சாரல் 15

சாரல் 15


ரவீந்தர் அன்றைய வேலைகளை எல்லாம் முடித்து விட்டு இரவில் கண்டெய்னரின் மேல் ஏறிப் படுத்திருந்தான்.

அலுவலக மொழிப்படி கூறுவதானால் அது அவனின் மொட்டை மாடி. காலை முதலே வேலை கடுமையாக இருந்தது. உடல்வலி அவனுக்கு சொல்ல முடியாத அளவில் இருக்க, இந்த ஊரின் பனியையும் பொருட்படுத்தாது வானத்தைப் பார்த்தபடி படுத்திருந்தான்.

அவனின் பல நாள் ஆசை இந்த கன்டெய்னர் வீடு. ஆளில்லாத ஓரிடத்தில் அவன் மட்டும் வாழ ஆசைப்பட்டு, அது எப்படி இருக்க வேண்டும் என்று நினைத்திருந்தானோ அப்படியே இன்று அவன் கண் முன் எழுந்து நிற்கிறது.

ஆனால் அவன் எதிர்பாராத சூழ்நிலை தான் அவனை அதனை முழுமையாக அனுபவிக்க விடாமல் தடுத்துக் கொண்டு இருக்கிறது.

முக்கியமாக ராகினி. தந்தையும் தாயும் அவளை வளர்த்து வைத்திருக்கும் விதத்தில் அவனுக்கு மயக்கம் வராத குறை தான். ஏதோ இரண்டு நாட்களாக அவள் அமைதியாக உலவி வருகிறாள். காரணம் பக்கத்து வீட்டுப் பெண் என்பது வரை தெரிந்து கொண்டிருந்தான்.

முகம் தெரியாத அப்பெண் தன் தம்பிக்கு அறிவுரை கூற, தான் மாறியது போலவே அவள் பேச்சைக் கேட்டு ராகினியும் சற்று அமைதியானதில் ரவிக்கு பெருத்த நிம்மதி.

பெரியப்பா நாளை மறுநாள் வருவதாக கூறி இருப்பதால் அவர்கள் வந்ததும் தங்க வைக்க தான் ரெடிமேட் கன்டெய்னர் வீட்டை உடனே பொருத்தினான். இல்லாவிட்டால் அவனது திட்டம் ஒவ்வொரு இடமாக அவனே அதனை தயார் செய்து வீடியோ எடுத்து யூட்யூப்பில் போடுவதாக தான் இருந்தது. 

அதையும் நிறுத்த வேண்டாமே என்று தான் மேலே ஒரு தளம் வைத்து படிக்கட்டை அமைத்து விட்டான். மேலே இரண்டாம் தளத்தை மொட்டை மாடியாக்கி அதற்கும் படிகளை மாலை அமைத்து முடித்தபோது காலையில் இருந்து அவனிடம் ஒட்டிக் கொண்டிருந்த ஆயாசமெல்லாம் பறந்து போய் 'தனக்கென்று ஒரு நிழல்' என்ற எண்ணம் ஆழமாக மனதில் வேர் விட்டது.

ராகினியை எண்ணித்தான் மனம் கவலை கொண்டது. உண்மைகளை அவள் எவ்வாறு புரிந்து கொள்ளப் போகிறாள், அவளது எதிர்வினை எப்படி இருக்கும் என்று எண்ணவே ரவிக்கு தன் சக்தியெல்லாம் வடிந்து போனது போல இருந்தது.

அவளை தன்னால் கையாள முடியவில்லை என்பதை நன்றாக இந்த சில நாட்களில் உணர்ந்திருந்தான் ரவீந்தர்.

அவனது நேர மேலாண்மை, வேலை நெறி, சுறுசுறுப்பு, எதையும் நிதானமாக ஆராய்ந்து புரிந்து கொள்ளும் பக்குவம் என்று எதுவும் ராகினியிடம் கடுகளவும் இல்லை என்பதை புரிந்து கொண்டதும் அவளது எதிர்காலம் நினைத்து கவலை பிறந்தது அவனுக்கு.

தாய் தந்தை இருந்திருந்தால் செல்வத்தில் சிறந்தவனை தேடிப் பிடித்து இதே போல சீமாட்டியாக வாழ வைத்திருப்பார்கள். ஆனால் இன்றைய தேதியில் அவனது எண்ணமெல்லாம் அவளை இந்த உலகுக்கு ஏற்றது போல மாற்றி வாழ வைக்க வேண்டும் என்பதே.

நிதர்சனம் புரியாமல், இன்னும் அம்மா அம்மா என்று மொபைலில் சதாசர்வகாலமும் அமர்ந்து அம்மாவுடன் எடுத்த போட்டோ வீடியோக்களை பார்ப்பது, ஊரில் இருக்கும் அவளைப் போன்ற தோழி ஒருத்திக்கு அழைத்து கணக்கு வழக்கில்லாமல் கதையளப்பது, இது தான் தூங்கும் நேரம், உணவு நேரம் என்ற அட்டவணையின்றி அவள் விருப்பப்படி இருந்து கொள்வது. ஒவ்வொரு நேர உணவுக்கும் அவனிடம் வந்து சமைத்துத் தரக் கேட்பது, இல்லாவிட்டால் கடையில் வாங்கி வர அறிவுறுத்துவது என்று அவளின் பழக்கங்கள் எதுவும் ரவிக்கு ஒத்து வரவில்லை.

அவனுக்கு தோன்றிய ஒரே ஆறுதலான வழி, பக்கத்து வீட்டுப் பெண் மூலம் ராகினியின் பார்வையை மாற்ற முயலலாம் என்பதே!

இப்படியாக ரவியின் எண்ணம் முழுவதும் ராகினியும் பெயர் தெரியாத பக்கத்து வீட்டுப் பெண்ணும் நிறைந்திருக்க,

ராகினி அவளது பெரியப்பாவின் எண்ணுக்கு அழைத்து, "நீங்க இங்க வர்றதா அண்ணன் சொன்னாரு. போகும் போது என்னை எங்க வீட்ல விட முடியுமா? நானே போகலாம்னு பார்த்தா அண்ணா என் காரை எடுத்துட்டு வரல. எனக்கு பஸ்ல, ட்ரெயின்ல எல்லாம் போகவும் தெரியாது. பிளீஸ் பெரியப்பா. எனக்கு இங்க மூச்சு அடைக்கிற மாதிரி இருக்கு. என் வீட்ல இருந்தா தான் அம்மா கூட இருக்குற நிம்மதி கிடைக்கும். அண்ணாவுக்காக நாலு நாள் இங்க இருந்துட்டேன். இனிமே முடியாது. ஹெல்ப் பண்ணுங்க." என்று அழாத குறையாக பேசிய இளையவளை எண்ணி ரகுராம் மிகவும் வருந்தினார்.

Comments

Popular posts from this blog

மேற்கே உன் சாரல்மழை -1

மேற்கே உன் சாரல்மழை 7

மேற்கே உன் சாரல்மழை 2