சாரல் 64 | Tamil Novels | Jeyalakshmi Karthik Novels
சாரல் 64
தனக்கான உடைகளை
எடுத்து அடுக்கும் மனைவியை பெருமிதமும் ஏக்கமுமாய் பார்த்தபடி அமர்ந்திருந்தான் ரவீந்தர்.
அவன் பார்வை
வீச்சை தாள முடியாமல், “சன்ஷைன்” என்று அவன் மீது ஒரு துண்டை வீசி எறிந்தாள் எழில்.
அவன் அதற்காகவே
காத்திருந்தவன் போல அவளை பின்புறமாக அணைத்துக் கொண்டு,
"அவசியம்
போகணுமா? அதுவும் தனியா?" என்று அவளது செவிமடல்களை தன் உதடுகளால் உரசியபடி வினவ,
எங்கோ பறந்து
சென்ற மனதை கட்டி நிறுத்திய எழில் தன் கணவனை முன்னே இழுத்து அமர்த்தினாள்.
"என்னப்பா
ஏதோ குழந்தை மாதிரி பிஹேவ் பண்றீங்க? இங்க உள்ளதை வீடியோ எடுத்து போட்டதுக்கு, வேலை
செஞ்சதுக்கு சின்ன பிரேக் மாதிரி நெனச்சு சென்னை டிரிப் போயிட்டு வாங்க." என்று
அவன் சிகையை வருட,
"நான்
போக மாட்டேன்னு சொல்லல இசை... நீயும் வா!" என்று குழந்தையாக சிணுங்கினான்.
"எவ்வளவு
மெச்சூர்டு பர்சன் நீங்க. ஏதோ விடலை பையன் மாதிரி நடந்துக்கறது நல்லாவே இல்ல."
என்று பொய்யாய் கோபம் காட்டி கைகளைக் கட்டிக்கொண்டு அவனுக்கு எதிர்ப்புறம் திரும்பி
நின்றாள்.
அவள் கோபத்தை
சற்றும் கண்டுகொள்ளாமல் அவளை இடையோடு அணைத்து அவள் முதுகில் முகம் புதைத்தபடி,
"எவ்வளவு
பெரிய அறிவாளியும் அடங்கி, இறங்கி குழந்தையா மாறி நிக்கிறது அவன் பொண்டாட்டி, பிள்ளைங்க
கிட்ட மட்டும் தான் இசை. எனக்கு சென்னை போக இஷ்டம் இல்லன்னு நான் சொல்லல. என்ன
பண்றதுன்னு தெரியல, நீயும் கூட வந்தா நல்லா இருக்கும்னு சொல்றேன்." என்று தன்னை
அவளுக்கு விவரித்தான்.
"இங்க
இருக்கறதெல்லாம் யாரு கவனிக்கிறது சன்ஷைன்? நீங்க ஜாலியா பழைய மாதிரி வீடியோ எடுத்துகிட்டே
இந்த டிரிப் போயிட்டு, வேன்லயே தங்கி, அம்மா அப்பா பத்தி முழுசா விசாரிச்சு தெரிஞ்சுக்கோங்க.
நேர நேரத்துக்கு சமைச்சு சாப்பிடுங்க. வெளில சாப்பிட போனா வீடியோ எடுத்து ரிவ்யூ போடுங்க.
ஜாலியா ஒரு வாரம் என்ஜாய் பண்ணுங்க சன்ஷைன்." என்று அவன் கரங்களை விலக்கி அவன்
மடியில் அமர்ந்து கூறினாள்.
அவனும் அவள்
பேச்சுக்கு தலையசைத்து விட்டு பின் யோசனை வந்தவனாக,
"அச்சோ
பெரியப்பாவுக்கு தெரிஞ்சா கோவப்படப் போறாரு." என்று வேகமாக தன் செல்போனை எடுத்து
அவருக்கு அழைக்க இருந்தவனை தடுத்து நிறுத்திய எழில்,
"மாமா
அதெல்லாம் தப்பா நினைக்க மாட்டாரு. நீங்க போயிட்டு வாங்க. வந்ததும் சொல்லிக்கலாம்.
இல்லன்னா அத்தை உங்களை நினைச்சு ரொம்ப வருத்தப்படுவாங்க." என்று சமாதானம் செய்து
அவள் தள்ளாத குறையாக அவனை கேம்பர் வேனுக்கு அழைத்துச் சென்று வழியனுப்பி வைத்தாள்.
"இசை,நான்
ஊருக்கு போறத பத்தி மாமா, புகழ் யார் கிட்டயும் சொல்லவே இல்ல. ஈவினிங் சொல்லிட்டு கிளம்பவா?"
என்று இறங்க எத்தனித்தான்.
"இது ஒரு
பிஸ்னஸ் டிரிப். இவ்வளவு சொன்னா போதும். அதை அவங்களுக்கு நான் சொல்லிக்கிறேன். நீங்க
கிளம்புங்க" என்று அவனை மீண்டும் வண்டியில் அமர்த்தி கதவை மூடினாள்.
அவளை ஏக்கமாய்
பார்த்தபடி வாகனத்தை நகரத்தியவன், அவள் கையசைக்கும் தருணம், ஜன்னல் வழியாக அவளை இழுத்து
அவளது இதழில் முத்தமிட்டான்.
அவள் அவனை தோளில்
அடிக்க, "ஏய் அது என்னோட சொத்து. திரும்பி வர்ற வரைக்கும் எனக்கு எனர்ஜி
வேண்டாமா?" என்று அவளை விடுவித்து விட்டு சென்னை நோக்கி புறப்பட்டான்.
சென்னை அவனுக்கு
பல அதிர்ச்சிகளை வைத்துக்கொண்டு காத்திருக்கிறது என்பதனை அவன் அறியவில்லை.
கணவனை அனுப்பிவிட்டு
வீட்டினுள் நுழைந்தவள் மனம் ஒருபுறம் கணவனை எண்ணி நீராய் தளும்ப, தீயாய் மறுபுறம் அன்னையின்
செயலில் தகித்தது.
அவளும் கோபம்
கொண்டு தாயை நாலு வார்த்தைகளில் அவர் செயலை கேள்வியாய் கேட்டுவிட முடியும். ஆனால் அதனால்
விளையப்போகும் பயன் தான் என்ன? என்று எண்ணியவளுக்கு முகத்தில் விரக்தியாக புன்னகையே
அரும்பியது.
புடவை நுனியை
உதறி இடுப்பில் சொருகியவள், தாயின் எண்ணத்தை உதறி பணிகளைத் தலைக்குள் ஏற்றிக்கொண்டாள்.
தினப்படி வேலைகளில்
ஈடுபட்டவள், கோழி காடை போன்றவைகளை இன்று அனுப்பி வைக்கக் கோரி கேட்டதை முற்றிலும் மறந்து
போயிருந்தாள்.
தற்சார்பு வாழ்வியலில்
உணவின் பங்கு மிக மிக முக்கியமானது. செடி கொடி காய் கனிகள் போல மாமிச உணவும் வெளியே
தேடிச் சென்று வாங்கத் தேவையில்லாதவாறு அவர்களே வளர்த்து அதனை பெருக்கிக்கொள்ள வேண்டும்.
அதற்காக கோழி,
காடை வகைகளை அன்று அனுப்பி வைக்கும்படி ரவியின் யூட்யூப் நண்பர் பண்ணை வைத்திருப்பதால்
கேட்டிருந்தாள். அவரும் ஒரு மினி லாரியில் பத்து கோழி, இரண்டு சேவல், ஆறு காடைகள் என்று
அதனை வைத்துப் பராமரிக்கும் கூண்டுகளோடு கொண்டு வந்து இறக்கி வைத்தார்.
அவரை இன்முகமாக
வரவேற்று ரவி வெளியூர் சென்றிருப்பதைக் கூறிவிட்டு அவர் கொண்டு வந்தவைகளை இடம் பார்த்து
நிர்மாணித்து விட்டு அவருடன் பேசியபடி நடந்து வீட்டின் வாயிலுக்கு வந்தாள் எழில்.
"உண்மையிலேயே
இப்ப பல பேர் தற்சார்பு வாழ்க்கைக்கு மாறிட்டு வர்றாங்க மா. கொரோனா மனுஷனை நிறைய மாற்றிட்டு
போயிடுச்சு மா." என்று உணர்ந்து கூறியவர்,
"இவ்வளவு
இடம் இருக்குல்ல, அதுனால கொஞ்ச நாள் கழிச்சு கூண்டை எடுத்துட்டு அதுக்குன்னு மேய தனியா
ஒரு இடத்தை வேலி போட்டு கொடுத்து, தினமும் உங்க வீட்டு காய்கறி கழிவை அதோட ஓரமா உள்ள
இடத்தில கொட்டினா, புழு உற்பத்தியாகி இதுங்களுக்கு நல்ல சாப்பாடாவும் இருக்கும், அதோட
வளர்ச்சியும், முட்டையோட தரமும் கூட நல்லா இருக்கும்" என்று அவளுக்கு அறிவுரை
வழங்கி விட்டுப் புறப்பட்டார்.
அவரது வாகனம்
வாயில் கதவை தாண்டும் போது ராகினி எழிலிசை முன் வந்து நின்றாள்.
"ஏன் அண்ணி
அன்னைக்கு அண்ணன் பணம் இல்லன்னு சொன்னாரு. ஆனா ஏதேதோ புதுசா தொழில் பண்ண பணம் இருக்கு,
இப்போ இந்த கோழியெல்லாம் வாங்க பணம் இருக்கு. எனக்கும் புகழுக்கும் எது செய்யணும்ன்னாலும்
அண்ணன் கிட்ட பணம் இருக்காது. அப்படித்தானே? அவர் அப்படிப்பட்டவர் தான்னு இங்க வரும்போதே
எனக்கு தெரிஞ்சு போச்சு. ஆனா உங்க மேல நான் நிறைய நம்பிக்கை வச்சு இருந்தேன்."
என்று அவள் நிறுத்த,
"ஏன் மா
அந்த நம்பிக்கைக்கு இன்னிக்கு என்ன கேடு வந்தது?" என்று அவளைப் பாராமல் கோழிகளுக்கு
கொடுக்க தீவனத்தை எடுத்து அடுக்கிய கிண்ணத்தில் போட்டபடி வினவினாள்.
"என்ன
அண்ணி இப்படி கேட்டுட்டு இருக்கீங்க? உங்க அம்மா கூட அண்ணன் புகழுக்கு எதுவும் செய்யாம
இருக்கறத பார்த்து எனக்கு சப்போர்ட் பண்ணி பேசுறாங்க. ஆனா நீங்க எதுவும் பேசல, அண்ணன்
கிட்ட எனக்காக எதுவும் சண்டை போடல. நீங்களா அண்ணி இப்படி இருக்கறது?" என்று ராகினி
வருத்தம் போல வினவ,
"என் அம்மா
உன்கிட்ட வந்து இதைப்பத்தி பேசுறாங்கன்னா அவங்களுக்கு இனி கடன் கட்ட வேலைக்கு போக வேண்டிய
அவசியம் இல்ல, ஏன்னா பணத்தை உங்க அண்ணன் தான் கட்டிட்டார்ல...
‘சும்மா இருக்குற
மனசு சாத்தானோட பட்டறை’ன்னு சொல்லுவாங்க. சும்மா வீட்ல இருக்க முடியாம உன்னை வச்சு
வீட்டுக்குள்ள சண்டை மூட்ட எங்கம்மா பிளான் பண்ணிட்டு இருக்காங்க. சரி அதெல்லாம் கூட
விடு. அவங்க அப்படித்தான். ஆனா நீ... நீ என்ன பண்ணுற?
இங்க நாங்க
பண்ணுற எல்லாமே பிஸ்னஸ்ன்னு உனக்கு யார் சொன்னது? தற்சார்பு வாழ்க்கைன்னா என்னன்னு
உனக்கு ஏதாவது தெரியுமா? அதெல்லாம் கூட போகட்டும் நீ என்னை என்ன கேட்ட? நான் உனக்கு
சப்போட் பண்ணி உன் அண்ணன் கிட்ட சண்டை போடணுமா? எதுக்கு மா? அவர் கிட்ட உனக்காக நான்
பேசுற அளவுக்கு நீ எனக்கு என்ன செஞ்சிருக்க?" என்று எந்த வித குரல் வித்தியாசமும்
இல்லாமல் இயல்பாக பேசுவது போலவே எழில் கேட்டு வைக்க ராகினி ஸ்தம்பித்து நின்றாள்.

கருத்துகள்
கருத்துரையிடுக