி போனதுக்கு இவன் சாட்சி. கூடவே பஸ் ஸ்டாண்டு எதிர்ல உள்ள கடையோட சிசிடிவி பார்த்தேன். அந்த பொண்ணும் பையனும் சேர்ந்து தான் சென்னை பஸ் ஏறி இருக்காங்க. நீங்க சொன்ன சென்னை அட்ரஸ்ல பார்க்க சொல்லி அங்க உள்ள இன்ஸ்பெக்டர் கிட்ட சொல்லி இருக்கேன்." என்று விளக்க, இம்முறை ரவீந்தர் எழிலிடம் ஒரு வித வலியான முக பாவத்தை வெளியிட்டான்.

 

எழில் என்ன செய்வதென்று தெரியாமல் கண்ணீரோடு நிற்க, சென்னை போலீசார் தொடர்பில் வந்தனர்.

 

"சார் நீங்க சொன்ன அட்ரஸ்ல ஒரு பொண்ணும் பையனும் வந்து போயிருக்காங்க. அந்த பொண்ணு இந்த வீடு அவங்களோடதுன்னு பிரச்சனை பண்ணி இருக்கு. இந்த வீட்டுக்காரங்க நாங்க வாங்கிட்டோம்னு சொல்லவும் கோவத்துல திட்டிட்டு போச்சாம். அந்த பையன் அவளோட கிளம்பியதா சொல்றாங்க" என்று விளக்க,

 

"சார் எங்க வீட்ல சின்ன பிரச்சனை. வீட்டை வித்த விஷயம் என் தங்கச்சிக்கு தெரியாது. அவளுக்கு இங்க இருக்க விருப்பம் இல்லன்னு சொன்னா, அதான் கிளம்பி போயிருப்பா. பிளீஸ் அவளுக்கு எதுவும் ஆகறதுக்குள்ள  அவளை கண்டுபிடிச்சு கொடுங்க சார்." என்ற ரவி உடைந்தவனாக வினவ,

 

"என்ன தம்பி புரியாம பேசுற, என்ன தான் இங்க இருக்க பிடிக்கலன்னாலும் பொம்பள பிள்ளை அப்படி கிளம்பி போகுமா? இது எதோ அந்த பையன் கிளப்பி கூட்டிகிட்டு போனது போல தான் இருக்கு" என்று புஷ்பா கூற,

ரவி பதில் சொல்ல முடியாமல் தவித்தான்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சாரல் 1

சாரல் 2 | Tamil Novel | Jeyalakshmi Karthik Novels

சாரல் 7 | Tamil Novel | Jeyalakshmi Karthik Novels