சாரல் 17 | Tamil Novel | Jeyalakshmi Karthik Novels
சாரல் 17
ராகினியை அனுப்பிவிட்டு எப்பொழுதும் போல திண்ணையில் அமர்ந்து தன் எம்பிராய்டரி வேலையை ஆரம்பித்த எழிலுக்கு அவள் எண்ணமாகவே இருந்தது.
சின்னக் குழந்தை போல கோவித்துச் சென்றவள் முகம் மீண்டும் மீண்டும் எழ, விரைவாக வேலையை முடித்து இருள் வருவதற்குள் அவளை அந்த மலைக்கு அழைத்துச் சென்று காட்டி விட முடிவு செய்து கொண்டாள்.
அதன் பின் அவள் கைகள் வேலையை அத்தனை வேகமாகவும் நேர்த்தியாகவும் செய்யத் துவங்கியது.
முதலில் இதில் என்ன வருமானம் வந்து விடப் போகிறது என்று விளையாட்டாக அவள் கற்ற கலை தான் இந்த கை எம்பிரய்டரி, அதை போலவே ஆரம்பத்தில் அவள் அதனை செய்து முடித்தபோது இந்த மலை கிராமத்தில் வாங்குவோர் யாரும் இல்லை.
ஆனால் அதனை அடிக்கடி போட்டோ எடுத்து இது போன்ற கைவினைப் பொருட்கள் விற்கும் தளத்தில் அவளது பெயரில் பதிவேற்றம் செய்து வைக்க, சேலத்தை தலைமையகமாக கொண்டு விளங்கும் ஒரு பரிசுப் பொருள் நிறுவனம் அவளை நேரடியாக தொடர்பு கொண்டு தாங்கள் அளிக்கும் பிரத்யேக பரிசுப் பொருட்களுள் அவளது எம்பிரய்டரியையும் பிரேம் செய்து விற்பனை செய்ய விரும்புவதாகவும் அவளுக்கு ஒரு எம்பிரய்டரிக்கு இத்தனை என்று பணமதிப்பு கூறவும் எழில் உண்மையில் மகிழ்ந்து போனாள்.
அவளது குடும்பம் இருக்கும் நிலைக்கு அவளுக்கு வரும் சிறு வருமானமும் பெரிய அளவில் உதவும் என்று எண்ணி ஆனந்தம் கொண்டாள்.
அவளது வித்தியாசமான வடிவமைப்பு அந்த நிறுவனத்தின் வெளிநாட்டு வாடிக்கையாளர்களை கவர்ந்து விட, அவளது ஆர்டரும் அதிகரித்ததோடு அதற்கான தொகையும் கூடியது.
அந்த வாரத்தில் எத்தனை பீஸ் அனுப்ப வேண்டுமென்றாலும் அதை அழகாக பிரித்து அட்டவணை போட்டு முடித்து சரியான நேரத்துக்கு முன்னதாகவே அனுப்பி விடும் அவளை அந்த நிறுவனம் மிகவும் மதிப்புடன் நடத்தியது. திடீரென பெரிய அளவில் கூட வடிவமைத்து தரச் சொல்லி அதற்கான கால அவகாசமும் கொடுப்பார்கள். மொத்தத்தில் அவள் எதிர்பாராத ஒன்றில் இருந்து அவளுக்கு நிலையான வருமானம் வந்து கொண்டு இருந்தது.
ஆனால் இது பற்றி அவள் சரோஜாவிடம் வாயைத் திறக்கவில்லை என்பது தனி கதை. முதலில் தந்தைக்கு ஆசையாக விஷயத்தை சொன்னதும் அவர் சொன்ன ஒரே நிபந்தனை, இது பற்றி சரோஜா அறியக் கூடாது என்பது தான்.
சரோஜா இந்த பணத்தையும் வாங்கி ஒன்று செலவு செய்வார் அல்லது வட்டிக்கு கட்டி விடுவார் என்று எண்ணி, அவளின் சொந்த செலவுகளுக்கு பின்னாளில் தேவைப்படலாம் என்று மகளிடம் மிகவும் கண்டிப்புடன் கூறி அப்பணத்தில் கை வைக்க அவர் விடவில்லை.
பழைய எண்ணங்கள் ஊர்வலம் வர, கை அதன் போக்கில் ஊசி நூல் கொண்டு அந்த மரச் சட்டத்தில் இருந்த வெண்ணிற துணியில் அழகிய வேலைப்பாட்டை செய்து கொண்டிருந்தது.
பகல் பொழுது மெல்ல மெல்ல மயங்கி மாலையை வரவழைத்து இருந்தது.
எழில் தன் கடைசி எம்பிரய்டரி துணியை அயர்ன் செய்து அந்த கவரில் அடுக்கி, ஏற்கனவே எழுதி தயாராக வைத்திருந்த கொரியர் கவரில் வைத்து செல்லோ டேப் ஒட்டினாள்.
அதனை கையில் எடுத்துக் கொண்டு நேராக புகழ் இருக்கும் இடம் தேடிச் செல்ல, அவன் அப்பொழுது தான் ரவீந்தருடன் இடங்களைக் குறித்து விட்டு கேம்ப்பர் வேனுக்குத் திரும்பி இருந்தான்.
தன் தமக்கை நடந்து வருவதைக் கண்டு, "சார் அக்கா வர்றாங்க என்னனு கேட்டுட்டு வர்றேன்." என்று அவன் அவளிடம் செல்ல முயல,
"இரு புகழ், எப்படியும் ராகினியைப் பார்க்கத் தான் வருவாங்க." என்று அவனை கைபற்றி தன் அருகில் அமர வைத்தான்.
கேட்டினுள் நுழைந்த எழிலுக்கு இதயம் வேகமாகத் துடிப்பது வெளியே கேட்டுவிடுமோ என்ற பயம் வந்தது. ஏனெனில் ரவீந்தரை முதல்முறையாக அருகில் பார்க்கப் போகிறாள்.
முகத்தில் அவளையும் அறியாமல் புன்னகை வந்து ஒட்டிக் கொள்ள, நேராக புகழுக்கு அருகில் வந்து நின்றாள்.
"வணக்கம் சார் நான் எழிலிசை. உங்க சேனல் எனக்கு ரொம்ப பிடிக்கும். ராகினியை கூட்டிட்டு போக வந்தேன்." என்று ரவியிடம் கூறிவிட்டு புகழ் கையில் கொரியர் கவரைக் கொடுத்தாள்.
"அஞ்சு மணிக்கு கொரியர் எடுக்க வர்றதுக்குள்ள கொண்டு கொடுத்திடு புகழ்." என்று சொல்லிவிட்டு,
"சார் ஒரு பத்து நிமிஷம் அவனை அனுப்பி கொடுங்க. முக்கியமான வேலை." என்று சங்கடமாக அவள் கூற,
"அவருக்கு வேலை முடிஞ்சதுங்க. நீங்க போயிட்டு வாங்க புகழ்." என்று ரவி கூறியதும் எழில் சின்ன சிரிப்புடன் ராகினியைத் தேடினாள்.
"நீங்க வரலன்னு நாங்க லேம்ப் போஸ்ட் போட இடம் பார்க்க போனப்ப கூட வந்தா. கால் வலிக்குதுன்னு படுத்து இருக்கா. இருங்க கூப்பிடுறேன்." என்ற எழுந்து கன்டெய்னர் வீட்டினுள் நுழைந்தான்.
அடுத்த சில நிமிடங்களில் வாடிய முகத்துடன் வெளியே வந்த ராகினி,
"என்னக்கா?" என்று முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு கேட்டபோது ரவிக்கு மனதில் கோபம் எழுந்தது.
ஒரு பெண் எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் அவளுக்காக உணவு கொடுத்து, பேச்சுத் துணையாக இருந்து, வழிநடத்தி, வெளி இடங்கள் அறிய அழைத்துச் செல்ல வந்து என்று எத்தனையோ செய்கிறாள். அவளிடம் பேசும் முறை இதுதானா? என்று ராகினியின் நடவடிக்கைக்கு தன் எதிர்ப்பை காட்டும் விதமாக அவளை முறைத்துக்கொண்டு, தொண்டையைச் செருமினான்.
ஆனால் ராகினி அவனைப் பார்த்தால் தானே அதெல்லாம் கண்களுக்கு புலப்படும், கருத்தில் பதியும்! அவள் அவன் பக்கம் கூட திரும்பவில்லை.
"வேலையை முடிச்சு அனுப்பிட்டேன் ராகினி. இன்னும் ஒரு மணி நேரம் வெளிச்சம் இருக்கும். குன்று வேல் பார்க்க போனாலும் இருட்டும் முன்னாடி வந்திடலாம். வர்றியா?" என்று இப்பொழுதும் கட்டாயப்படுத்தி அழைக்காமல் அவளின் விருப்பத்தைக் கேட்டாள் எழில்.
ராகினி முகத்தை மாற்றாமல், "பாதில வேலை இருக்குன்னு போயிடுவீங்க." என்று சிறுபிள்ளையாக சுணக்கம் காட்டினாள்.
ரவி அவளின் கரத்தை பற்ற, "விடுங்க சார். என்கிட்ட அன்பா பேசுறா. அதெல்லாம் கூப்பிட்டா வருவா." என்று சிறு குழந்தையைச் சொல்வது போல சொல்லவும்,
"இப்போ தான் அங்க இங்கன்னு சுத்திட்டு வந்தேன். கால் வலிக்குது." என்று முட்டியைப் பிடித்துக் கொண்டு அவள் கூற எழிலுக்கு சிரிப்பு வந்து விட்டது.
"ஹீட்டர் இருந்தா சுடு தண்ணில பத்து நிமிஷம் பாதத்தை வை ராகினி. இதமா இருக்கும்." என்று மூத்தவள் கூற, வெளியே செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில் சரி என்று உள்ளே சென்று விட்டாள்.
அவள் உள்ளே சென்றதை உறுதி செய்து கொண்ட ரவீந்தர், "சாரிங்க, அவளுக்கு வீட்ல ரொம்ப செல்லம் கொடுத்து வளர்த்துட்டாங்க. நீங்க அவளுக்கு செய்யறது எவ்வளவு பெரிய உதவின்னு அவளுக்கு புரியல. அதுக்காக நான் உங்க கிட்ட மன்னிப்பு கேட்கறேன். அதே நேரம் அவளை அழகா கைடு பண்ணி இருக்கீங்க. அதுக்கு ஸ்பெஷலா ஒரு தேங்க்ஸ் சொல்லணும் உங்களுக்கு." என்று நெற்றியில் இரு விரல் வைத்து சல்யூட்டை காற்றில் பறக்க விட எழில் இதே போல அவன் ஒரு வீடியோவில் செய்தது நினைவு வந்து புன்னகை
புரிந்தாள்.
அவள் புன்னகைக்க காரணம் புரியாமல் ரவி விழிக்க, அந்த வீடியோவின் தலைப்பைக் கூறி, "அப்பவும் இப்படி தானே செய்தீங்க, அந்த நினைவு வந்திடுச்சு." என்றதும்
அவளது புன்னகையுடன் அவனும் இணைந்து கொண்டான்.
கருத்துகள்
கருத்துரையிடுக