சாரல் 71 | Tamil Novels | Jeyalakshmi Karthik Novels
சாரல் 71
தன் எதிரில் அமர்ந்திருந்த தமக்கை மகனை அதிருப்தியுடன் பார்த்துக் கொண்டிருந்தார் பத்ரி.
மேகலா இருந்த போதும் அவர் ரவியை ரசித்ததில்லை. சிறுவயதில் பரசுராமும் மேகலாவும் பிள்ளையை வேலையாளிடம் விட்டுவிட்டு வெளியூர்களுக்கு செல்வது தெரிந்தும் தன்னிடம் குழந்தையை விட்டுச் செல் என்று பத்ரி பொறுப்பெடுத்ததில்லை.
அவளிடம் பணம் இருக்கிறது அவள் பிள்ளையை பார்த்துக்கொள்ள ஆள் வைத்திருக்கிறாள் என்று எண்ணி ஒதுங்கியே இருந்து கொண்டார். இத்தனைக்கும் அவரிடமும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு செல்வம் இருந்தது.
ஆனால் ரகுராம் தனிமையில் வாடும் தம்பி மகனைக் கண்டு தானும் தன் மனையாளும் பிள்ளை இல்லாமல் தவிக்கும் நிலையில் அவரின் செயல் பிடிக்காமல் குழந்தையை தங்களுடன் அழைத்துச் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டார்.
பத்ரி ரவியை வளர்ந்த ஆண்மகனாக கண்டபோது உண்மையில் பூரித்துப் போனார். ஆனால் படித்து பட்டம் வாங்கியும் தந்தை தொழிலை கவனிக்காமல் அவன் ஊர் சுற்றுவதாக மேகலா வருந்தி சொன்னதைக் கேட்டதும் அவருக்கு அவன் மேல் நல்ல அபிமானம் வரவில்லை.
இன்றும் தங்கையை அழைத்துக் கொண்டு சென்ற ரவி ஊரில் நிலம் வாங்கி ஏதோ செய்வதாக அவரின் மனைவி சில நாட்களுக்கு முன் கூறி இருந்தார். அதிலும் அவருக்கு அத்தனை பிடித்தம் இல்லை.
இன்று ரவி திடீரென மனைவி என்று ஒரு பெண்ணை அறிமுகம் செய்து வைத்துவிட்டு எதிரில் அமர, இவன் எதற்காக இங்கே வந்தான்? பண உதவி எதிர்பார்க்கிறானோ? என்று அவர் சந்தேகமாக மனதில் நினைத்துக் கொண்டு முகத்தில் அதிருப்தியை அப்பட்டமாக காட்டிக் கொண்டிருந்தார்.
ரவி தனது மடிக்கணினியை அவர் முன்னே இருந்த டீபாயில் விரித்து வைத்து அவனது ஒவ்வொரு வங்கிக் கணக்கையும் திறந்து காட்ட ஆரம்பித்தான்.
ஆரம்பத்தில் அசட்டையாக நோக்கியவர் அவனது பங்குச்சந்தை முதலீடுகளின் கணக்கைக் கண்டு திகைத்தார்.
ஊரில் உள்ள நிலம், நேற்று வரை அங்கே செய்திருந்த ஏற்பாடுகள் என்று அடுத்தடுத்து புகைப்படங்களை அவன் காட்டியதும் அவரது முகத்தில் அத்தனை மகிழ்ச்சி.
"என்ன ரவி இதெல்லாம்? இந்த அளவுக்கு பணம் பண்ணத் தெரிஞ்ச நீ இங்க இருந்து தொழில் செய்யாம ஏன் ஏதோ ஒரு கிராமத்துல என்னென்னவோ செய்து நேரத்தை வீணடிக்கற?" என்று வேகமாக வினவினார்.
அவருக்கு அருகில் அமர்ந்திருந்த பிரதீஷை ஒரு பார்வை பார்த்த ரவி, "மாமா நான் உங்க கிட்ட என்னோட பண மதிப்பைக் காட்டினதுக்கு ஒரு காரணம் இருக்கு. நான் சொத்துக்கு ஆசைப்படுறவன் கிடையாது. உங்க பணமோ, பொருளோ எனக்கு வேண்டாம். இதை மட்டும் முதல்ல நல்லா மனசுல வாங்கிக்கோங்க" என்றதும் அவருக்கு அவன் கூற்று விளங்கவில்லை.
"என் அப்பா கடன் வாங்கின விஷயம் உங்களுக்கு எப்ப தெரியும்? எப்படி தெரியும்?" என்ற ரவியின் கேள்வி அவருக்கு விசித்திரமாக இருந்தது.
"இது என்ன கேள்வி? உங்க அப்பா அம்மா இறந்து போகறதுக்கு சில மாசம் முன்னாடி நான் உங்க வீட்டுக்கு போயிருந்தேன். அப்ப ஜனா சார் அங்க இருந்து கிளம்பிட்டு இருந்தாரு. உள்ள இருந்த உங்க அப்பா ரொம்ப டென்ஷனா இருந்தாரு. என்னனு கேட்டதுக்கு பண விஷயம்ன்னு சொன்னாரு. அப்பறம் ரெண்டு வாரம் கழிச்சு ஜனா சார் ‘காஸ்மோ கிளப்’ல விளையாடிட்டு கிளம்பும்போது என்னை அடையாளம் கண்டு ‘பரசுராம் பணத்தை ரெடி பண்ணிட்டாரா’ன்னு கேட்டாரு. அப்ப தான் தெரியும் உன் அப்பா கடன் வாங்கின விஷயம்." என்று நீளமாகக் கூறினார்.
"அப்ப மாமாவே உங்க கிட்ட அந்த ஜனகராஜ் கிட்ட கடன் வாங்கினதா சொல்லல? அவர் உங்க கிட்ட கேட்டதை வச்சு முடிவு செய்தீங்களா?" என்று முதல் முறையாக எழில் வாய் திறந்து வினவினாள்.
"அப்படி இல்ல. நான் அடுத்த முறை மேகலாவை பார்க்கும் போது கேட்டேன். பண விவகாரம் எதுவும் எனக்கு தெரியாது, அவர் அதெல்லாம் பார்த்துப்பார். பிஸ்னஸ் பண்ணினா பணம் கொடுத்து வாங்குறது சகஜம் தானே? நீ இதெல்லாம் கண்டுக்காதன்னு சொல்லிட்டா." என்று பத்ரி கூறியதும் ரவி மடங்கி அமர்ந்தான்.
பிரதீஷ் அவனை சமாதானம் செய்ய நினைக்க, அதனை எழில் தடுத்தாள்.
திடீரென்று ரவி 'ஆ' என்று கத்தி வாய்விட்டு அழுத் துவங்கினான்.
எழில் அவனது முதுகை வருட, பிரதீஷ் அவனுக்கு அருகில் வந்து தோளை ஆதரவாகப் பற்றினான்.
"என்ன நடக்குது இங்க?" என்று பத்ரி மகனை எரிச்சலுடன் வினவ,
"சித்தப்பா, நீங்க ஏன் அந்த ஜனகராஜ் கொடுத்த பத்திரத்தை வாங்கி இவர் கிட்ட கையெழுத்து வாங்கிக் கொடுத்தீங்க?" என்று எழில் நிதானமாக வினவினாள்.
"ஏம்மா அவங்க கடன் வாங்கி கட்ட முடியாம தற்கொலை பண்ணின பின்னாடி ஜனா சார் என்கிட்ட வந்து பணத்துக்கு பதிலா அவங்க சொத்தை வாங்கி கொடுத்தா கூட போதும், ஏன்னா பரசுராம் கிட்ட கொடுத்ததுல நிறைய பணம் லாக் ஆகி இருக்கு. புது பிஸ்னஸ் ஆரம்பிக்க உடனே எனக்கு பணத்தேவை இருக்கு. செத்த வீட்ல சண்டை போட எனக்கு விருப்பம் இல்ல. உங்களுக்கு தான் எல்லா விஷயமும் தெரியுமே அவங்க பசங்க கிட்ட பேசி இதை முடிச்சுக் கொடுங்கன்னு கேட்டாரு. அதான் செய்தேன். இத்தனைக்கும் பத்திரம் எல்லாம் சரியா இருக்கான்னு பார்த்து தான் கொண்டு வந்தேன்." என்ற அவரை வருத்தமாக நோக்கினாள் எழில்.
"கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய். இதுக்கு சரியான எடுத்துக்காட்டு நீங்க ரெண்டு பேரும் தான்." என்று பெருமூச்சு விட்டாள்.
பிரதீஷ் தந்தையை முறைக்க, அவர் எழில் கூறுவதும் புரியாமல் ரவியின் அழுகைக்கான காரணம் தெரியாமல் இப்பொழுது மகனின் முறைப்புக்கும் விடை தெரியாமல் விழிக்க,
"உங்க கிட்ட வந்து யாராவது ஏதாவது கேட்டா இப்படியா செய்வீங்க? அந்த ஜனகராஜ் உங்களை முட்டாளாக்கி கோடி கோடியா இருந்த சொத்தை சுருட்டிட்டான். அது கூட இரண்டாம் பட்சம் தான். அத்தை மாமா உயிர் போயிடுச்சு. இப்போ என்ன செய்து நம்ம தப்பை சரி பண்ண போறோம் பா?" என்று அவன் தந்தையைக் கண்டு கோபத்துடன் வினவினான்.
"நான் என்ன டா செய்தேன்? நல்லா வாழ்ந்த மனுஷன் செத்த பின்னாடி அசிங்கப் படக் கூடாதுன்னு தான் இவங்க கிட்ட கையெழுத்து வாங்கிக் கொடுத்தேன். ஜனா சார் கோர்ட் கேஸ்ன்னு போயிருந்தா பல வருஷம் அலையணும். இருக்குற சொத்தையும் ஃபிரீஸ் பண்ணிட்டா, சம்பாதிக்காத இவன் எந்த பணத்தை வச்சு கேஸ் நடத்துவான். அதான் சொத்து எழுதிக் கொடுத்தா, கடன் போக மீதி தொகை இவங்க வாழ்க்கைக்கு பயன்படுமேன்னு இவங்களுக்காக யோசிச்சு தான் செய்தேன்." என்று பத்ரி பேசினார்.
ரவி நீர் நிறைந்த தன் விழியை அழுத்தமாகத் துடைத்துக் கொண்டு, "எனக்காக அவ்வளவு செய்த நீங்க, இப்போ நான் கேட்கப்போற ஒரு உதவியையும் செய்து கொடுங்க. என்னோட தாய் மாமாவா இதை செய்ய வேண்டாம். ஆனா உங்க சகோதரிக்கு அவங்க சகோதரனா அவங்களோட மரணத்துக்கு நீதி வாங்கிக் கொடுங்க." என்று கை கூப்பி நின்றவன் மடங்கி அமர்ந்தான்.
"நீங்க எல்லாம் என்ன பேசுறீங்க?" என்று பத்ரி பதற,
"மாமா என் அப்பா யார் கிட்டயும் கடன் வாங்கல. அதே போல அவங்க சாவு தற்கொலையும் இல்ல." என்று ரவி உடைந்து போய் கூறினான்.
பத்ரியின் இதயம் நின்று துடிக்க, பிரதீஷ் அன்று ஜனாவின் அலுவலகம் வந்த போது கோப்பில் இருந்து பெயர்களை வைத்து அந்த கம்பெனியின் ரெஜிஸ்டிரேஷன் செய்திருந்த தகவல்களை தன் நண்பன் மூலம் கண்டறிந்து ரவிக்கு காட்டிய காகிதங்களை இப்பொழுது பத்ரியிடன் நீட்டினான்.
வாங்கிப் பார்த்தவர் தலையில் இடி இறங்கியதைப் போல துவண்டு சரிந்தார்.
அவரைத் தாங்கிய பிரதீஷ் மெல்ல அவரைத் தட்டிக் கொடுத்துத் தேற்றினான்.
"நான் என்ன பண்ணி வச்சிருக்கேன்? பத்திரத்தை நல்லா படிச்சேன். ஆனா இப்படி ஒரு சதி பின்னாடி இருக்கும்ன்னு தெரியாம போயிடுச்சே! இப்போ என்ன செய்து நான் பண்ணின தவறை சரி பண்றது?" என்று கண்ணீர் விட
"இது மட்டும் பிரச்சனை இல்லப்பா. இன்னும் நிறைய இருக்கு." என்று பிரதீஷ் கூற சற்றே பயத்துடன் அவனை நோக்கினார் பத்ரி.

கருத்துகள்
கருத்துரையிடுக