சாரல் 70 | Tamil Novels | Jeyalakshmi Karthik Novels

 

சாரல் 70



 

கணவனின் குரலில் இருந்த ஏக்கத்தைத் தாண்டிய ஆதரவைத் தேடும் விதமான உணர்வு எழிலிசையை சட்டென்று அசைத்துப் பார்த்து விட்டது.

 

இதுவே அவன் சாதரணமாக வினவி இருந்தால் அவள் சிரித்துக் கொண்டு வேலையெல்லாம் முடிச்சிட்டு நீங்க என்கிட்ட ஓடி வாங்க என்று கேலி செய்திருப்பாள். ஆனால் இந்த நொடி அவன் தேடுவது மனைவியை மட்டுமல்ல தோள் சாயத் தோழியும், அரவணைக்க அன்னையும், தாங்கிக் கொள்ள தந்தையும் என்று அவளது தேவை அவனுக்குத் தேவை என்று புரிந்து கொண்டாள்.

 

அமைதியாக, "போய் நல்லா தூங்கி எழுங்க. காலைல உங்களுக்கு ரொம்ப ஃப்ரெஷ்ஷா இருக்கும். இப்போ சோர்வு தான் உங்களை இப்படி பேச வைக்குது. மாமா அத்தை ரெண்டு பேரும் நீங்க எப்ப வருவீங்கன்னு கேட்டுட்டு இருக்காங்க. அப்பறம் இன்னிக்கு மதியம் ட்ரிப் இர்ரிகேஷன் செட் பண்ண வந்தாங்க. இன்னும் அந்த வேலை முடியல" என்று அவள் பேசிக்கொண்டே போக ஏனோ ரவியின் மனம் வருத்தம் கொண்டது.

 

தன் மனைவிக்கு ஏற்கனவே நிறைய பாரத்தை ஏற்றி வைத்து விட்டு இப்பொழுது அவளை இங்கே தேவையென்று தேடுவதும் அழைப்பதும் சற்றும் மனிதாபிமானம் இல்லாத செயலாகத் தோன்றியது. ஆனால் ஆசை கொண்ட மனம் அவள் அருகாமைக்கு ஏங்கியது.

 

"என்னங்க நான் சொன்னது கேட்குதா? இல்லயா? வேலைக்கு ஆளுங்களை தினக்கூலியா இல்லாம மாச சம்பளத்துக்கு எடுத்துக்க முடியுமான்னு பிரஸிடென்ட் ஐயா உங்களை கேட்டு சொல்ல சொன்னாரு" என்றாள்.

 

"ஊருக்கு வந்ததும் அது என்னன்னு பார்த்து முடிவு செய்யலாம் இசை. ஆமா புகழ் ரெண்டு நாளா என்கிட்ட பேசவே இல்ல. ராகினி எதுவும் பிரச்சனை செய்தாளா?" என்று அங்கே அவன் விட்டு வந்த பின் என்ன ஆனதென்று கேட்காமல் போன மடமையை எண்ணி நொந்தபடி வினவினான்.

 

"புகழுக்கு வேலை கொஞ்சம் அதிகமா இருக்கு. அவன் சேலத்துல ஒரு கம்பெனி கூட சேர்ந்து ஏதோ மார்கெட்டிங் பண்ண அலஞ்சுகிட்டு இருக்கான். அவன் இப்போ பொறுப்பா இருக்கறத பார்த்து காம்ப்ளக்ஸ் ஓனர் தர்மா அண்ணன் அவன் தொழிலுக்கு ஏதோ முதலீடு பண்றேன் எனக்கு வருமானத்துல பத்து சதவிகிதம் கொடுன்னு சொல்லி இருக்காரு போல. நான் எங்க மாமா வந்ததும் கேட்டு சொல்றேன்னு சொன்னானாம். கொஞ்சம் முன்னாடி தான் அவன் வீட்டுக்கு போறதுக்கு முன்னாடி வந்து சொல்லிட்டு போனான்." என்றவள் சிறு தயக்கத்துக்கு பின்,

 

"ராகினி எந்த பிரச்சனையும் பண்ணல. எங்கம்மா தான் ஏதாவது அவளை ஏத்தி விட முடியுமான்னு பார்த்துகிட்டே இருக்காங்க. ரெண்டு தடவை நேர்ல போய் திட்டிட்டு வந்துட்டேன்" என்றாள் எரிச்சலாக.

 

"சரி விடு இசை தெரிஞ்ச விஷயம் தானே!" என்றவன் அதற்கு மேல் பேசாமல் அமைதியாக இருந்தான்.

 

"சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க. நான் நாளைக்கு பேசுறேன். கொஞ்சம் வேலை இருக்கு" என்று அவள் கூறிவிட்டு துண்டித்து விட்டாள்.

 

கைபேசியை பார்த்தபடி இருந்த ரவியின் மனதில் இந்த நொடி பறந்தேனும் அவள் மடி சேர மாட்டோமா என்று ஏக்கமாக இருந்தது.

 

அவன் ஒவ்வொரு பணிக்கும் ஒவ்வொரு வல்லுநர், அல்லது திறமையான கம்பெனி தேர்ந்தெடுத்து அட்டவணை போட்டு வைத்திருந்தான். அதை ஒவ்வொன்றாக செயல்படுத்த கால அட்டவணையும் போட்டு வைத்திருந்தான்.

 

அவன் சென்னை கிளம்பியதும் எழில் அந்த அட்டவணையை அப்படியே ஒதுக்கி விட்டு ஒவ்வொரு பணியையும் அடுத்தடுத்து நிறைவேற்றி வருகிறாள். அவன் இருந்து செய்தால் கூட நாளை மீதி வேலை பார்ப்போம் என்று ஒத்தி வைத்திருப்பான். ஆனால் அவளோ சளைக்காமல் அனைத்தையும் செய்து வருகிறாள். அவளை நினைக்க நினைக்க நெஞ்சு நிறைந்து போனது ரவிக்கு.

 

இங்கே எழிலோ பரபரப்பாக அங்கும் இங்கும் சுழன்று கொண்டிருந்தாள்.

 

"என்னம்மா மருமகளே என்ன திடீர் சூறாவளியா மாறிட்ட?" என்று ரகுராம் அவளிடம் வந்ததும்,

 

"பெரிய மாமா நீங்க எனக்கு ஒரு சின்ன உதவி பண்ணனும்" என்று கெஞ்சுதலாக கேட்க,

 

"கேள்வி கேட்டா பதில் சொல்லணும், உதவி கேட்க கூடாது." என்று கிண்டல் செய்தவர் என்னவென்று வினவினார்.

 

"காலைல ஆறு மணிக்கு அதோ அங்க இருக்குற ஸ்விட்சை ஆன் பண்ணி விடணும். ஒன்றரை மணி நேரத்துக்கு அப்பறம் அணைக்கணும். நாளைக்கு மதியம் இப்ப முடிச்ச ட்ரிப் சிஸ்டம். அதான் சொட்டு நீர் பாசன குழாய் எல்லாத்தையும் மோட்டார்ல கனெக்ட் பண்ணி ஆட்டோமேட்டிக் டைமர் வச்சு கொடுக்க ஆள் வருவாங்க. அதை பார்த்துக்கணும்." என்று கூற,

 

"ஏம்மா நாளைக்கு உனக்கு டவுன்ல வேலை இருக்கா போகணுமா?" என்று சந்தேகமாக அவர் வினவ,

 

"இல்ல மாமா. ஒரு முக்கியமான வேலையா நான் சென்னை போகணும். வந்ததும் விலாவரியா சொல்றேன், பிளீஸ்!" என்று கெஞ்ச,

 

"அட செய்ங்க மாமான்னா செய்ய போறேன். இதுக்கு எதுக்கு கெஞ்சல் எல்லாம்?" என்று அவளைத் தட்டிக் கொடுத்தவர்,

 

"தனியா போயிடுவியா இல்ல அத்தையைக் கூட்டிட்டு போறியா?" என்று அக்கறையாக வினவ,

 

"சமாளிச்சிடுவேன் மாமா. நாளைக்கு நைட் இல்லன்னா மறுநாள் காலைல வந்துடுவேன்" என்றவள்,

 

"நான் அப்பா கிட்டயும் புகழ், ராகினி கிட்டயும் சொல்லிட்டு அரை மணி நேரத்துல கிளம்பணும் மாமா"

 

சொல்லிவிட்டு நேராக புகழ் வீட்டுக்குள் நுழைய, அங்கே ராகினி புகழுடன் சண்டை போட்டுக் கொண்டிருப்பதைக் கண்டவள் சங்கடத்துடன் நின்றாள்.

 

"வாங்க அண்ணி” என்று அவளை வரவேற்ற ராகினி,

 

“நீங்களாவது சொல்லுங்க அண்ணி, கம்பெனி வச்சு ஏசி ரூம்ல உட்கார்ந்து வேலை பார்க்கறத விட்டுட்டு ஏதோ சேலத்தில் புரோடெக்ஷன் யூனிட் வைக்க போறாராம்.  யாரோ பணம் தருவாங்களாம். அவங்களுக்கு இவர் லாபத்துல பங்கு குடுக்கணுமாம். கேட்கவே கடுப்பா இல்லையா? நம்ம கிட்ட இல்லாத பணமா?" என்று பேசிக்கொண்டே போனவளை நிறுத்திய எழில்,

 

"இங்க பாரு ராகினி, அவனுக்கு என்ன தொழில் செய்யணும்னு நல்லாவே தெரியும். உனக்கு அந்த தொழில் பிடிக்கலன்னா அவனுக்கு சரியான காரணத்தோட சொல்லு, கூடவே வேற என்ன செய்யலாம், செஞ்சா என்ன பிரச்சனை வரும், அதை எப்படி சரி பண்றது? பணம்… நம்ம கிட்ட இப்ப அது அதிகமா இல்ல. நீ முதல்ல அதை புரிஞ்சுக்கணும்.

 

உங்க அண்ணன் இப்போ இங்கே செய்யறது எல்லாமே ஏற்கனவே திட்டம் போட்டு பணம் ஒதுக்கி செய்யறது. கடன் இல்லாம. ஆனா புகழ் கிட்ட அப்படி எந்த திட்டமோ பணமோ இல்ல. அப்ப யோசனை சொல்ற நீ தான் எல்லாத்தையும் சரியா சொல்லணும். அவனோடது தப்புன்னு சொல்றது மட்டும் உன் கடமை இல்ல. அதை சரி பண்ணி கொண்டு போகற வழி உனக்கு தெரியணும். இல்ல நீ அதை தெரிஞ்சுக்கணும். கொஞ்ச நாளா அவன் அதிகம் வெளில வேலையா போறான்.

 

அப்ப நீ போயி கடையை கவனி. அப்ப அங்க உள்ள தொழிலும் பிரச்சனையும் உனக்கு புரியும். வந்து போற மனுஷங்களை படி. அவங்க மனசுல நல்ல இடம் பிடி. அது உங்க தொழிலுக்கு உதவியா இருக்கும். அவனை குறை சொல்றத விட்டுட்டு அவனுக்கு துணையா தோள் கொடு.

 

அதே போல அவன் சிலதை செய்யாதன்னு சொன்னா, ஏற்கனவே அதுல அனுபவம் உள்ளதால சொல்றான்னு அதைக் கேட்டு நீயும் தொழிலை கவனி. ஒரு மாசம் கழிச்சு அவன் இப்போ ஏதோ சொன்னான் அதுல உனக்கு விருப்பம் இல்லன்னு சொன்னல்ல, அதே முடிவுல நீ இருந்தா அவன் அதை செய்ய மாட்டான். அதுக்கு நான் பொறுப்பு." என்று நீளமாக பேசி முடித்தாள்.

 

அவளிடம் ஒரு சொம்பு தண்ணீரை நீட்டிய புகழ், "இவ எந்த பிரச்சனையும் பண்ண மாட்டான்னா நீ சொன்னத செய்யறதுல எனக்கு பிரச்சனை இல்லக்கா" என்று தன் சம்மதத்தைக் கூறினான்.

 

சற்று நேரம் அமைதியாக யோசித்த ராகினி, "நான் போறேன் அண்ணி. ரொம்ப பொறுமையா இருப்பேன்னு கண்டிப்பா சொல்ல முடியாது. ஆனா புகழுக்காக முயற்சி பண்றேன். பிடிக்கலன்னா போக மாட்டேன். அவன் செய்ய நினைக்கிற எதையும் தடுக்கவும் மாட்டேன்." என்று ராகினி கூறியதும் அவளை அணைத்துக் கொண்டாள் எழிலிசை.

 

"மனைவி கணவனுக்கு வீட்ல அம்மாவா, அப்பாவா, மற்ற எல்லா உறவாவும் இருக்கறது போல தேவைப்பட்டா தொழில்ல தோழியா,மந்திரியா இருந்து தாங்கலாம். நமக்காக அவங்க ஓடும்போது கூட ஓடுறதுல தப்பில்ல ராகினி." என்று அவள் நெற்றியில் முத்தமிட்டாள்.

 

"இதை நீங்க ரெண்டு மாசத்துக்கு முன்னாடி சொல்லி இருந்தா கண்டிப்பா கேட்டு இருக்க மாட்டேன் அண்ணி. நீங்க அண்ணனுக்கு எப்படி உதவியா இருக்கீங்கன்னு நான் பாக்கறேன்ல. நீங்க இல்லன்னா இங்க உள்ளதுல பாதி கூட அண்ணன் செஞ்சிருக்க முடியாது." என்று அவளை பெருமை பேச,

 

"ச்சு, அப்படி சொல்லாத.” என்று அதட்டி,

 

“சொல்ல வந்ததை மறந்துட்டேன். நான் அவசர வேலையா ஊருக்கு போறேன். நாளைக்கு ஒரு நாள் மட்டும் அத்தை மாமாவுக்கு சமையல் பண்ணிக் கொடு. அத்தையை சமைக்க விடாத. இங்க வரும்போது தான் அவங்க ரெஸ்ட் எடுப்பாங்க." என்று கண்டிப்புடன் கூறிவிட்டு இருவரிடமும் விடைபெற்று தந்தையைக் காணச் சென்றாள்.

 

வாசல் திண்ணையில் சரோஜா அமர்ந்திருக்கக் கண்டு ஏதும் பேசாமல் உள்ளே சென்று தந்தையை தேட, அவர் பின்னால் இருப்பதாக குரல் கொடுக்க அதே தகவலை அவரிடம் பகிர்ந்து விட்டு,

 

"ராகினி மறந்தாலும் நீங்க மறக்காம அவளுக்கு நினைவு படுத்துங்க. இல்லன்னா பக்கத்து தெரு பொன்னம்மா அத்தை கிட்ட மூணு வேளைக்கு சமையல் செய்து தர சொல்லி இருக்கேன். நீங்க தயாரா வாங்கி வச்சிடுங்க. அவ சமையல் பண்ணிட்டா அவளே கொடுக்கட்டும். இல்லன்னா நீங்க கொடு. என் மாமனார் மாமியாரை பார்த்துக்கோங்க பா." என்று தந்தையிடம் ஆயிரம் பத்திரம் சொல்லிவிட்டு கடைசி பஸ் ஏறி அவள் பேருந்து நிலையம் வந்து சென்னை பேருந்தில் ஏறியவள் மனம் தன் கணவனை சந்திக்கப் போகும் ஆனந்தத்தில் அல்லியாக மலர்ந்து இருந்தது.


 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சாரல் 1

சாரல் 2 | Tamil Novel | Jeyalakshmi Karthik Novels

சாரல் 7 | Tamil Novel | Jeyalakshmi Karthik Novels