சாரல் 34 | Tamil Novels | Jeyalakshmi Karthik Novels

 

சாரல் 34

 


புகழ் சிரிக்கவும் ராகினிக்கு லேசான எரிச்சல் எட்டிப் பார்த்தது.

 

"என்ன சிரிப்பு? உங்க அக்கா கிட்ட அவங்க பேசினதை கேட்டா அவங்க சித்தி மாதிரி தான் இருந்தது. ஒருவேளை உங்களுக்கு மட்டும் அம்மாவா?" என்று கேட்டு வைக்க, புகழின் சிரிப்பு அதிகமானது.

 

சிரிப்பின் பலனாக கண்களில் நீர் வர, "அவங்க எங்க ரெண்டு பேருக்கும் அம்மா தான். ஆனாலும் உங்க சந்தேகம் அல்டிமேட் போங்க." என்று சிரிப்பின் இடையில் அவன் கூற,

 

"உங்க புகழ்ச்சியை நீங்களே வச்சுக்கோங்க. எனக்கு கொஞ்சம் அவங்களை பத்தி உங்க கிட்ட பேசணும். நேர்ல பேசுவோமா?" என்று கறாராய் அவள் வினவ,

 

"நேர்லயா? வேண்டாம். நீங்க எதுனாலும் போன்ல சொல்லுங்க."என்று அவசரமாக பதில் கூறினான் புகழ்.

 

அவன் பேச்சைக் கேட்டு உச்சுக் கொட்டியவள், "இங்க பாருங்க எனக்கு அவங்க பேசுற விதம் சுத்தமா பிடிக்கல. எங்கம்மா என்னை ஒரு வார்த்தை கூட அதிர்ந்து பேச மாட்டாங்க. ஆனா உங்க அம்மா உங்க அக்காவையே தேள் மாதிரி கொட்டிக்கிட்டே இருக்காங்க. எனக்கு உங்க அக்கா மாதிரி பொறுமை கிடையாது. என்னை ஏதாவது சொன்னா நான் நாலு மடங்கு திரும்ப பேசுவேன். அதே மாதிரி நான் அங்க வந்து தங்க மாட்டேன். அண்ணா கிட்ட நமக்கு ஒரு வீடு ஏற்பாடு பண்ண சொல்றேன். இதுக்கு நீங்க ஒத்துக்கணும்." என்று அடுக்க,

 

அன்னைக்கும் அவளுக்கும் சண்டை வருவதைப் பற்றி புகழ் பெரிதாக யோசிக்க ஒன்றுமில்லை என்று ஒதுக்கி விட்டான். ஆனால் தனியே வீடு என்றதும்,

 

"இங்க பாருங்க எனக்கு வேலை இல்ல. இப்போ தான் கடை வைக்க இடம் பார்த்துட்டு வந்தோம், அதுக்குள்ள இப்படி ஒரு பிரச்சனை. ஏற்கனவே உங்க அண்ணன் எனக்கு வேலைக்கு ஏற்பாடு பண்ணுறதா சொல்லி இருக்காரு. அவரு ஏதோ ஒரு வகையில என் தொழிலுக்கோ வேலைக்கோ உதவி செஞ்சுட்டா அதை தாண்டி அவர் கிட்ட நான் வேற ஹெல்ப் எதிர்பார்க்க மாட்டேன். எதிர்பார்க்கவும் கூடாது. அது எனக்கு அவமானம். ஒரு ரெண்டு மாசம் பொறுமையா இருந்தா, நானே பக்கத்துல வேற நல்ல வீடா பார்த்து வைக்கிறேன்." என்று இழுத்தான்.

 

"இங்க பாருங்க எனக்கு எங்கண்ணா வாங்கி வச்சு இருக்குற கன்டெய்னர் வீடு கூட போதும். ஆனா உங்க அம்மா கூட நான் இருக்க மாட்டேன்." என்று அவள் அழுத்தமாகக் கூற,

 

"தப்பா நினைக்காதீங்க. ஆரம்பத்துல ரொம்பவும் உங்க அண்ணன் கிட்ட உதவி வாங்க முடியாதுங்க. அது நல்லா இருக்காது. வேணும்னா காலைல எழுந்ததும் உங்க அண்ணன் வீட்டுக்கு போயிடுங்க. ராத்திரி படுக்க மட்டும் வீட்டுக்கு வாங்க. அப்ப எங்கம்மாவை பார்க்க வேண்டியது இருக்காது." என்று அவளுக்காக யோசித்து கூறினான்.

 

ஒருவழியாக சமாதானத்துக்கு வந்த ராகினி,

 

"அப்ப சரி, அவங்க என்னை எதுவும் பேச கூடாது. நானும் பகல்ல அங்க இருக்க மாட்டேன்." என்று அழுத்தமாக கூற,

 

"அவங்களும் வேலைக்கு போயிடுவாங்க." என்று பதில் தந்தான் புகழ்.

 

"அப்ப ஓகே" என்று பெருமூச்சு விட்டவள், "நான் என் கல்யாணத்தை பத்தி எவ்வளவு கனவு வச்சிருந்தேன் தெரியுமா?" என்றதும் அவள் குரலில் வழிந்த நிராசையைக் கண்டு,

 

“என்னால முடிஞ்ச வரைக்கும் உங்களை சந்தோஷமா வச்சுக்க டிரை பண்ணுறேன்ங்க." என்று பதிலளித்த புகழை ஏனோ ராகினிக்கு பிடித்தது.

 

"எனக்கு உங்களை பிடிக்காம இல்ல. ஆனா உங்க லெவல் தான் ரொம்ப கம்மியா இருக்கு. ஆமா நீங்க என்ன படிச்சு இருக்கீங்க?" என்று அவள் ஆர்வமாக வினவ,

 

அவள் பேச்சில் அவன் மனம் சுணங்கினாலும் ரவியின் நேர்மையை எண்ணி மனதை தேற்றிக்கொண்டு, "எலெக்ட்ரிக்கல் என்ஜினீயரிங்." என்றான் அமைதியாக.

 

"ஓ. நான் ஆர்ட்ஸ் டிகிரி தான்." என்று சற்று உள்ளே போன குரலில் கூற,

 

"படிப்புல என்னங்க இருக்கு. எங்கக்கா தமிழ் தான் படிச்சாங்க, ஆனா எந்த துறையைப் பத்தி கேட்டாலும் அவங்களுக்கு அவ்வளவு விஷயம் தெரியும். புத்திசாலித்தனத்துக்கும் படிப்புக்கும் சம்மந்தம் இல்லன்னு அக்கா சொல்லுவாங்க." என்று மனதால் உணர்ந்து கூறினான்.

 

"ரொம்ப நல்லவரா இருப்பீங்க போல. நான் வேற ஏதேதோ பேசி உங்களை மாட்டி விட்டுட்டேன்." என்று ராகினி தயங்க,

 

"நல்லவன்லாம் இல்லங்க. அக்கா சொல்ற வார்த்தைகள் தான் இதெல்லாம். உங்க மேல எனக்கு எந்த கோபமும் இல்ல. உங்க சூழ்நிலைக்கு தப்பிக்க என்னை உபயோகிச்சுட்டீங்க. எனக்கு என்ன ஆகும்ன்னு நீங்க யோசிக்கல. நல்லவேளை உங்க அண்ணன் என் மேல தப்பில்லன்னு நம்பினார். இல்லன்னா நான் இந்நேரம் சப் ஜெயில்ல இருந்திருப்பேன்." என்று வருத்தமாகக் கூறினான் புகழ்.

 

"தப்பு தான். தெரியாம பண்ணிட்டேன்னு பொய் சொல்ல மாட்டேன். ஆனா இனிமே இப்படி நடந்துக்க மாட்டேன்." என்று பொறுமையாக அவள் கூற,

 

இப்பொழுது கூட அவள் மன்னிப்பை கேட்கவில்லை என்பதை உணராது,

 

"ஏங்க இது நிஜம் தானா? நீங்க தான் பேசுறீங்களா?" என்று புகழ் வினவ,

 

"நான் ஒன்னும் அவ்வளவு கெட்டவ இல்லங்க. கோவத்துல ஏதோ பேசிட்டேன்." என்று தயங்கிவிட்டு,

 

"சரி இதை பேச தான் கூப்பிட்டேன்.  வச்சிடுறேன்." என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தாள்.

 

புகழ் தன் கையில் இருந்த செல்போனை வெறித்து பார்த்துவிட்டு,

 

"அவசரக்காரின்னு ப்ருஃப் பண்ணிட்டாங்க." என்று சட்டை பையில் வைத்தான்.

 

ராகினி தன் கையில் இருந்த போனை மெத்தையில் தூக்கி எறிந்து விட்டு, "பரவாயில்லை சொன்னதுக்கு பூம் பூம் மாடு மாதிரி தலையை ஆட்டுறான். இது வரைக்கும் நான் தப்பிச்சேன்." என்று பெருமூச்சு விட்டாள்.

 

அன்னையின் புகைப்படத்தைக் கண்டு, "பாரு மா தனியா வீடு பார்த்து வைக்க கூட காசில்லாத ஒருத்தனுக்கு அண்ணன் என்னை கல்யாணம் பண்ணி கொடுக்குது. நீ இருந்திருந்தா இப்படி நடக்குமா?" என்று எண்ணியவளுக்கு அவர்கள் இறக்கும் தருவாயில் அவர்களிடம் ஏதுமில்லை, அண்ணனாவது அவளுக்கு வாழ்க்கையை அமைத்துத் தர நினைக்கிறான், அவர்கள் அதை கூட எண்ணாமல் தற்கொலை செய்து கொண்டது புத்திக்கு உறைக்கவில்லை.

 

அவள் கணக்கே வேறாக இருந்தது. எழில் கண்டிப்பாக அவளை எதிர்த்து ஏதும் செய்ய மாட்டாள். புகழ் அவள் பேச்சைக் கேட்பவனாக இருக்கும் பட்சத்தில் தன் அண்ணன் தன்னை எந்த சூழ்நிலையிலும் இன்று போல நிறுத்தி கட்டாயப்படுத்த மாட்டான். இதை வைத்தே நிலையான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும், புகழும் அவளுக்கு அடங்கி இருக்கும் பட்சத்தில் இனி கவலை இல்லை என்று முடிவு செய்திருந்தாள்.

 

இவள் மற்றவர்களைப் பற்றி கணக்குப் போட்டால், அவர்கள் இவளைப் பற்றி கணக்குப் போட மாட்டார்களா? என்ற கேள்வியே ராகினிக்கு எழவில்லை. எழும் அளவுக்கு அவளுக்கு இதில் சாமர்த்தியம் இல்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சாரல் 1

சாரல் 2 | Tamil Novel | Jeyalakshmi Karthik Novels

சாரல் 7 | Tamil Novel | Jeyalakshmi Karthik Novels