சாரல் 59 | Tamil Novels | Jeyalakshmi Karthik Novels
சாரல் 59
மனதில் ஆயிரம்
கேள்விகள் இருந்தாலும் தன் வாழ்க்கை பயணத்தை அமைதியாக பயணித்துக் கொண்டிருந்தான் ரவி.
எழிலின் துணை
அவனுக்கு பெரும் பலத்தைக் கொடுத்தது. பண்ணைக் குட்டையின் பக்கத்தில் கீரை வைத்தது சில
நாட்களில் நல்ல பலனைக் கொடுத்தது.
புகழ் ரவிக்கு
உதவியாக மின் உபயோக பொருட்களுக்கான உதவிகள் அனைத்தையும் செய்து வந்தான்.
ரவி தற்சார்பு
வாழ்க்கை பற்றி கூறியதும் புகழுக்கு அது புதிதாக இருந்தது. அதிலும் அரசை எதற்கும் சாராமல்
நாமே வாழ்வது முடியும் காரியம் தானா என்ற சந்தேகம் அவனை ஆட்கொண்டது.
நாம் ஒவ்வொரு
விஷயத்திற்கும் அரசுக்கு வரி செலுத்தி வருகிறோம். ஆனால் அதன் சலுகைகளை அனுபவிக்காமல்
தானே உற்பத்தி செய்து வாழ்வது எவ்வகையில் சாத்தியம் என்று அவன் புரிந்து கொள்ள இயலாமல்
தவித்தான்.
அன்று கடையில்
சில முக்கிய வேலைகளை முடித்துவிட்டு மாலை ஏழுக்கே வீடு வந்து சேர்ந்திருந்தான். வந்தவன்
நேராக தன் வீட்டிற்குச் செல்லாமல் வாசலில் மடிக்கணினியுடன் அமர்ந்திருந்த ரவியிடம்
சென்று அமர்ந்து கொண்டான்.
"மாமா.
உங்க அடுத்த பிளான் என்ன?” என்று அவன் வினவ,
"என்ன?
பெருசா ஒன்னும் இல்ல. உங்க அக்கா சில ஐடியா எல்லாம் சொல்லி இருக்கா. அதை ஒவ்வொண்ணா
செய்யணும். முக்கியமா அடுத்து பவர் சோர்ஸ் ரெடி பண்ணனும்." என்றான் தாடையை தடவியபடி.
"ஏன் மாமா,
அதான் நம்ம இடத்துக்கு தமிழ்நாடு மின்சார வாரியத்தில் இருந்து கனெக்ஷன் இருக்கே?"
என்றான் புகழும் புரியாமல்.
"புகழ்,
தற்சார்பு வாழ்க்கைன்னா வெறும் உணவும் தங்கும் இடமும் மட்டும் இல்ல. நமக்கு எப்ப பணத்தோட
தேவை ஏற்படுது சொல்லு" என்றான் மடிக்கணினியை மடித்து வைத்தபடி.
"வீட்டு
வாடகை கொடுக்க, சமைக்க தேவையான பொருள் வாங்க, நமக்கு தேவையான ட்ரெஸ், இதுகெல்லாம்!"
என்றான் சாதாரணமாக.
"அவ்வளவு
தானா? குடிக்க தண்ணி வேணும் புகழ் முதல்ல…" என்றான் ரவி சிரித்தபடி.
"அதான்
உங்க ஓடை இருக்கு, போதாத குறைக்கு போர் போட்டு வச்சிருக்கோம், அதுல வராத தண்ணியா?"
"அப்ப
தண்ணிக்கு வரி போடுமே அரசாங்கம்? அதுக்கு பணம் கட்ட சம்பாதிக்கணும்ல? ஈ.
பி பில் கட்ட சம்பாதிக்கணும். ஆனா அதை எல்லாம் அரசாங்கத்தோட துணை இல்லாம நாமளே
உற்பத்தி பண்ணிக்கும் போது அரசாங்கம் நமக்கு பணம் கொடுக்கும்.” என்றான் கையில இருந்த
பேனாவைத் தட்டியபடி.
"புரியல
மாமா" என்றான் புகழ்.
"இப்போ
மாநிலத்துல அதிகப்படி மின்சாரம் செலவாகுது, பணத்தை ஏத்தவும் முடியாத அளவுக்கு விலை
ஏற்கனவே ஏறி இருக்கு. அந்த சூழல்ல அரசு என்ன செய்யும்? வேற வழி இல்லாம கரெண்டை ஒரு
நாளைக்கு இவ்வளவு நேரம்ன்னு அணைச்சு வைக்கும். இதனால நம்ம என்ன வேலையில இருந்தாலும்,
தொழில் செஞ்சாலும் பாதிக்கப்படுவோம். அதுவே நமக்கு தேவையான மின்சாரத்தை நாமளே உற்பத்தி
செய்யும்போது, அரசுக்கு நாம சுமை இல்ல. இதுக்கு அரசாங்கம் நமக்கு சப்சிடி கொடுக்கும்.
மாற்று மின் சக்தியை நாம பயன்படுத்தி மின் வாரிய மின்சாரத்தை உபயோகிக்காம இருந்தா நமக்கு
ஈ. பி பணம் கட்டவேண்டிய வேலை இல்ல." என்றான் கால்களை பக்கத்தில் உள்ள நாற்காலியில்
போட்டபடி.
"மாற்று
மின் சக்தின்னா, நாம வீட்ல என்ன உற்பத்தி பண்ண முடியும்? பழைய கெமிஸ்ட்ரி பாடத்துல
வர்ற மாதிரி உருளைக்கிழங்குல கடிகாரம் செஞ்சு வச்சுக்கலாமா?" என்றான் அரசின் மீது
உள்ள கோபத்தில்.
"கோபப்பட்டு
ஆகப்போறது எதுவும் இல்ல புகழ். இப்போ சோலார் பவர் பிளாண்ட் போட்டா, இருபத்தி ஐந்து
சதவிகித இன்ஸ்டலேஷன் செலவை கவர்மென்ட் ஏத்துக்கும். அதே போல நமக்கு தேவையான அளவு போக
உள்ள மின்சாரத்தை நம்மளால கவர்மென்ட்டுக்கு விற்பனை செய்ய முடியும்." என்றான்
பொறுமையாக.
"மாமா
சோலார் எல்லாம் என்ன விலை தெரியுமா?" என்றான் எரிச்சலுடன்.
"விலை
தான். ஆனா ஒரே தடவை முதலீடு. சரியா செஞ்சா, நமக்கு ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவை வர்ற
கரன்ட் பில் வராது. கூடவே லாபமும் வரும். இது மட்டும் தன் ஒரே வழின்னு இல்லயே புகழ்.
நீ ஒரு எலக்ட்ரானிக் என்ஜினியர் உனக்கு தெரியாதா? வின்ட் மில் வச்சா சோலாரை விட விலை
கம்மி, கூடுதல் மின்சாரம் வேற கிடைக்கும். அது போக ஹைட்ரோ பவர் பிளாண்ட். வாய்ப்புகள்
நிறைய இருக்கு. ஆனா அதை செயல்படுத்தக் கூடிய அறிவை நம்ம படிப்பு நமக்கு வழங்கல, அதான்
உண்மை!" என்றான் ரவி கசப்புடன்.
"என்ன
மாமா சொல்றீங்க?" என்று வேகமாக அவனருகில் வந்தான் புகழ்,
"ஆமா புகழ்,
வேகமா ஓடக்கூடிய நீர்ல மின்சாரம் தயார் செய்ய முடியும், சின்னதா பிளாண்ட் போட்டு
ஓடைக் கரையில ஆரம்பிக்கலாமான்னு யோசனை செய்யறேன். அதே போல ஒரு கம்பெனி சின்னதா வீடுகளுக்கு
ஏத்த மாதிரி காற்றாலை செஞ்சு விற்பனை செய்யறாங்க. அவங்க கிட்ட நம்ம இடத்துல எங்கெங்கே
ஒரு அளவுக்கு பெருசா, நல்ல வருமானம் வர்ற வகையில வைக்க முடியும்னு கூப்பிட்டு கேட்டு
வைக்க பிளான் பண்ணி இருக்கேன்." என்றான் யோசனையாக.
"நல்ல
ஐடியா தான் மாமா. பண்ணுங்க. எனக்கு இது சம்மந்தப்பட்ட படிப்பு படிச்சும் இதை பத்தி
அவ்வளவா தெரியல. முதல்ல நான் என்னைத் தெளிவு படுத்திக்கணும்" என்று கூறிவிட்டு
விடைபெற்றான்.
அவன் யோசனையாக
போவதைக் கண்டு ரவிக்கு பாவமாக இருந்தது. நம் இளைஞர்களுக்கு நிறைய அறிவு இருக்கிறது
ஆனால் அதை எவ்வழியில் எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்ற தெளிவை நமது கல்வி வழங்கவில்லை
என்று வருந்தினான்.
இரவு உணவுக்கு
ராகினி ஏதோ புதிய உணவு வகை செய்து வைத்திருக்க, கடனே என்று அதனை தின்றுவிட்டு கண்டெய்னர்
வீட்டின் மொட்டை மாடியில் சென்று வானத்தைப் பார்த்து படுத்துக் கிடந்தான் புகழ்.
அவனைக் காண
வந்த ராகினி காரணம் கேட்க,
"நான்
என்ன பண்றேன், என்ன பண்ண போறேன் எனக்கு இன்னும் சரியா புரியல ராணி. உங்க அண்ணனை பாரு.
இந்த வயசுல அவருக்கு அடுத்து என்ன செய்யணும், எப்படி யாரையும் அண்டாம பிழைக்கணும்ன்னு
தெரிஞ்சு இருக்கு. ஆனா எனக்கு இப்பவும் தெரியல. அவர் எங்கம்மாவுக்கு கொடுத்த காசை கூட
உண்மையை சொல்லி அவங்க கிட்ட ஒத்துக்குற தைரியம் கூட எனக்கு இல்ல. அவர் நிழல்ல நிக்கிறேன்.
எப்ப நானா யோசிச்சு எல்லாம் செய்ய போறேன்னு தெரியல" என்று வருந்தினான்.
வீட்டைத் தாண்டி
இந்த கஷ்டங்கள் எல்லாம் சற்றும் பழகி இராத ராகினிக்கு புகழ் வருந்துவது மட்டுமே புரிந்தது.
அதுவும் அவனை தன் அண்ணனுடன் இணைத்து அவனே தாழ்த்திக் கொள்கிறான் என்று மட்டுமே புரிந்தது.
அவன் மனதில் இருந்த உள்ளார்ந்த வருத்தம் புரியவில்லை.
"விடு
புகழ். அண்ணன் என்ன பெரிய புடலங்கா. நீ அவனை விட பெருசா வருவ. உன் கடை பெரிய கம்பெனியா
மாறும் பாரு" என்று சமாதானம் கூறியவளுக்கு அதை சாதிக்க எத்தனை திறமை, பொறுமை,
அனுபவம், புத்தி கூர்மை வேண்டும் என்று எதுவும் தெரியவில்லை.
ஏதோ நினைத்து
பெரிய பிரச்சனைக்கு விதை போடும் முடிவுக்கு அவளை அறியாமல் வந்தாள் ராகினி.

கருத்துகள்
கருத்துரையிடுக