சாரல் 22 | Tamil Novel | Jeyalakshmi Karthik Novels

 

சாரல் 22

 


வேகமாக வீட்டின் பக்கவாட்டு வழியாக வேலியின் ஓரம் ஓடினாள் எழில்.

 

வேலியைப் பற்றிக்கொண்டு பார்த்த பொழுது அந்த மையிருட்டிலும் ரவியும் அவனோடு இருவரும் எதையோ தேடுவது நன்றாகப் புலப்பட்டது.

 

யோசிக்காமல் கேட்டை நோக்கி நடந்தாள். பதற்றமாக ரவி அங்கும் இங்கும் அலைந்தபடி கைபேசியை காதில் வைத்துக்கொண்டு இருந்தான்.

 

"ரவி சார்! ரவி சார்! என்னாச்சு?" என்றபடி அவள் உள்ளே வர,

 

"இசை, இசை உன்னோட தானே ராகினியை அனுப்பி வச்சேன், அவ எங்க?" என்றான் பதற்றமாக.

 

"நாங்க திரும்பி வந்து ரொம்ப நேரம் ஆகுதே சார். இப்போ போய் ராகினியை என்கிட்ட விசாரிக்கிறீங்க?" என்று புரியாமல் வினவினாள் எழில்.

 

"அவ வரல இசை. நாங்க கேம்பெர் வேன்ல கிடந்த க்வில்ட்டை பார்த்து, அவ தூங்கிட்டான்னு நினைச்சுக்கிட்டு இருந்தோம். இப்போ தான் பெரியம்மா அவளை சாப்பிட கூப்பிடலாம்ன்னு வந்தாங்க. ஆனா அங்க போர்வை தான் சுருண்டு இருந்திருக்கு. நான் தான் அவ தூங்கறதா தப்பா நினைச்சு இருந்திருக்கேன். கொஞ்சம் யோசிச்சு சொல்லு இசை. அவ ஏதாவது சொன்னாளா?" என்று படபடத்தான்.

 

"கால் வலின்னு மெதுவா வந்தா சார். வீட்ல சமையல் வேலை இருக்குன்னு நான் தான் வீடும் வேனும் கண்ணுக்கு தெரியற தூரத்துல, அவளை விட்டுட்டு சீக்கிரமா நடந்து வீட்டுக்குப் போனேன். அப்படின்னாலும் அவ இதைத் தாண்டி தானே சார் வெளில போக முடியும்? திரும்பி உள்ள போக அவ விரும்ப மாட்டா, ஏன்னா முதல்ல போகும்போதே செடி, முள்ளுன்னு புலம்பிகிட்டே தான் வந்தா." என்று எழில் பதில் கூறினாலும் இந்த பெண் இங்கே சென்றிருப்பாள் என்ற எண்ணம் மனதை அழுத்தியது.

 

"நீங்க இங்க தேடுங்க சார். நான் என் தம்பிக்குக் கூப்பிட்டு வெளில எங்காவது இருக்காளான்னு பார்க்கச் சொல்றேன்." என்று எழில் கிளம்பும்போதே மணி பத்தைக் கடந்திருந்தது.

 

வைத்தீஸ்வரி கண்ணீரை நிறுத்தாமல் பொழிந்த வண்ணம் இருந்தார். ரகுராம் தனக்குத் தெரிந்த வட்டத்து ஆட்களை வைத்து, இந்த ஊரில் உள்ள முக்கியஸ்தர்களைக் கண்டுபிடிக்க முயன்று கொண்டிருந்தார்.

 

எழில் பதற்றமாக வீட்டுக்கு வர, அவளைக் கண்டு ஶ்ரீதரன் பதறியபடி, "என்னாச்சு செல்லம்?" என்று எழுந்து வர,

 

நிகழ்ந்ததைக் கூறிவிட்டு தன் செல்போனைத் தேடத் துவங்கினாள்.

 

"அதை எடுத்து அப்பா இப்ப தான் சார்ஜ் போட்டேன் டா" என்று வேகமாக அதனை எடுத்துக் கொடுத்தார் ஶ்ரீதரன்.

 

சரோஜா எதுவும் பேசாமல் அமைதியாக வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தார்.

 

எழில் புகழேந்திக்கு விடாமல் அழைப்பு மேற்கொள்ள, அதுவோ அணைத்து வைக்கப்பட்டுள்ளது என்றே பதில் கூறியது.

 

ஶ்ரீதரன் வேகமாக சட்டையை மாட்டிக்கொண்டு ரவியைச் சந்திக்கக் கிளம்பினார்.

 

"ஆமா நீங்க எங்க கிளம்பிட்டீங்க? ஊருக்கு உழைக்க போறீங்களா?" என்று சரோஜா குறுக்கே வர, அவரைக் கண்டுகொள்ளாமல் நகர்ந்தார்.

 

ஶ்ரீதரன் ரவிக்கு தேவையான சில உதவிகளை அவன் கேட்காமலே செய்தார் எனலாம்.

 

இந்த ஊரின் காவல் நிலைய எண், அவர் வேலை செய்யும் மருத்துவமனை மருத்துவரிடம் பேசி உதவி கேட்டது, ஊர் தலைவர் எண்ணுக்கு அழைத்து உடனே வர வைத்தது என்று உதவி செய்தார்.

 

மணி நள்ளிரவைக் கடந்து விட, ஆளுக்கு ஒரு பக்கமாக அவளைத் தேடத் துவங்கினர். காவல் நிலையத்தில் வாய் மொழியாக புகார் அளிக்கப்பட்டதும், ரகுராம் மூலமாக பேசிய பெரிய மனிதர்களின் அந்தஸ்தால், தேடுதல் பணி அதிகாலை மூன்று மணிக்கு முடுக்கி விடப்பட்டது.

 

அவளது செல்போன் அவர்கள் தெருவின் முக்கில் கடைசியாக அணைத்து வைக்கப்பட்டது என்றது தொலைத்தொடர்பு நிறுவனம்.

 

நாலாப்புறமும் தேடியும் ராகினி என்றவளின் சுவடு இல்லாமல் போக போலீஸ் அவர்கள் உறவினர்களுக்கு அழைத்து விசாரிக்குமாறு கூறியது.

 

காலை விடியல் வந்தும் அவளைப் பற்றிய தகவல் ஏதும் கிடைக்கவில்லை. இதற்கிடையில் எழில் தன் தம்பிக்கு பல முறை அழைத்தும் அவனைப் பற்றியும் தகவல் இல்லாததால் பயந்து போய் தந்தையிடம் வந்து கூறினாள்.

 

"அவனை நேத்து நான் தான் திட்டி அனுப்பி விட்டேன் மா. கோபத்துல எந்த காட்டுக்குள்ள மேட்டுக்குள்ள தண்ணி அடிச்சு விழுந்து கிடக்கானோ?" என்று அசட்டையாகக் கூறினார்.

 

எழிலால் அவர் கூற்றை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உடனே அவனது பால்ய நண்பனான மைக்கேலுக்கு அழைத்தாள்.

 

"மைக்கேல், நேத்து நைட்டு வீட்ல சண்டை. அப்ப கோவிச்சுகிட்டு போன புகழ் இன்னும் வரவே இல்ல பா. அவன் எப்பவும் போற இடத்துக்கு கொஞ்சம் போய் பார்த்து அவன் எங்கன்னு எனக்கு சொல்றியா?" என்று தயக்கமாக வினவினாள் எழில்.

 

"இதோ கிளம்பி போய் பாக்குறேன் கா. என்கிட்ட வேலைக்கு கேட்டான் கா. நான் தான் கொஞ்சம் அவன் மனம் நோக பேசிட்டேன். உண்மையை தான் சொன்னேன், ஆனாலும் அவனுக்கு வலிச்சு இருக்கும்." என்று கூறிவிட்டு தன் தேடுதலை ஆரம்பித்தான்.

 

நேரம் சென்றதே தவிர எந்த விதத்திலும் ராகினி பற்றிய தகவல் வரவில்லை.

 

ரவி அவளாக எங்கும் சென்றிருக்க வாய்ப்பில்லை என்று போலீசாரிடம் கூறி விட்டதால் அவர்கள் கோணம் முழுவதும் அவளை யாரோ கடத்திச் சென்றதாகவே இருந்தது.

 

சொந்த பந்தங்கள் வீட்டிலும் ராகினி இல்லை என்பது இதற்கு கூடுதல் வலு சேர்த்திருக்க, காலை ஏழு மணிக்கு கேம்பர் வேனுக்கு வெளியே சேரில் அமர்ந்தபடி தன்னையே நொந்து கொண்டிருந்தான் ரவி.

 

உள்ளூர் ஆட்கள் சிலரை அழைத்து நேற்று எழிலும் ராகினியும் சென்று வந்த குன்றுவேல் வரை பார்த்து வந்தும் பலன் என்னவோ பூஜ்யமாக இருந்தது.

 

அந்த நேரத்தில் தான் முதல் நாள் மாலை ரவியை சந்தித்த கோபால் தனது நண்பர்களுடன் அங்கு வந்தார்.

 

"என்ன தம்பி ஊரே உங்க இரும்பு வீட்டை பார்க்க வந்திடுச்சு போல?" என்று விசாரிக்க,

 

"இல்லங்க அண்ணா, என் தங்கச்சியைக் காணோம்." என்று வருத்தத்துடன் கூறினான் ரவி.

 

"என்ன தம்பி வீட்ல இருந்த பிள்ளை எங்க போவும்? போட்டோ இருக்கா?" என்று விசாரிக்க, அவன் தன் கைபேசியில் இருந்த அவளது புகைப்படத்தைக் காட்ட, அவருடன் நின்றவர்கள் எல்லாம் அதனை வாங்கிப் பார்த்தனர்.

 

அதில் இருந்த பெண், சற்று யோசனைக்கு பின், "நேத்து இந்த பொண்ணு சிகப்பு கலர்ல ட்ரெஸ் போட்டு இருந்ததா?" என்று நெற்றியைத் தேய்த்தார்.

 

எழில் வேகமாக முன்னே வந்து, "ஆமா புஷ்பா அக்கா" என்று கூற,

 

"நேத்து நைட்டு இந்த பொண்ணு என்கிட்ட தான் பஸ் ஸ்டாப் எங்கன்னு கேட்டுச்சு."  என்றார் யோசனையாக.

 

அத்தனை நேரம் இருந்த சலசலப்பு குறைந்து அங்கே நிசப்தம் நிலவியது.

 

"அப்ப உங்க வீட்டு பொண்ணு காணாம போகல. வீட்டை விட்டு போயிருக்கு." என்று அங்கிருந்த காவலர் கூற ரவிக்கு உலகம் தட்டாமலை சுற்றியது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சாரல் 1

சாரல் 2 | Tamil Novel | Jeyalakshmi Karthik Novels

சாரல் 7 | Tamil Novel | Jeyalakshmi Karthik Novels