சாரல் 73 | Tamil Novels | Jeyalakshmi Karthik Novels
சாரல் 73
பணம் கடனாக ஜனகராஜ் கேட்டிருந்தால் கண்டிப்பாக உதவி செய்திருப்பார் பரசுராம். ஆனால் தன்னுடைய பங்குதாரர் என்று கூறி ஒரு நிறுவனத்தில் பணம் பெற்றுச் சென்றது அவருக்கு மிகப் பெரிய அவமானமாகவும் அவமரியாதையாகவும் இருந்தது.
ஏற்கனவே பல முறை ஜனகராஜை காஸ்மோ கிளப்பில் பார்த்திருக்கிறார். அன்றும் தனது கோபத்தை அவரிடம் வெளிப்படுத்த அவர் தேர்வு செய்த இடம் அதுவாகவே இருக்க,
இவர் சென்ற போது ஜனகராஜ் மாவட்ட டி.எஸ்.பியுடன் ஷட்டில் விளையாடிக் கொண்டிருந்தார்.
ஜனாவிடம் பேசிவிட்டு அவர் சரிவராவிட்டால் போலீஸில் புகார் கூறும் எண்ணத்தில் இருந்தவர் இங்கே அவர் யாருடன் விளையாடுகிறார் என்று அறிந்து அது சரிவராது என்று எண்ணி கிளம்பி விட்டார்.
ஆனால் நேராக அவரது வீட்டிற்கு சென்று அவரது மனைவியிடம் ஏற்கனவே தனது நிறுவனத்தில் கையாடல் செய்ததற்கான சாட்சியங்களை காட்டிவிட்டு, இப்பொழுது பொய்யுரைத்து மோசடி செய்ததையும் நிரூபித்து, போலீஸில் கூறினால் செல்வாக்கை பயன்படுத்தலாம்.
ஆனால் நேரடியாக சோஷியல் மீடியாவில் கூறிவிட்டால் ஜனகராஜின் மரியாதை கெடுவதோடு அவர்கள் மகளின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகும் என்ற ஒரே காரணத்தினால் அதை எதையும் செய்யாமல் கணவரின் சுயரூபம் மனைவிக்கு தெரியட்டும் என்று அவரிடம் வந்து கூறிவதாக தெரிவித்து, கணவரை கண்டிக்கும் படியும், மேலும் தன் வழியில் வந்தால் குடும்பம், மகள் என்றெல்லாம் பார்க்காமல் தனது மகன் நடத்தும் யூடியூப் சேனலில் தகவலை பகிர்ந்து விடுவதாகவும் சற்று மிரட்டல் த்வனியில் கூறிவிட்டு வந்துள்ளார்.
ஜனகராஜ் பணத்துக்கு அலைபவராக இருந்தாரே அன்றி மனைவி மகள் மேல் உயிரையே வந்திருந்திருக்கிறார்.
அவரது மனைவியோ நேர்மையான குணம் கொண்டவராக இருக்க பரசுராம் பொய்யுரைக்கவில்லை என்பதை உணர்ந்து கணவருடன் சண்டையிட்டு பிரிந்து சென்று சில காலம் வாழ்ந்திருக்கிறார்.
அவரை சமாதானம் செய்து மீண்டும் வாழ அழைத்து வந்தும் பழைய அன்பு, காதல், மரியாதை என்று எதுவும் ஜனாவுக்கு கிடைக்கவில்லை.
அதனால் பரசுராம் மேல் வன்மம் வளர்த்தார் ஜனா. அவரைப் பழி வாங்க நேரம் பார்த்து நரி போல காத்திருந்திருக்கிறார்.
காஸ்மோ கிளப்பில் அடிக்கடி பத்ரியைக் கண்டவர் அவரது குணநலன்களை தன் நண்பர்கள் மூலம் தெரிந்து கொண்டு சிறிது சிறிதாக காய் நகர்த்தி இருக்கிறார்.
மீண்டும் தொழிலில் இணைத்துக்கொள்ள கேட்பது போல பணம் பற்றியும் பேசிவிட்டு பத்ரி வரும் நேரம் வெளியேறி நாடகத்தை துவங்கி இருக்கிறார். பல வருட பழக்கம் பரசுராமோடு இருந்ததால் கண்டிப்பாக தன்னைப் பற்றிய எந்த உண்மையையும் பத்ரியிடம் பகிர மாட்டார் என்று உணர்ந்து அவரது ஆட்டத்தை ஆடி இருக்கிறார்.
பணம், சினம், வெறி எல்லாம் சேர்ந்த ஒரு மனித மிருகமாக மாறி பரசுராமையும் அவர் மனைவியையும் விபத்து போல கொலை செய்து கிளப்பில் உள்ள ஆட்கள் மூலமே கடனால் தற்கொலை செய்து கொண்டார் என்று புரளியை கிளப்பி விட்டிருக்கிறார்.
உண்மையை விட பொய் தானே காட்டுத்தீ போல வேகமாக பரவும். பத்ரிக்கு முதலில் விஷயம் தெரிந்தபோது திகைத்தவர் பின் முன்னால் நடந்த இரு சம்பவங்களைக் கொண்டு அப்படி இருக்குமோ என்று எண்ணி விட்டார்.
ஒரு முறை தனது சகோதரியின் கணவரின் கம்பெனி கணக்கைப் பார்க்கவோ, ஆடிட்டர் யாரென்று அறிந்து விசாரிக்கவோ செய்யாமல் பத்ரி தன் மருமகனிடம் தகவல் பகிர, அவனுக்கு அந்த தொழிலில் ஆர்வம் இல்லாததாலும், பெரியப்பாவும் தனக்கு இது பற்றி தெரியாது என்று சொன்னதாலும் கிடுக்குப் பிடியாக உடனடியாக பணத்தைக் கொடுக்கா விட்டால் அடுத்த மாதம் மேலும் சில கோடிகள் வட்டி செலுத்த வேண்டியது இருக்கும் என்ற ஜனாவின் சொல்லாலும் பத்ரி காட்டிய இடங்களில் பத்திரத்தை வாசித்துவிட்டு கையெழுத்து போட்டுக் கொடுத்தான் ரவீந்தர்.
அதில் இருந்த தந்தையின் கையெழுத்தை உண்மையா பொய்யா என்று ஆராயாமல் போன தன் மடத்தனத்தை எண்ணி இன்று அவன் வருந்த, எழில் அவனை தன்னோடு சேர்த்துக் கொண்டாள்.
"நீங்களும் சரி, பெரிய மாமாவும் சரி முதலீடு செய்வீங்களே தவிர நிறுவன விஷயங்கள், உள்விவகாரங்கள் பத்தி உங்களுக்கு தெரியல. அதுனால அவங்க வட்டின்னு சொன்னதும் உள்ளதும் போகறதுக்குள்ள இருக்கறத காப்பத்திப்போம்ன்ற மனநிலையில தான் அன்னைக்கு கையெழுத்து போட்டிருப்பீங்க. சும்மா அதையே நினைச்சு வருந்த வேண்டாம். எப்படி இருந்தாலும் சொத்து, பணம் எல்லாமே கோர்ட் நமக்கே திரும்ப வாங்கிக் கொடுக்கும். கொஞ்சம் நாள் ஆகலாம், கொஞ்சம் பணம் குறைஞ்சும் போகலாம். ஆனா மாமா அத்தை சாவுக்கு நீதி கிடைக்கும்" என்று அவனை சமாதானம் செய்தாள்.
"இப்படி அவன் வலையில விழுந்து அம்மா அப்பா இறந்து போயிட்டாங்க. அவங்க பேர் களங்கப்பட நானும் உடந்தையா இருந்துட்டேன்." என்று ரவி மீண்டும் வருந்த,
"நீங்க இந்த சீன்லயே இல்ல. ஆனாலும் உங்க சேனல்ல போட்டுடுவேன் மாமா சொன்ன வார்த்தைக்கு தான் சொத்தை வாங்கி உங்களை நடுத்தெருவில் நிற்க வைக்க அந்த ஆள் முயற்சி செஞ்சிருக்கான். பத்ரி சித்தப்பா கவனமா கணக்கு பார்த்ததால கடன் போக மீதி தொகைன்னு எதையோ கொடுத்து சமாளிச்சு இருப்பான்" என்று எழில் எரிச்சலுடன் கூற,
"ஆமா இசை. அது மட்டுமில்ல பிரதீஷ் போன்ல ஏதோ ஆப் இன்ஸ்டால் பண்ணி பார்க்க சொல்லி அது மூலமா ஆள் விட்டு அவனோட இன்ஸ்டா அகவுண்டை ஹேக் பண்ணி தான் அன்னிக்கு மெசேஜ் அனுப்பி இருக்காங்க. அவங்க பொண்ணு வாழ்க்கை கேட்டு போகக் கூடாதுன்னு அவர் மனைவியோட அன்பை இல்லாம செய்ததுக்கு ராகினி கல்யாணத்தில் இருந்து ஓடி வந்தா அவளோட வாழ்க்கை கேள்விக்குறி ஆகிடும்ன்னு இந்த அளவுக்கு இறங்கி செய்திருக்கான்." என்று கோபம் முகத்தில் மின்னக் கூறினான்.
"கெடுவான் கேடு நினைப்பான்னு சும்மாவா சொன்னாங்க. இப்போ பாருங்க, அவர் மனைவி அவருக்காக ஒரு வக்கீல் கூட வச்சுக் கொடுக்கல. அவர் மகளும் அப்பாவை வேண்டாம்னு சொல்லிடுச்சாம் பிரதீஷ் தம்பி தான் சொன்னான்" என்று எழில் கூறியபோது ஏனோ அது ரவிக்கு நிம்மதியை தரவில்லை.
அவன் யார் குடும்பமும் கெட்டு போக வேண்டும் என்று எண்ணவில்லை. இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் மகிழ்ச்சியாகவும் நிறைவாகவும் வாழ நினைத்தான். அவ்வளவு தான் அவனது எதிர்பார்ப்பு.
ஜனகராஜுக்குக் கூட அவன் கேடு நினைக்கவில்லை. அவர் செய்த குற்றத்துக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்ற நியாயமான சிந்தனை தான் அவனிடம் இருந்தது.
பத்ரி சற்று உடல்நலம் தேறியதும் மீண்டும் தங்கள் இல்லம் செல்ல திட்டமிட்டனர் அத்தம்பதி.
பிரதீஷ் மறுநாள் காலை ரவியை தொடர்புகொள்ள, நேராக அவர்கள் வீட்டிற்கு சென்று பத்ரியிடம், 'நடந்ததையே நினைந்து குமைந்து போக வேண்டாம்' என்று ஆறுதல் கூறினர்.
"அப்படி சொல்லாத ரவி. நான் பணம் பணம்ன்னு அந்த பேப்பருக்கு கொடுத்த மதிப்பை உனக்கு கொடுத்திருந்தா, ஜனகராஜ் என்கிட்ட உங்க அப்பா கடன் வாங்கினதா சொன்னதுமே உன்னையும் வர சொல்லி அவருக்கு உதவி செய்ய முயற்சி செய்திருப்பேன். அப்ப அவரும் உண்மையை தெரிஞ்சு அவன் மேல ஏதாவது நடவடிக்கை எடுத்து இன்னிக்கு உயிரோட இருந்திருப்பார். ஆனா நான் கடனாளி கிட்ட என்ன உறவுன்னு ஒதுங்கவும் தானே இன்னிக்கு அவங்க இல்லாம போயிட்டாங்க" என்று கண்ணீர் விட்டார்.
"சித்தப்பா போற யாரையும் நம்மளால பிடிச்சு வைக்க முடியாது. அவங்க காலம் முடிஞ்சு போச்சு, அதுக்கு அவங்க போன காரணம் தான் நமக்கு வேதனையை அதிகரிக்கிது. நீங்க முதல்ல சொன்னது போல செய்திருந்தாலும் ஒருவேளை அன்னைக்கு அவங்க போனபோது எதார்த்தமாவே அந்த விபத்து நடந்து அவங்க இறந்திருக்கலாம். இப்ப உயிரோட இருப்பாங்கன்னு நம்மளால உறுதியா சொல்ல முடியாது" என்று அவரை திடப்படுத்தக் கூறினாள்.
ஆனால் அவளின் வார்த்தைகள் அங்கிருந்த அனைவரையும் சற்று திடப்படுத்தி இருந்தது.
அவளது கைகளை பற்றிக்கொண்டு பத்ரி கண்ணீருடன், "நீ சொன்ன வார்த்தை என்னை எவ்வளவு தூரம் மீட்டிருக்கு தெரியுமா மா? இல்லன்னா குற்றவுணர்வுல சில நாள்ல நான் நொறுங்கி போயிடுவேன்", என்று அவளுக்கு நன்றி கூறினார்.
"இதை நான் சொல்லல சித்தப்பா. இவரு போன வருஷம் ஒரு டிரிப் போனாரு. அப்ப ரிஷிகேஷ்ல ஒரு பையன் ரோட் ஆக்ஸிடென்ட்ல இறந்து போயிட்டான். அவங்க அம்மா அழுதப்ப அங்கிருந்த ஒரு சிவனடியார் அவங்களுக்கு சொன்னது. இவரோட வீடியோல அவர் பேசியது பதிவாகி இவரும் அதை யூடியூப்ல போட்டிருந்தார்." என்று எழிலிசை கூற அவளை யோசனையாகப் பார்த்தான் ரவி.

கருத்துகள்
கருத்துரையிடுக