சாரல் 77 | Tamil Novels | Jeyalakshmi Karthik Novels
சாரல் 77
"வாங்க,
உள்ள கூட்டிட்டு வாங்க" என்று மகிழ்வாய் அழைத்தார் வைதீஸ்வரி.
அவர் முகத்தில்
அத்தனை மகிழ்ச்சியை ரகுராம் இதுவரை பார்த்ததே இல்லை. அவர் மனைவியின் முகத்தை வாஞ்சையாக
பார்த்துக் கொண்டிருக்க,
"நீங்க
வந்தவங்களை கவனிக்காம இங்க என்ன பாத்துட்டு இருக்கீங்க?" என்று அவர் அதட்டவும்
ரவியின் புதிய வீட்டு புதுமனை புகுவிழாவுக்கு வந்தவர்களை வரவேற்று காலை உணவுக்கு அழைத்துச்
சென்றார்.
வைதீஸ்வரி அத்தனை
மகிழ்வாய் வீட்டிற்குள் முதலில் அழைத்தது வேறு யாரையும் அல்ல, ரவியும் எழிலும் புதிதாக
வாங்கிய நாட்டு மாடும் அதன் சிறு கன்றையும் தான்.
புதுமனைக்கு
பசுவை அழைப்பது மரபு என்பதாக அன்று பேச்சு வாக்கில் அவர் உரைத்திருக்க, ரவி உடனடியாக
நல்ல விற்பனையாளரை சந்தித்து புது வீட்டிற்கு செல்லும் போது அவர்களுடைய பசுவையே அழைத்துச்
செல்ல திட்டமிட்டு விட்டான்.
பிள்ளை இல்லாத
அந்த அன்னையின் மனம் குளிர்ந்து போனது. "எப்படியும் கொஞ்ச நாள்ல வாங்க நினைச்சது
தான் பெரியம்மா. இப்ப பாருங்க என்னோட கனவான தற்சார்பு வாழ்க்கை முறைக்கு முழுசா வந்தாச்சு.
மாற்று மின்சாரம்,
மழை நீரை தேக்கி சுத்திகரித்து சேமித்த தண்ணீர், இயற்கையா காய்கறி, கீரை, கோழி, வாத்து,
காடை இறைச்சி, முட்டை, மீன், ஆடு, இப்போ மாட்டு பால், இதோ இந்த அழகான வீடு" என்று
அவன் சிலாகித்து பேசிக்கொண்டிருக்க,
"இதெல்லாம்
சொன்ன நீ உன் மனைவியை விட்டுட்ட பாரு" என்று மகன் மனதறிந்து கேலி செய்தார்.
"அவ இல்லன்னா
இது எதுவுமே இல்ல பெரியம்மா. நான் இசையை சந்திச்சப்ப அவ என் மனைவியா வருவான்னு நினைக்கல.
ஆனா அவ தான் என் மனைவின்னு முடிவு செய்த பின்னாடி இந்த நிமிஷம் வரையிலும் எனக்கு எப்பவும்
துணையும், ஆறுதலும், என் கனவுக்கு உயிராவும் இருந்தா பெரியம்மா. உண்மையிலேயே நான் ரொம்ப
கொடுத்து வச்சவன்" என்று ரவி அன்று கூறியதை நினைவு கூர்ந்த வைதீஸ்வரி பசுவின்
வலது புறமாக வந்து கொண்டிருந்த மருமகளை நிறைவுடன் நோக்கினார்.
"பெரியம்மா
உங்க மருமகளை சைட் அடிச்சது போதும், இந்த ரிட்டர்ன் கிஃப்ட் எல்லாம் எடுத்து வைக்க
எனக்கு ஹெல்ப் பண்ணுங்க" என்று சிணுங்கிக் கொண்டு வந்தாள் ராகினி.
"நான்
தான் உன்னை கவனமா வேலை பாருன்னு சொன்னேன். அதுக்காக எந்த வேலையா இருந்தாலும் நீ என்னை
ஒட்டிக்கிட்டு செய்யறது நல்லாவே இல்ல ராகினி. மாப்பிள்ளை என்கிட்ட சண்டைக்கு வரப் போறார்."
என்று அவளை கேலி செய்தார்.
ஆம் ராகினி
தாயாகப் போவதை இரண்டு நாட்களுக்கு முன் அறிந்து குடும்பமே மகிழ்ச்சியில் திளைத்தது.
அதுவரை வீட்டு
கிரகப்பிரவேசம் முடிந்ததும் தங்கள் ஊருக்கு புறப்படும் எண்ணத்துடன் இருந்த வைதீஸ்வரியும்
ரகுராமும் அந்த எண்ணத்தை கைவிட்டு இனி இங்கேயே இருந்து விட வேண்டும் என்ற அன்புக் கட்டளையை
பிறப்பித்தவள் ராகினியே தான்.
தன் அன்னை பெரியன்னையுடன்
தான் பழகிவிடக் கூடாது என்று பிரித்து வைத்தது எவ்வளவு பெரிய பிழை என்பதை வைதீஸ்வரியின்
அன்பை கண்டபின் உணர்ந்து கொண்ட ராகினி, இல்லாத தன் அன்னையின் அன்பையும் சேர்த்து வைதீஸ்வரியிடம்
அனுபவிக்க முடிவு செய்து விட்டாள்.
"அண்ணாவோட
யூடியூப் பிரெண்ட்ஸ் எல்லாம் வந்திருக்காங்க, புகழ் அவங்க கூட பண்ணையை சுத்திக் காட்ட
போயிட்டார். அவரை காரணம் காட்டாம என் கூடவே இருங்க" என்று அவரை தன்னுடன் இழுத்துக்
கொண்டு சென்றாள்.
எழில் நிறைவாக
வீட்டை ஒருமுறை பசுவும் கன்றும் சுற்றி வர வைத்துவிட்டு அதற்கென அவசரமாக அமைத்த சிறு
தொழுவத்தில் சென்று கட்டி விட்டு வந்தாள்.
அவளது அழைப்பின்
பெயரில் பெரியவர் சாலமனும் தர்மாவும் வந்திருந்தனர்.
"வீடு
ரொம்ப நல்லா இருக்கு எழில். வெளில உள்ள குளிர் உள்ள இல்ல. அதை விட எல்லாமே இயற்கை பொருளா
வச்சு அழகா கட்டி இருக்கீங்க." என்று தர்மா புகழ,
"எல்லாமே
அவரோட ஆசைதான் அண்ணா" என்று கணவரை காட்டியவள் கண்களில் அத்தனை காதல்.
அதைக் கண்ட
பெரியவர் சாலமன், "கடவுள் ஒருத்தரை அதிகமா கஷ்டப்படுத்தும் போது அவர் மேல நம்பிக்கை
குறையும் எழில். ஆனா அந்த கஷ்டத்துக்கு பலனா அவர் நிலையான மகிழ்ச்சியை கொடுப்பார்ன்னு
பெரியவங்க சும்மா சொல்லல. நீ பட்ட அவஸ்தைக்கு உனக்கு கணவர் எப்படி அமைந்து இருக்காரு
பாரு. ஊரே மெச்சுது. நம்ம பிரசிடென்ட் ஐயாவுக்கு எப்பவும் தம்பியை பத்தின பேச்சு தான்."
என்று கூறுக்கொண்டிருந்தார்.
தர்மா சங்கடமாக
எழிலை நோக்கி, "என்னை மன்னிச்சிடு எழில். ஏதோ கோபத்துல நடுவுல தெரியாம பேசிட்டேன்."
என்று பழைய விஷயங்களுக்கு மன்னிப்பு கேட்க,
"அதெல்லாம்
என் நினைவிலேயே இல்ல அண்ணா, போன ஜென்மம் மாதிரி இருக்கு" என்றவள் அமைதியாகிவிட,
"உன் அம்மா…"
என்று சாலமன் இழுத்தார்.
"அவங்க
டவுன் பஸ் ஸ்டான்ட் பக்கத்துல வீடு பார்த்து போயிட்டாங்க." என்றவள் புன்னகையில்
துளியும் வெறுப்போ வருத்தமோ இல்லை.
"இவ்வளவுக்கு
அப்பறமும் உன் அம்மா மாறவே இல்லையே?" என்று தர்மா சலிக்க,
"அதெல்லாம்
மாறி இருப்பாங்க. ஆனா அதை வெளில காட்டிக்க முடியாது. மாறி அதை காட்டி நாளைக்கே ஏதோ
ஒரு விஷயத்துல அவங்க பழைய நினைவுல எதுவும் பேசிட்டா நல்லா இருக்காது. இப்ப கிடைக்கற
பணமும் சுகமும் நிரந்தரமா இருக்க அவங்க இந்த இடைவெளியை கடைப்பிடிச்சு தான் ஆகணும்.
ஆடின காலும் பாடின வாயும் சும்மா இருக்காது. குத்திக்குத்தி பேசிப்பேசியே பழகின அவங்களுக்கு
அவங்க மேலயே நம்பிக்கை இல்ல." என்று சிரித்தாள்.
"கேள்விப்பட்டேன்
உன் தம்பி சம்சாரம் மாசமா இருக்காம். அவளுக்கு அம்மா இல்லயில்ல, நீ தான் அவளுக்கு தாயா
இருந்து பார்த்துக்கணும். நீ தாயாகும் போது கண்டிப்பா உன் அம்மா மாறி வருவாங்க"
என்று வாக்கு போல கூறினார் சாலமன்.
"இருக்கட்டும்.
நான் ராகினிக்கு செய்வேன். அவ எனக்கு செய்வா. இனிமே நாங்க நாலு பேர் தான் எங்க நல்லது
கெட்டதை பார்த்துக்கணும். என் பெரிய மாமனார் மாமியார், என் அப்பா எல்லாரையும் வயசான
காலத்துல முடிஞ்ச வரை நிம்மதியா வச்சுக்கணும்." என்று கூறியவள் முகத்தில் நிம்மதி
நிறைந்திருந்தது.
வீட்டை சுற்றிப்
பார்த்த பலரும் கட்டுமான முறைக்கு பின் அதிகம் விசாரித்தது உள்பக்க சுவர்களுக்கு பூசப்
பட்டிருந்த பெயிட்டைப் பற்றித்தான்.
ரவி சளைக்காமல்
கூறிக் கொண்டிருந்தான். "இப்ப மாட்டுச் சாணத்துல பெயிண்ட் வந்துடுச்சு. ஈகோ பிரண்ட்லி
மட்டும் இல்ல சாதாரண பெயிண்ட் விலையை விட பாதி தான். ஆன்லைன்லயே கிடைக்குது.
கலரும் இயற்கையா கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கு" என்று விவரிக்க,
"நார்மலா
மரபு வீட்டுக்கு உள்ள பெயிண்ட் தேவையில்லன்னு கேள்விப்பட்டேன். அப்பறம் ஏன் நீங்க?"
என்று நண்பர் ஒருவர் வினவ,
"தங்கச்சிக்கு
அவ ரூமை கலரா வச்சுக்க ஆசை. இதை தெரிஞ்சுக்கிட்ட என் மனைவி என்கிட்ட இதுக்கு ஒரு வழியை
கண்டுபிடிங்கன்னு கண்டிஷனா சொல்லிட்டாங்க. அவங்க சொன்ன பின்னாடி நான் தட்ட முடியுமா?
எல்லா பக்கமும் விசாரிச்சு இதை கண்டுபிடிச்சு இதோ எல்லா ரூமுக்கும் அவங்வங்க விருப்பமான
நிறத்தை வாங்கி அடிச்சாச்சு" என்று கூறினான் ரவி.
தொலைவில் அவன்
பேசுவதை சாலமனுடன் பேசிக்கொண்டு எழில் ரசிக்க, அவளது ரசனை பார்வையை உணர்ந்து ரவியின்
இதழ்களில் புன்னகை மலர்ந்தது.

கருத்துகள்
கருத்துரையிடுக