சாரல் 16

சாரல் 16


காலை நிதானமாக எழுந்த ராகினி நான்கு நாட்களுக்குப் பின் நிம்மதியாக குளித்தாள்.

என்ன தான் ரவீந்தர் கேம்ப்பர் வேனின் வெளியே ஷவர் வைத்து அவளை மறைக்க பிளாஸ்டிக் பேனல் வைத்துக் கொடுத்திருந்தாலும் ஒரு குளியலறையில் நிம்மதியாக குளிக்கும் தன்மை அதில் கிடைக்கவில்லை.

குளித்து முடித்து தயாரானதும் நேராக ரவியிடம் வந்து நின்றாள்.

"அண்ணா நான் பக்கத்து வீட்டு அக்கா கூட பின்னாடி இருக்குற அந்த மலை.. மலைதானே அது.. அங்க வரைக்கும் போயிட்டு வர்றேன்." என்று கதவைத் தாண்டிப் போக முயல,

"அங்க போகணும்ன்னா நம்ம இடத்துகுள்ள நேரா தான் போகணும். வெளில போய் போக முடியாது மா." என்றான் அக்கறையாக.

"அது தெரியும். அந்த அக்காவை கூட்டிட்டு வர்றேன்." என்று அவள் கிளம்ப, சட்டென்று நினைவு வந்தவனாக,

"அவங்க தம்பி இருப்பான், அவனை வர சொல்லு மா. சின்ன வேலை இருக்கு." என்று சொல்லிவிட்டு காலையில் தான் உண்ண உணவை தயார் செய்ய ஆரம்பித்தான்.

ஏனெனில் முதல் நாளில் இருந்து அந்த பக்கத்து வீட்டுப் பெண் ராகினிக்கு உணவு கொடுத்து விடுகிறாள். இவனுக்கும் அவளை கெஞ்சி உண்ண வைக்க நேரமில்லை. அதனால் கண்டுகொள்ளாது விட்டாலும் அந்த பெண் நிறைய உதவுவதாகத் தோன்றியது.

இன்று ராகினியுடன் அவள் வரும்போது அவளுக்கு நன்றி சொல்லி விட வேண்டுமென்று எண்ணினான் ரவீந்தர் .

ராகினி எழில் வீட்டின் வெளியே நின்று "அக்கா" என்று அழைக்க, புகழ் தான் வெளியே வந்தான்.

"வாங்க. அக்காவை பார்க்க வந்தீங்களா?" என்று குழப்பமான முகத்துடன் அவன் வினவ,

"ஆமா அக்காவை கூட்டிட்டு போக வந்தேன்." என்றவள், பின் யோசனையாக,

"நீங்க தானே அவங்க தம்பி?" என்று கேட்டதும் புகழ் முகத்தில் புன்னகை அரும்பியது

"ஆமாங்க" என்றான் திண்ணையில் அமர்ந்தபடி,

"எங்க அண்ணன் உங்களை வர சொல்லி சொன்னான். ஏதோ சின்ன வேலை இருக்காம்." என்று விட்டு, வீட்டின் உள்ளே பார்வையை ஓட விட்டாள்.

"யாரு உங்க அண்ணன்?" என்று புகழ் திருதிருக்க,

"அதோ அங்க இருக்காங்க" என்று தொலைவில் இருக்கும் ரவீந்தரை கைகாட்டி விட்டு,

"அக்கா எங்க?" என்றவள் வீட்டினுள் செல்லாமல் நின்றாள்.

அவள் புதிய இடம் என்று தயங்குவதாக புகழ் நினைக்க, ராகினியின் எண்ணமே வேறாக இருந்தது. அவள் அப்படியே மேகலாவின் வார்ப்பு. வேலையாட்களை கூட அருகே விடாத ரகம். தனக்கு தேவை என்றால் மட்டுமே தொட அனுமதி தருவாள். அதே போல அவர்கள் தங்குமிடம் பக்கம் செல்லவே மாட்டாள். ராகினியை சிறு வயது முதல் தூக்கி வளர்த்தவர் காளியம்மாள். அவர் அவர்கள் வீட்டின் சமையலறை ஒட்டிய சிறு அறையில் தான் தங்கி இருக்கார். அங்கே கூட சென்று அவரை பார்க்க மாட்டாள் ராகினி. அந்தஸ்து பேதம் என்பதை அவளுக்கே தெரியாமல் அவளுக்குள் புகுத்தி இருந்தார் மேகலா.

எழிலிசையின் சாந்தமான முகமும் அழகும் தான் ராகினியை அவள் வசம் ஈர்த்தது. அன்பு காட்டிய எழில் அவள் பார்வைக்கு அருமையானவளாகத் தோன்றினாலும் அதற்காக அவளது வீட்டினுள் சென்று உறவாடும் அளவுக்கு ராகினி சென்று விடவில்லை.

எழில் தரும் உணவை ஏற்றது கூட மூன்று நாட்களாக அண்ணன் சமைக்கும் பாதி வெந்தும் வேகாத காய்கறிகளை தின்று பசி விரட்ட முடியாததால் தான். அதையும் தாண்டி மறுமுறை அவளது உணவை ஏற்க வைத்தது அந்த சமையலின் சுவை.

எழிலிடம் நல்ல சமையல் திறன் இருப்பதை உணர்ந்த ராகினி, இன்று எப்படியாவது அவளிடம் பேசி தாங்கள் இருக்கும் வரை சமையல் வேலைக்கு அழைக்க எண்ணி இருந்தாள். இது தான் ராகினி. அவள் எண்ணம் எப்பொழுதும் தன்னை சுற்றி மட்டுமே இருக்கும்.

புகழ் அவளது பார்வையை கவனித்து, "அக்கா உன்னைத் தேடி வந்திருக்காங்க பாரு" என்று குரல் கொடுத்துவிட்டு வராண்டா கொடியில் கிடந்த அவனது சட்டையை எடுத்து தன் முண்டா பனியன் மேல் அணிந்து கொண்டு ரவீந்தரை நோக்கி நடந்தான்.

எழில் சமையலறையில் வேலையாக இருந்தவள், கைகளைத் தன் சேலைத் தலைப்பில் துடைத்தபடி,

"உள்ள வா ராகினி, உனக்கு தான் பூரி போட்டுட்டு இருந்தேன். வா வந்து சூடா சாப்பிடு" என்றதும்,

வீட்டினுள் செல்ல விருப்பம் இல்லதவளாக,

"அக்கா பிளேட்ல வச்சு இங்க தரீங்களா? வேடிக்கை பார்த்துகிட்டே சாபிட்டுடுவேன்." என்றாள் அழகான புன்னகையுடன்.

சரியென்று அவளுக்கு உணவை எடுத்து வந்த எழில், "நீ சாப்பிடு நான் பாதி தான் பாத்திரம் துலக்கினேன். முடிச்சிட்டு வர்றேன்." என்று உள்ளே சென்றாள்.

உணவை முடித்து விட்டு வெளியே இருந்த வாளியில் விரல் நுனியால் மக்கின் முனையைப் பற்றி நீர் எடுத்து தட்டில் கழுவி, அங்கேயே வைத்து விட்டு கையை நீர் போக உதறினாள்.

"அச்சோ, கையில இருக்குற தண்ணியை அப்படி உதறக் கூடாது ராகினி." என்று அவளுக்கு சொல்லிக்கொண்டே கொடியில் இருந்த துண்டை அவளிடம் கொடுத்தாள் .

அதனையும் நுனி விரலில் பிடித்து லேசாக துடைத்து விட்டு அசவுகரியமாக சிரித்தாள்.

"ஏதோ அந்த மலை மேல இருக்குன்னு சொன்னிங்கல்ல, ரொம்ப போர் அடிக்குது, வரீங்களா நாம போய் பார்த்துட்டு வருவோம்?" என்றாள்.

ஆக அவளது வேலை, அன்றைய நாளின் அவளது அட்டவணை பற்றியெல்லாம் ராகினி எண்ணிக் கூட பார்க்கவில்லை. முதலிலேயே போகலாமா என்று விருப்பமும் கேட்டு வைக்கவில்லை. திடீரென்று உள்ளே வந்து அவளோடு வெளியே வரும்படி அழைக்கிறாள்.

முதல் முறையாக எழிலுக்கு ராகினி மேல் சின்ன சுணக்கம் வந்தது. அவளுக்கு ராகினியை பார்க்கும் போதெல்லாம் ரவியின் எண்ணம் வருவதால் தான் மகிழ்ச்சியோடு உதவிக் கொண்டு இருக்கிறாள். ஆனால் அதற்காக தன் வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு வரச் சொன்னால் அது ஏற்புடையதாக அவளுக்குத் தோன்றாமல் போக,

"முன்னாடியே சொல்லி இருக்கலாமே ராகினி. இன்னிக்கு சாயங்காலம் அஞ்சு மணிக்கு கொரியர்ல நாலு எம்பிராய்டரி டிசைன் அனுப்பணும்." என்று தயக்கமாக கூறினாள் எழில்.

"என்னக்கா அது அவ்வளவு முக்கியமா? இன்னிக்கு இல்லன்னா நாளைக்கு அனுப்ப கூடாதா? நான் நாளைக்கு சாயங்காலம் ஊருக்கு போயிடுவேன்." என்று உதட்டைப் பிதுக்கினாள் அவள்.

"இல்லம்மா நான் அனுப்புறேன்னு வாக்கு கொடுத்துட்டேன். இன்னிக்கு கொரியர் போனா தான், நாளைக்கு பிரேம் போட்டு கஸ்டமருக்கு அனுப்பி வைப்பாங்க." என்று நிதானமாகவே விளக்கம் கொடுத்தாள்.

"நீங்க ஒரு ஆள் தான் என்னை புரிஞ்சு ஹெல்ப் பண்ணுறீங்கன்னு நினைச்சேன். ஆனா நீங்களும் உங்க வேலை தான் முக்கியம்னு சொல்லிட்டீங்க. பரவாயில்ல கா." என்று வேகமாக அவர்கள் இடத்தின் கதவை நோக்கி நடந்தாள்.

போகும் அவளைப் பார்க்கையில் இருபத்தி இரண்டு வயதான கன்னியாக தோன்றாமல் இரண்டு வயது குழந்தை போல தோன்றியது எழிலுக்கு .

கூடவே அவளின் அன்னை கொடுத்த செல்லத்தின் விளைவைக் கண்டு ரவீந்தர் மேல் பரிதாபம் பிறந்தது.

தங்கை பக்கத்து வீட்டுப் பெண்ணுடன் வருவாள் என்று வழி மேல் விழி வைத்து காத்திருந்த ரவி அவள் தனியே வருவது கண்டு ஏமாற்றத்துடன் காரணம் வினவ,

"அவங்களுக்கு வேலை இருக்காம்." என்று முகத்தை சுழித்து அவள் சொன்ன விதத்தில்,

'எல்லாருக்கும் வேலை இருக்க தான் செய்யும். எல்லாரும் உன்னை போல சும்மாவே இருப்பாங்களா?' என்று நுனி நாக்கு வரை வந்த பதிலை மிகவும் சிரமப்பட்டு விழுங்கினான்.

நாளை பெரியப்பா பெரியம்மா வரும்வரை இவளிடம் தேவையில்லாமல் வார்த்தையாடக் கூடாது. பின்னர் அதற்கும் இவள் தவறான கற்பிதம் எடுத்துக் கொள்வாள் என்று எண்ணிக் கொண்டான்.

எழில் வரவில்லை என்பதை விட அவள் பெயர் கூட தெரியவில்லையே என்று எண்ணியவன் கண்களில், வெளியே விளக்கு மாட்ட வந்து நின்ற புகழ் தெரிய,

அட இவனை வேலைக்கு வர சொல்லி வேலையும் கொடுத்து வச்சிருக்கோம். மறந்து போயிட்டோமே, என்று எண்ணிக்கொண்டு,

"உங்க அக்கா கிட்ட நன்றி சொல்லிடு புகழ். ராகினிக்கு நிறைய ஹெல்ப் பண்றாங்க." என்று கூறிவிட்டு,

"ராகினி கூட அவங்க பேர் என்னவோ சொன்னாளே?" என்று அவன் யோசிக்க,

"அக்கா பேர் எழிலிசை சார்."என்று பதில் கொடுத்தான் புகழ்.

'எழிலிசை.. இசை.. பேர் நல்லா இருக்கு' என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டே,

"சரிப்பா, இன்னிக்கு நிறைய லைட் பிட்டிங்ஸ், போஸ்ட் எல்லாம் வரும், நாம எங்கெங்கே அதை வைக்க போறோம்ன்னு லேண்ட்ல ஒருதடவை பார்த்திட்டு வந்திடலாம்" என்று புகழை அழைத்துச் சென்றான்.

Comments

Popular posts from this blog

மேற்கே உன் சாரல்மழை -1

மேற்கே உன் சாரல்மழை 7

மேற்கே உன் சாரல்மழை 2