சாரல் 14
சாரல் 14
வீடு நோக்கி வாடி வதங்கி நடந்து வந்து கொண்டிருந்தார் சரோஜா.
பக்கத்து நிலத்தில் திடீரென்று முளைத்திருந்த இரண்டடுக்கு இரும்பு வீட்டைக் கண்டு திகைப்புடன் தான் வீட்டினுள் நுழைந்தார்.
எழில் தன் கைவேலையில் கவனமாக இருந்தவள் அன்னை வரவே அவருக்கு தேநீர் கலந்து எடுத்துக் கொண்டு வந்தாள்.
சரோஜா முன் வைத்துவிட்டு அவள் தன் வேலையைத் தொடர,
புகழ் வேகமாக வீட்டினுள் வந்தான்.
"அக்கா நீ சொன்னது ரொம்ப சரிக்கா. அவர் கீழ் போர்ஷன் கன்டெய்னர் ரெடிமேடாக வாங்கி இருக்கார். ஆனா மேல் போர்ஷன் இனி தான் அவரே ரெடி பண்ண போறாராம். அதை அவரோட சேனல்ல தினமும் போடப் போறாராம்." என்று கூறி அவளருகில் அமர,
"என்ன டா அது திடீர்னு என்னத்தையோ கொண்டு வந்து வச்சிருக்கான் பக்கத்து இடத்துக்காரன். மின்னல் எதுவும் இரும்பைத் தாக்க வர்றேன்னு நம்ம வீட்டுப் பக்கம் வராதே?" என்று தங்கள் நலத்தை உறுதிபடுத்திக் கொள்ள கேள்வி கேட்டார் சரோஜா.
"அம்மா கன்டெய்னர் வீடுகள் எல்லாம் ஷாக் புரூஃப், எர்த்குவேக் புரூஃப் கூடவே இடி மின்னல் எதுவும் தாக்காது. தண்ணி உள்ள வராது. ரொம்ப ரொம்ப பாதுகாப்பானது." என்று அதற்கு அவன் விளம்பர மாடல் போல விளக்கம் அளிக்க,
"இதெல்லாம் நல்ல விளக்கமா பேசு, உங்கப்பன் கிட்ட பேசி ஜெயிச்சு ஊருக்கு போய் சம்பாதிச்சு போட துப்பில்ல. இன்னிக்கு வட்டி கட்ட போனா அந்த ராமசாமி என்ன கேவலமா பேசுறான்? தினமும் எவனாவது இப்படி பேசி அதை கேட்கணுன்னு என் தலையெழுத்து போல." என்று சலித்த சரோஜாவிடம் பதில் கூறாது எழிலின் முகத்தை நோக்கினான் புகழ்.
எழில் முகத்தில் இகழ்ச்சியாக ஒரு புன்னகை வந்து போனது.
அதனை சரோஜாவும் பார்த்துவிட,
"உனக்கென்ன டி, நடந்ததுக்கு துக்கம்னு சொல்லி வீட்டுப் படி தாண்டாம யார் வாயிலையும் விழாம ஜாலியா இருக்க. உங்க அப்பா இன்னும் உன்னை செல்லம் செல்லம்ன்னு கொஞ்சிகிட்டு இருக்காரு. இவன் திடீர்னு அக்கா லொக்கான்னு உன் பின்னாடி அலையுறான். நீ சிரிப்ப. ஆனா தினமும் வேலைக்கு போய் அங்க எல்லார் கிட்டயும் கிண்டலும் கேலியுமா பேச்சு வாங்கி, கடன் வாங்கின ஆட்களுக்கு பதில் சொல்லி போதாத குறைக்கு அந்த தர்மா பேசுறதை எல்லாம் கேட்டு.." என்று அவர் இழுக்கும் போது புகழ் இடைமறித்து பேசினான்.
"அம்மா உண்மையா சொல்லு அக்கா ஆசைப்பட்டு வீட்டுக்குள்ள இருக்கா? அவங்களை வெளில போக விடாம பண்ணினது யாரு மா? நீங்களும் நானும். இன்னிக்கு ஃப்ரெண்ட் ஒருத்தன் என் நிலைமையை எனக்கே பொட்டுல அறைஞ்சது போல சொல்றான். ஆனா உங்களுக்கு அப்படி சொல்ல நல்ல நட்பு இல்லையா? தர்மா தர்மான்னு அந்தண்ணனை மட்டும் குறைவா பேசுற. அவரு உன்கிட்ட எவ்வளவு தடவை கேட்டாரு. இதெல்லாம் சரி வருமா, நல்லா யோசி்ங்கன்னு. அப்ப என் வேலையை காரணம் காட்டி நீ என்ன சொன்ன, அதெல்லாம் அருமையா வரும்ன்னு என்னையும் அப்பாவையும் நம்ப வச்ச, அப்பா சொன்ன ஒரே வார்த்தைக்கு அக்கா எல்லாத்துக்கும் ஒத்துக்கிட்டா. ஆனா இன்னிக்கு எவ்வளவு சுலபமா அக்காவை குறை சொல்லுற மா நீ?" என்று சரோஜாவை பிடிபிடியென்று பிடித்தான்.
"வா டா நேர்மை நாயகமே! என்னை இந்த பேச்சு பேசுறியே, நான் சொன்னா உனக்கெங்க போச்சு புத்தி. அக்கா வாழ்க்கை மேல அக்கறையா இன்னிக்கு பேசுற பருப்பு, அன்னைக்கு குழைஞ்சுக் கிட்டு வந்து என்ன சொன்ன? அம்மா கண்டிப்பா எனக்கு வேலை கிடைக்குமா? அக்கா அவரை கல்யாணம் பண்ணினா நாம நெனச்சபடி இருக்க முடியுமா? அக்கா ஒத்துக்குமா? இப்படி எத்தனை கேள்வி கேட்ட? இன்னிக்கு திடீர்னு உனக்கு ஏதோ போதி மரத்தடியில ஞானம் வந்தா நான் ஒன்னும் செய்ய முடியாது. உன் படிப்புக்கு ஆன செலவு 3 லட்சம். உங்க அக்கா கல்யாணத்துக்கும் உன் பாஸ்போர்ட், விசா, வேலைன்னு எல்லாத்துக்கும் கட்டினது அஞ்சு லட்சம். எடுத்து வச்சிட்டு உன் அக்காவை தலையில வச்சுகிட்டு ஆடு. யார் உன்னை தடுத்தாங்க?" என்று தேநீரை ஒரே மிடறில் விழுங்கி விட்டு எழுந்து சென்றார்.
புகழ் கசங்கிய முகத்துடன் அமர்ந்திருப்பதை பார்த்த எழில், "கடை வாடகை தயார் பண்ணிட்டா அம்மா கேட்ட காசை சீக்கிரம் கொடுக்கலாம் புகழ். நீ ரவி சார் கிட்ட ஏதாவது எலக்ட்ரிக்கல் வேலைக்கு கேளு. சீக்கிரம் அம்மா வாங்கின கடனை அடச்சுட்டா அவங்க இப்படி பேச மாட்டாங்க. அவங்க இப்படி ஆக நானும் ஒரு காரணம் தானே?" என்று வருத்தத்தை முகத்தில் மறைத்துக் கொண்டு பேசினாள் எழில்.
"அக்கா நீ நல்லவளா இரு. ஆனா உனக்கு அம்மாவும் நானும் செஞ்சதை மன்னிச்சது கூட ஏதோ சொந்த ரத்தம்ன்னு வச்சாலும் இப்ப பேசுற பாரு, இது உன்னை மறுபடி பிரச்சனையில் தான் கொண்டு விடும். யோசிச்சுபாரு. நான் ரவி சார் கிட்ட பேசிட்டேன். பெரிய அளவுல இப்ப வேலை இல்லையாம். சின்ன சின்ன வேலைக்கு கண்டிப்பா கூப்பிடுறேன்னு சொன்னாரு. ஆனா பத்து நாள் ஆகுமாம்." என்று போய் வந்த தகவலையும் பகிர்ந்து கொண்டான்.
ஒரு பெருமூச்சுடன் எழுந்து தன் கட்டிலில் அமர்ந்து கண்மூடினாள் எழில்.
தனக்கு கல்யாணம் என்று அம்மா செய்த ஆடம்பரம் எத்தனை, அதை அவர் மேற்கொள்ள காரணமாக இருந்தது மாப்பிள்ளை கொடுத்த உறுதி மொழி. புகழை வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்பி இரண்டே ஆண்டில் அவரின் கடனை அவன் போக்குவதாக சொன்னதும் சரோஜா மொத்தமாக விழுந்து விட்டார்.
எத்தனை தடபுடல், எத்தனை ஆர்பாட்டம், ஊரில் ஒருவரை விடாமல் சண்டைக்கு இழுத்து அந்த மனிதர் தன் மாப்பிள்ளை என்று தலைகணம் கொண்டு பேசிய பேச்சுக்கள் எல்லாம் ஊரார் மத்தியில் சரோஜாவின் மரியாதையை இழக்க வைத்ததோடு எழில் மேல் லேசான கோபத்தையும் ஏற்படுத்தியது.
இன்று ஒடுங்கித் திரியும் சரோஜா அன்று சற்று அமைதியாக இருந்திருந்தால் புகழுக்கு வேலை கிடைத்திருக்கும், எழிலின் ஆசைப்படி அவள் கிராப்ட் ஷாப் வைத்திருப்பாள். ஶ்ரீதரனை விருப்ப ஓய்வு வாங்க வைத்து சற்று இளைப்பாறி கூட இருக்கலாம். ஆனால் சரோஜாவின் பேராசை, ஆடம்பர ஆசை, யாரையும் துச்சமாக எண்ணும் குணம் தான் குடும்பத்தை படுகுழியில் தள்ளி விட்டது.
இதெல்லாம் சரோஜாவுக்கு கிடைத்த பதிலடி என்று எண்ணிக் கொண்டாலும் எழிலின் வாழ்க்கை கேள்விக்குறியாக இன்று நிற்கிறதே! இது காலம் யாருக்கு போட்ட கோலம்???
Comments
Post a Comment