சாரல் 54 | Tamil Novels | Jeyalakshmi Karthik Novels
சாரல் 54
புகழும் ராகினியும்
ரகுராமுடன் கிளம்பிச் சென்று விட, ரவி யோசனை முகமாக அவ்விடத்தில் ஏற்கனவே ஆரம்பித்திருந்த
வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தான்.
காலையில் வீட்டு
வேலைகளை முடித்த எழில் அமைதியாக ரவியின் அருகில் வந்து நிற்க, தருவிக்கப்பட்ட ஒரு புன்னகையை
அளித்தவன்,
"சாப்பிட்டியா
இசை?" என்று அன்புடன் வினவினான்.
"நான்
சாப்பிடுறது எல்லாம் இருக்கட்டும் சன்ஷைன், நீங்க ஏன் இப்படி இருக்கீங்க? உங்க மனசை
எது போட்டு இப்படி அறிச்சுக்கிட்டு இருக்கு? என்கிட்ட சொல்லுங்க." என்று அவனது
வலது கரத்தைப் பற்றி தன் கைகளுக்கு இடையில் வைத்து அதனை கன்னத்தோடு வைத்தாள்.
"ஒன்னும்
இல்ல இசை" என்று சமாளிப்பாக ரவீந்தர் உரைக்க,
"ஏன் பா
நான் உங்க மனசுல உள்ளதை புரிஞ்சுக்க மாட்டேன்னு உங்களுக்கு தோனுதா? அப்படியே இருந்தாலும்
கண்டிப்பா ஆறுதலா இருப்பேன், உங்க மனபாரம் இறங்கும்ல?" என்று மேலும் குரலில் மென்மையைக்
கூட்டி வினவினாள்.
ஆழ்ந்த பெருமூச்சை
வெளியிட்ட ரவி, "நான் இங்க இடம் வாங்கிட்டு வந்தது ஒரு எண்ணத்துல, அது நடக்குமான்ணு
இப்போ தெரியல இசை" என்று மனம் வலிக்கக் கூறினான்.
"நேத்து
சொன்னிங்க தானே சேனலுக்காக தான் இங்க வந்ததா, அதை செய்ய வேண்டியது தானே சன்ஷைன்? அதுல
இப்போ என்ன பிரச்சனை" என்று அவனுக்கு எதிரே அமர்ந்து அவன் கண்ணோடு கண் நோக்கினாள்.
"தற்சார்பு
வாழ்க்கை பத்தி உன் அபிப்பிராயம் என்ன இசை?" என்று ஆர்வமாக வினவினான் ரவி.
"வாழ முடியாத
விஷயம் கிடையாது. ஆனா இன்னிக்கு இருக்குற மாடர்ன் உலகத்துல தற்சார்பு வாழ்க்கை கொஞ்சம்
சிரமம் தான். ஆனா பழகிட்டா வாழ ரொம்ப எளிமையாவும் சவுகரியமாவும் இருக்கும்."
என்று அவள் மனதில் நினைத்ததைக் கூறினாள்.
"நான்
இந்த இடத்தை வாங்கும் போது இதை ரெடி பண்ணி ஒரு தற்சார்பு வாழ்க்கை முறைக்கு போகணும்
தான் நெனச்சு வந்தேன்." என்று வருத்தம் பொங்கக் கூறினான்.
"ஏன் இப்போ
வாழ முடியாதா?" என்று எழில் புரியாமல் வினவ,
"நான்
ஆசைப்பட்டு செய்யறது வேற இசை, உன்னை கட்டாயப்படுத்தி செய்ய வைக்கிறது வேற இல்லையா?"
என்றான் யோசனையாக.
"அது எனக்கு
பிடிக்காம இருந்தா தானே பிரச்சனை? யாருக்கு தான் நாம அடுத்தவங்களை எதிர்பார்க்காம நம்மளே
நம்மளுக்கு வேண்டியதை உற்பத்தி செய்து நல்லா வாழ விருப்பம் இருக்காது சொல்லுங்க?"
என்று சிரித்த முகமாக வினவியதும் ரவி முகத்தில் மகிழ்ச்சியின் மின்னல்.
"நிஜமா
தான் சொல்றியா இசை? எனக்காக சொல்லல தானே? ஏன்னா இந்த கல்யாணம் அதை தொடர்ந்த பல விஷயமும்
என் விருப்பப்படி தான் நடந்து இருக்கு. இதையும் உன் மேல நான் திணிச்சா வாழ்க்கை முழுக்க
நீ அதை சுமக்க வேண்டி இருக்கும்" என்று அவன் அவள் கைகளை இறுக்கமாகப் பற்றிக்கொண்டு
கேட்டான்.
"இங்க
பாருங்க பா, எனக்கு வாழ்க்கையை இப்படித்தான் வாழணும்னு தனிப்பட்ட கனவு இல்ல. ஆனா உங்க
கையைப் பிடிச்சுகிட்டு சந்தோஷமா வாழ நிறைய ஆசை இருக்கு. உங்க கனவு ஒன்னும் தப்பானதோ
முடியாததோ இல்லையே! என்ன உங்க ஐடியா? அதை மட்டும் சொல்லுங்க நானும் ஜாலியா உங்க
கூட வர்றேன்." என்று சிரித்தாள் அவனது இசை.
அவளது இந்த
பதிலை ரவி சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. ஏனெனில் தற்சார்பு வாழ்க்கை என்பது அவ்வளவு
எளிதான வாழ்க்கை முறை கிடையாது.
வாழ்வின் தேவைகள்
அனைத்தையும் நமக்கு நாமே உற்பத்தி செய்து கோடு போட்டு வாழும் ஒரு வாழ்க்கை முறை. பணம்
சம்பாதிக்க தொழில் செய்வது ஒரு வகை எனில் நாம் வாழ தேவையான அனைத்தையும் நாமே உருவாக்கிக்
கொள்வதும், நமது வாழ்விடம் ஒரு விதத்தில் நமது தினச்சுழற்சிக்கு தேவையான அனைத்தையும்
உள்ளடக்கியதாக அமைத்துக் கொள்வது அவ்வளவு எளிதானது அல்ல. ஆனால் சாத்தியமில்லாத ஒன்றும்
அல்ல.
அவளது பதிலில்
மகிழ்ந்த ரவி அவளை அப்படியே தூக்கிச் சுற்றியதும் வெட்கத்தில் அவனது தோளை இறுக்கமாகப்
பற்றிக்கொண்டவள் நாணத்தால் தலையை தாழ்த்திக்கொள்ள அவளது இடையில் குறுகுறுப்பூட்டி மேலும்
அவளைத் துள்ள விட்டான் அவளவன்.
அவளை அவன் கீழே
இறங்கியதும் அவனது மார்பில் சாய்ந்து கொண்டவள்,
"திடீர்னு
இப்படி பண்ணாதீங்க, ஒரு மாதிரி இருக்கு" என்று நாணிட,
"ஓய்,
ஒரு புருஷனா நான் இன்னும் உன்கிட்ட எந்த உரிமையும் எடுத்துக்கவே இல்ல. இப்போ தான் ஏதோ
தூக்கினேன். அதுக்குள்ள பண்ணாதீங்க வைக்காதீங்கன்னு" என்று கோபமாக முகத்தை வைத்துக்
கொண்டு ரவி அவளை சீண்டினான்.
அவனது மனம்
தெரிந்த அவளோ அவனது பேச்சை காற்றில் பறக்க விட்டு,
"சரி சொல்லுங்க,
இடத்தைப் பொறுத்த வரை இப்போ உங்க ஐடியா என்ன?" என்றாள் ஆர்வமாக.
ரவியும் விளையாட்டை
கைவிட்டவனாக,
"இந்த
கன்டெய்னர் வீடு டெம்ப்ரவரி தான் இசை. ஒரு தரமான மரபு வீடு ஒன்னு கட்டணும், காய்கறி,
கீரை எல்லாமே வளர்க்கணும், கவர்மென்ட் கரெண்டை நம்பி இருக்காம நமக்கு தேவையான பவர்
சோர்ஸ் நாமளே தயார் செய்துக்கணும், நம்ம துணி, ரொம்ப ரொம்ப தேவையான பொருள் மட்டும்
தான் பணம் கொடுத்து வெளில வாங்கணும். மத்தபடி எல்லாமே நாம இங்கேயே ஏற்படுத்தியதா இருக்கணும்"
என்று தன் மனதில் இருந்ததை கூறினான் ரவி.
"இதையெல்லாம்
வீடியோ எடுத்து சேனல்ல போடணும், அதை விட்டுட்டீங்க?" என்று எழில் வம்புக்கு இழுக்க,
"ஏய் கிண்டல்
பண்றியா? இதெல்லாம் கேட்கவே மலைப்பா தான் இருக்கும். எனக்கே தெரியும். இவ்வளவு நாளா
டிரவலாக் போட்டுட்டு இருந்தேன், இனிமே டிராவல் பண்றது அவ்வளவு சுலபம் இல்லன்னு தான்
இப்படி ஒரு ஐடியாவுக்கு வந்தேன். ஆனா ராகினி புரியாம செஞ்சதால எல்லாமே நான் நினைச்ச
மாதிரி செய்ய முடியாம போச்சு" என்று வருத்தமாக கூறினான்.
"ஏன் செய்ய
முடியாம போகுது? வீடு இப்போ உடனே கட்ட ஆரம்பிக்க முடியாது. முதல்ல வருமானத்துக்கு தேவையான
தோட்ட அமைப்பை பின்னால உள்ள நிலத்துல ஏற்படுத்திட்டு கன்டெய்னர் வீட்டுக்கு முன்னாடி
உள்ள இடத்தில எப்படி சீக்கிரமா வீட்டுக்கு தேவையான காய்கறி, கீரை, மீன், கோழி எல்லாம்
வளர்க்கறதுன்னு முடிவு பண்ணி வேலையை ஆரம்பிச்சா ஒரு மாசத்துல அடுத்த கட்டத்துக்கு போயிடலாம்.
அது மட்டும் இல்ல, நேரடியா காய்கறி விளைய வைக்கறதை விட, தனியா இதுக்குன்னு ஒரு இடத்தில
வெஜிடபிள் க்ரோ பெட் போட்டு செய்தா நமக்கு அதிக அளவுல செடிகள் வளரும்" என்று நிறுத்தாமல்
எழில் பேசிக்கொண்டிருக்க,
"ஏய்,
உனக்கு எப்படி இவ்வளவு விஷயம் தெரியும்?" என்று ரவி ஆர்வமாக கேட்க,
"நமக்கு
பிடிச்சவங்களுக்கு பிடிச்சதை தெரிஞ்சு வச்சுக்கறது ஒரு மாதிரியான சுகம்." என்று
மர்மமாக சிரித்த எழிலை ரவி துரத்த,
"இப்படி
என்னை துரத்தி விளையாடினா எப்படி எல்லாத்தையும் செய்யறது?" என்று ஓடிக்கொண்டே
அவனை அவள் வம்பிழுக்க,
"அதான்
விஷயம் தெரிஞ்ச பொண்டாட்டி துணைக்கு இருக்காளே, எல்லாமே செய்யலாம். அதுக்கு முதல்ல
அவளை பொண்டாட்டியா கொஞ்சம்" என்று தாவிப் பிடித்து அணைக்க,
விலக இடமிருந்தும்
மனமில்லாமல் அவனது மார்பில் தஞ்சமான மங்கையை அள்ளிக்கொண்டு மஞ்சம் நோக்கிச் சென்றான்
அவளது ஆருயிர் கணவன்.

கருத்துகள்
கருத்துரையிடுக