சாரல் 30 | Tamil Novel | Jeyalakshmi Karthik Novels

 சாரல் 30

 


தங்கள் காதுகளில் விழுந்த வாக்கியம் சரிதானா என்று அனைவரும் குழப்பத்தில் இருக்க, நூறு சதவிகிதம் சரியே எனும்படி ஶ்ரீதரன் கையில் அழுத்தம் கொடுத்து மறுமுறை வினவினான் ரவீந்தர்.

 

"எனக்கு உங்க இசையை ரொம்ப பிடிச்சிருக்கு. அதுனால தான் கேட்கறேன். நிச்சயமா இதுல ராகினி கல்யாணத்தோட தொடர்பு படுத்திக்க வேண்டாம்." என்று கூறியவன்,

 

"நான் இசை கிட்ட தனியா பேசணும். பிளீஸ் அலோ பண்ணுங்க அப்பா" என்று ஶ்ரீதரனிடம் வேண்டுதலோடு வினவினான் ரவி.

 

முதலில் திகைத்த ஶ்ரீதரன் ரவியை தலை முதல் கால் வரை அங்குலம் அங்குலமாக நோக்கினார்.

 

நல்ல உயரம், உடற்பயிற்சி செய்தோ செய்யாமலோ உரம் ஏறிய உடற்கட்டு, களையான முகம், அதில் தவழும் சாந்தம், தங்கையை காணவில்லை என்றதும் அவனிடம் இருந்த தவிப்பு, இன்று அவள் மேல் தான் தவறென்று தெரிந்ததும் அவன் காட்டிய நேர்மை, அதை விட தன் மகள் எழிலிசையை இசை என்று உரிமையாக அழைக்கும் பாங்கு. அவன் விரும்பித் தான் அவளை மணக்க கேட்கிறான் என்று விளக்கியதும்,

 

"செல்லம், போய் பேசிட்டு வா டா" என்று மகளை சென்று வரும்படி கூறினார் ஶ்ரீதரன்.

 

எழில் நடப்பது நிஜமென்று யாராவது கூறிவிடுங்கள், இது கனவாக இருக்கப் போகிறது என்று தவிப்புடன் ரவியின் பின்னால் செல்ல, சரோஜா அவர்களை தடுக்கும் பொருட்டு முன்னே வர, ஶ்ரீதரன் அவரை இழுத்துப் பிடித்தார்.

 

"இங்க பாரு, என் பொண்ணுக்கு ஒரு நல்ல வாழ்க்கை வரப் போகுது. ஏதாவது பேசி கெடுத்து விட பார்த்த, கட்டின பொண்டாட்டின்னு கூட பார்க்க மாட்டேன். கொன்னுடுவேன்." என்று மிரட்டியதும் சரோஜாவுக்கு புதியவராக தோற்றமளித்தார் ஶ்ரீதரன்.

 

கண்டெய்னர் வீட்டின் மாடிக்கு அழைத்துச் சென்ற ரவி, எழிலுக்கு மிக அருகில் நின்று,

 

"தயவு பண்ணி என் தங்கைக்கு உன் தம்பியை கேட்டதால செக்யூரிட்டிக்கு உன்னை நான் கல்யாணம் பண்ணிக்க கேட்கறதா நினைக்காத இசை. நீ யார்ன்னு தெரியாமலே உன் மேல எனக்கு ஒரு ஈர்ப்பு இருந்தது. நீ உன் தம்பிக்கு சொன்ன அட்வைஸ்ல ஒரு வாரம் நான் பழகின சிகரெட் பழக்கத்தை விட்டேன். உன்னை பார்க்காமலே எனக்கு உன்கிட்ட இருந்து ஒரு வித பாசிட்டிவ் எனர்ஜி கிடைச்சது. நேர்ல பார்த்தப்ப, எனக்குள்ள சின்னதா ஒரு தடுமாற்றம். ராகினி காணாம போனதும் நீ எனக்கு கொடுத்த நம்பிக்கை. எல்லாரும் நெகட்டிவா சொன்ன விஷயத்தை நீ மட்டும் பாசிட்டிவ் ஆங்கிள்ல பார்த்தது, எனக்கு உன் மேல சொல்லத் தெரியாத உணர்வு வந்திடுச்சு இசை. பிளீஸ் என்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டேனு சொல்லிடாத. " என்று அவள் கைகளைப் பற்றிக் கொண்டு அவன் வினவ,

 

"என் வாழ்க்கையில நிறைய நடந்திருக்கு. எனக்கு கல்யாணம் நடக்க வாய்ப்பே இல்லனு நான் நினைச்சுட்டு வாழ்ந்துகிட்டு இருக்கேன்." என்று எழில் தடுமாற,

 

"என்ன வேணாலும் உன் வாழ்க்கையில கடந்து போயிருக்கலாம் இசை. ஆனா இனி உன் எதிர்காலம் நானா இருக்கணும்னு ஆசைப்படுறேன்." என்று அவளை அவன் அருகே இழுக்க,

 

எழில் மிகுந்த தயக்கத்துடன், "என்னை விரும்பி தானே கல்யாணம் பண்றீங்க? நாளைக்கே யாராவது வந்து தப்பா ஏதாவது சொன்னா, எனக்கு ராசி சரியில்ல, ஜாதகம் தோஷம் எல்லாம் சொன்னா என்ன பண்ணுவீங்க?" என்று மெல்லிய குரலில் வினவ,

 

"நாம நினைக்கிற எதுவும் அப்படியே நடந்துடறது கிடையாது இசை. வாழ்க்கையில எப்ப வேணாலும் என்ன வேணாலும் நடக்கும்னு பெரிய பாடத்தை இந்த ஒன்றரை மாசத்துல காலம் எனக்கு கத்துக் கொடுத்து இருக்கு. நீ தான் என் மனைவினு எழுதி இருந்தா அதை மாற்ற முடியாது இசை. அதே போல நாளைக்கே யாராவது வந்து ஏதாவது சொன்னாலும் கடவுள் செயல்னு நான் அதை உன் கையை பிடிச்சுகிட்டு கடந்து வருவேன்." என்று கூறியதும் எழில் கண்களில் நீர்த்திரை.

 

"சரி ரவி சார். நான் சம்மதிக்கிறேன் ஆனா என் அம்மா ஒத்துக்க மாட்டாங்க. அப்ப ராகினி கல்யாணம் கேள்விக்குறி ஆகும்." என்று வருத்தமாகக் கூறினாள்.

 

"இல்ல இசை. உன் அம்மாவோட எண்ணம் எல்லாமே பணம் தான். அது கிடைக்காதுன்னு நான் அழுத்தமா சொல்லிடுவேன். நீ என்னை தப்பா நினைக்காத. அப்பா கிட்டையும் சொல்லிடு. ராகினியை நீ தான் மாத்தணும். உன் அம்மாவை மாத்த வேண்டியது என் வேலை." என்று சிரித்தான் ரவீந்தர்.

 

எழில் சட்டென்று முகிழ்ந்த புன்னகையுடன் "அப்ப எங்க அம்மாவுக்கு பெருசா என்னவோ இருக்கு…" என்று சிரிக்க, அவனும் அச்சிரிப்பில் இணைந்தான்.

 

இருவரும் அதே மகிழ்வுடன் கீழே வர, "என்ன தம்பி?"  என்று ஆர்வமாக வந்த ஶ்ரீதரன், என்ன சிந்தனையில் இதை செய்கிறான் என்று புரியாமல் நின்ற ரகுராம், வைதீஸ்வரி இருவரும் அவனையே பார்த்திருக்க,

 

"பெரியப்பா அடுத்து வர்ற நல்ல நாள் பாருங்க, ராகினி புகழ் கல்யாணம் வைக்கும் போது எங்களுக்கும் அப்படியே கல்யாணத்தை முடிச்சிடலாம்." என்று கூறியதும் ஊர் பிரசிடென்ட்,

 

"தம்பி நீங்க எழில் பொண்ணை கல்யாணம் பண்ண கேட்கறது எங்களுக்கு சந்தோஷம். ஆனா இப்பவும் சொல்றேன், உங்க தங்கச்சி கல்யாணம் அவசியமா?" என்று கேள்வி எழுப்ப,

 

"கண்டிப்பா சார். ஏன்னா பொண்ணு கொடுத்து பொண்ணு எடுத்தா எங்க ரெண்டு குடும்பத்துக்கும் நல்லது பாருங்க." என்று அழுத்தமாக கூறி சரோஜாவின் வயிற்றில் புளியைக் கரைத்தான் ரவி.

 

புகழ் மிகுந்த மகிழ்வுடன், "சார் ரொம்ப சந்தோஷம் சார். என் அக்கா ரொம்ப ரொம்ப நல்லவ சார்.  அவளுக்கு உங்களைப் போல ஒருத்தர் கூட வாழ்க்கை கிடைக்கும்ன்னா நீங்க என்ன சொன்னாலும் நான் செய்வேன் சார்." என்று ரவியிடம் சரணடைந்தான்.

 

இதை சற்றும் எதிர்பார்க்காத சரோஜா, "என்ன டா பேசுற? நான் உன் வாழ்க்கையை நல்ல வழி பண்ண பார்த்துக்கிட்டு இருக்கேன், நீ என்ன இப்படி பேசுற. அமைதியா அம்மா சொல்றத கேளு." என்று மகனை நிறுத்த முயன்றார்.

 

ஆனால் அவனோ, "அம்மா நீங்க சொல்றத நிறைய நான் கேட்டாச்சு. கெட்டும் போயாச்சு. இனிமே அது நடக்காது." என்று புகழ் ரவி அருகில் நிற்க,

 

ரவி சரோஜாவை பார்த்து, "நீங்க என் தங்கச்சியை கல்யாணம் பண்ணிக்க என்னென்ன சீர் கேட்டீங்களோ அது எல்லாம் அப்படியே உங்க பொண்ணுக்கு செஞ்சுட்டதா நினைச்சுக்கோங்க. அடுத்த முகூர்த்தத்தில ரெண்டு கல்யாணம் மட்டும் தான் நடக்கும்." என்று கூறிவிட்டு எழிலைப் பார்க்க, அவளோ அவன் சொல்ல வந்ததன் அர்த்தம் புரிந்தவளாக,

 

புகழ் கையைப் பற்றிக் கொண்டு, "தம்பி அவர் தங்கச்சிக்கு அவர் என்ன செய்தாலும் அதே அளவுல அக்காவுக்கு நீ செய்யணும்" என்று லேசாக கண் சிமிட்டினாள்.

 

புகழ் அக்காவின் பேச்சு புரிந்தவனாக, "சரிக்கா" என்று சொன்னது தான் தாமதம்,

 

"எல்லாரும் எப்படியோ போங்க, ச்சீ" என்று புடவையை உதறி இடுப்பில் சொருகிக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தார் சரோஜா.

 

அவர் தலை மறைந்ததும் ஶ்ரீதரனிடம், "அப்பா நான் தங்கச்சிக்கு என்னால என்ன முடியுமோ செய்யறேன் பா. நீங்க இசைக்கு எதையும் செய்ய வேண்டாம். இசை இந்த நிமிஷத்துல இருந்தே என் பொறுப்பு." என்று அவள் கரம் பற்றி நெஞ்சில் வைத்துக் கொள்ள,

 

பெரியவர்கள் அனைவருக்கும் அவன் கண்ணில் தெரிந்த அன்பு சொன்னது அவன் அதனை உணர்ந்து சொல்கிறான் என்று.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சாரல் 1

சாரல் 2 | Tamil Novel | Jeyalakshmi Karthik Novels

சாரல் 7 | Tamil Novel | Jeyalakshmi Karthik Novels