மேற்கே உன் சாரல்மழை 9

சாரல் 9



"எந்த பார்ட்டிக்கு போனாலும் நானும் அம்மா அப்பா கூடவே போவேன் அக்கா. அன்னைக்கு எனக்கு லேசா காய்ச்சல். அம்மா என்னை வர வேண்டாம்னு ரொம்ப அழுத்தமா சொல்லிட்டாங்க.  நானும் மாத்திரை போட்டு தூங்கிட்டேன். திடீர்னு வீட்டு வேலை செய்யற பொண்ணு என்னை எழுப்பி கீழ வர சொன்னாங்க. போனா ஒரே போலீஸ். எனக்கு ஒன்னும் புரியலை. திடீர்னு ஊர்ல இருந்து பெரியப்பா வந்து நின்னாரு. ஹாஸ்பிடல் போனா அப்பாவை காட்டல. அம்மா மட்டும் நிறைய மெஷினுக்கு நடுல, ஐ.சி.யூல இருந்தாங்க. அப்பா இறந்துட்டார்ன்னு சொன்னாங்க. என்னால அதை தாங்க முடியல. அப்பறம் அவங்க.. அவங்களும்... அம்மாவும்..." என்று விசும்ப ஆரம்பித்தாள்.

"அழாத ராகினி. என்னால ஆறுதல் தான் சொல்ல முடியும். உன் வலியை எடுத்துக்கவோ, உன் வேதனையை பகிர்ந்துக்கவோ முடியாது. ஈசியா, 'இறப்பு தவிர்க்க முடியாதது ராகினி'ன்னு உனக்கு நான் சொல்லிடலாம். ஆனா ஒரு இறப்பு ஒருத்தரோட வாழ்க்கையை எப்படி பிரட்டிப் போடும்னு எனக்கு தெரியும். உன் துக்கத்தை நீயே தான் ராகினி ஆத்திக்கிட்டு வெளில வரணும்." என்று வேலி வழியே அவள் கையைப் பற்றினாள்.

"நான் என் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட கூட இதெல்லாம் சொல்லவே இல்ல அக்கா. என்னவோ உங்களை பார்த்ததும் சொல்ல தோனிச்சு." என்று அவளும் எழிலின் கையை அழுத்தமாக பற்றிக்கொண்டாள்.

வீட்டு வாயிலில் நின்று புகழ் ஹாரன் ஒலி எழுப்ப,

"தம்பி வந்துட்டான். சாப்பிட குடுத்திட்டு வர்றேன். நீ உன் அண்ணா கிட்ட சொல்லிட்டு தயாரா இரு." என்று சொல்லி விடை பெற்றாள் எழில்.

ராகினி மீண்டும் டென்ட்டுக்கு வர, "பெரியப்பா.. பிளீஸ் நான் சொல்றத கேளுங்க." என்று ரவீந்தர் பேசுவது அவள் காதில் விழுந்தது.

"நான் வேணும்ன்னு பண்ணல பெரியப்பா. இதான் சரியா இருக்கும்ன்னு நினைச்சு செஞ்சுட்டேன்." என்று ரகுராமிடம்  தன்னிலை விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தான்.

ராகினி வேகமாக அவன் கையில் இருந்த மொபைலை பிடுங்கி, "அப்ப உங்களுக்கும் தெரியாம தான் என்னை இங்க கூட்டிகிட்டு வந்தானா இவன்?" என்று கோபத்தில் அவள் கத்த,

"முதல்ல அவனை மரியாதையா பேசு ராகினி." என்று கண்டிபுடன் கூறினார் ரகுராம்.

"பெரியப்பா எனக்கு இங்க போர் அடிக்குது. என்னை ஏன் இங்க கூட்டிகிட்டு வந்தான்? எப்ப சென்னை போறோம்ன்னு கேட்டேன், இப்போ வரை பதில் சொல்ல மாட்டேங்கறான்." என்று அவரிடம் குற்றப் பத்திரிகை வாசித்தாள்.

"நானும் அவன் கிட்ட அதை பத்தி தான் பேசிட்டு இருக்கேன் ராகினி. நீ வேணா பெரியப்பா வீட்டுக்கு வர்றியா?" என்று கேட்க,

சில நிமிட அமைதிக்குப் பின், "அம்மாவுக்கு நான் அங்க வர்றது பிடிக்காது பெரியப்பா. தப்பா நினைக்காதீங்க. நான் வரல" என்று மெதுவாகக் கூறினாள் ராகினி.

ரவீந்தர் அவளை புரியாமல் நோக்கினான். ரகுராம் அவள் மனம் புரிந்தவராக, "சரி ராகினி, அப்ப அண்ணன் சொல்றத கேட்டு நட, உனக்கு இந்த உலகத்தை பத்தி தெரியாது. உனக்கு தெரிஞ்சதெல்லாம் சந்தோஷம், ஃபன், பார்ட்டி இது தான். இப்போ அதெல்லாம் விட உனக்கு முக்கியமான ஒன்னு தான் தேவை. உன்னோட பாதுகாப்பு. நீ ரவி கிட்ட போனை கொடும்மா. நான் பேசுறேன்." என்றதும் மொபைலை அவனிடம் கொடுத்துவிட்டு நேராக எழில் வீட்டுத் திண்ணையில் சென்று அமர்ந்தாள்.

"பெரியப்பா, இவ என்ன சொல்ற? அங்க வந்தா என் அம்மாவுக்கு பிடிக்காதா? ஏன்? இவ இதுவரை வந்ததே இல்லையா அங்க?" என்று புரியாமல் வினவ,

"ம்ம்.. வந்திருக்கா, உங்க அப்பா அம்மா கூட வருவா, அவங்க பக்கத்துல உட்கார்ந்து இருப்பா. கூடவே போய்டுவா. நீ எப்பவும் எங்க கூடவே ஒட்டி இருந்ததால உன் அம்மாவுக்கு எங்க நாங்க ராகினியையும் அவங்க கிட்ட இருந்து பிரிச்சிடுவோம்ன்னு ஒரு பயம் எப்பவும் இருக்கும். அதுனால ராகினி இதுவரை நம்ம வீட்டுல வந்து தங்கினதே இல்ல." என்று விளக்கினார்.

"நான் உங்க கிட்ட அதிகம் ஒட்டக் காரணமே அவங்க என்கிட்ட அன்பா இருந்தது எனக்கு புரியாததால தானே பெரியப்பா. பொம்மை வாங்கிக் கொடுத்தா அன்புனு அவங்க நினைச்சாங்க. ஆனா எனக்கு அப்படி தோணல. இதுக்கு நீங்க என்ன செய்ய முடியும்?" என்று அவன் மனதில் இருந்ததைக் கூற,

"இப்போ எதுக்கு ரவி பழைய பேச்சு.. அதை விடு. நீ ஏன் இப்படி ஒரு முடிவு எடுத்த? எப்பவும் பெரியப்பா கிட்ட கேட்டு செய்யலன்னாலும் சொல்லிட்டாவது செய்வ, இந்த விஷயத்துல அதை கூட பண்ணலையே. பெரியப்பா மேல அவ்வளவு தான் மரியாதையா பா?" என்று வருத்தமாக வினவினார்.

"பெரியப்பா. பிளீஸ் அப்படி பேசாதீங்க. நான் என் முடிவை சொன்னா நீங்க ஒத்துக்க மாட்டீங்க. உங்க கூடவே எங்க ரெண்டு பேரையும் தங்க சொல்லுவீங்க. எனக்கு வயசு ஆகுது பெரியப்பா. என் தங்கச்சியை பார்த்துக்க வேண்டிய கடமை எனக்கு இருக்கு. அதுக்காக உங்களுக்கு எங்க பொறுப்பு இல்லைன்னு நான் சொல்ல மாட்டேன். ஆனா.. என்னோட குற்றவுணர்வுக்கு இது ஒன்னு தான் பெரியப்பா ஆறுதல்." என்றான் வலியுடன்.

"ம்ம்.. " என்று பெருமூச்சு விட்டவர், "ரெண்டு நாள் அங்க இருக்க மாட்டேன்னு சொல்றா ராகினி. நீ அவளை சமாளிச்சு அங்க இருக்க வைக்க முடியும்னு நம்புறியா?" என்ற அவரின் கேள்விக்கு ரவீந்தரிடம் பதிலில்லை.

"அவ புரிஞ்சுக்க மாட்டா பெரியப்பா. ஆனா அவளுக்கு இது புரிஞ்சு தான் ஆகணும். இல்லன்னா அவளுக்கு வலிச்சாலும் பரவாயில்லைன்னு நானே எல்லா உண்மையையும் சொல்லிடுவேன்  பெரியப்பா." என்று அவன் அழுத்தத்துடன் கூற,

"அப்ப நாங்க இந்த வாரம் கிளம்பி அங்க வர்றோம். நாம சேர்ந்து அவகிட்ட சொல்லலாம். அவசரப்படாத. அவளுக்கு உன் பிளான் பிடிக்கலன்னா நாங்க அவளை கூட்டிகிட்டு வர்றோம். அப்பறம் அவளோட விருப்பப்படி செய்வோம்." என்று அவர் பேசும்போதே அவரிடம் இருந்து போனை வாங்கிய பெரியம்மா,

"கண்ணா நாம அப்படியே ராகினிக்கு மாப்பிள்ளை பார்ப்போம் பா.  ஆறு மாசத்துல கண்டிப்பா அமையும்." என்று அவனது பதிலுக்காக காத்திருந்தார் .

"இல்ல பெரியம்மா இப்போ அதெல்லாம் பண்ண வேண்டாம். ஒரு வருஷம் போகட்டும். இல்லன்னா தங்கச்சியை பார்த்துக்க முடியாம நான் கல்யாணம் பண்ணிட்டா மாதிரி சொந்தம் எல்லாம் பேசும். உங்களுக்கு தெரியாதா, அப்பா அம்மா காரியம் நடக்கும்போது என்னல்லாம் பேசினாங்க!" என்று ரவி கூறும் போதே அன்றைய நிகழ்வில் பெரியவர்கள் இருவரும் அவன் சொல்வது சரியென்று அமைதியானார்கள்.

- பொழியும்

Comments

Popular posts from this blog

மேற்கே உன் சாரல்மழை -1

மேற்கே உன் சாரல்மழை 2

மேற்கே உன் சாரல்மழை 7