சாரல் 13
சாரல் 13
ரவீந்திரன் காலை முதலே வேலையாட்களுடன் பிஸியாக இருந்தான். ராகினியை அழைத்து கைடு ஒருவருடன் டாப்சிலிப் அனுப்பி வைக்கவா என்று அவன் வினவ,
அவளோ முறைத்தபடி," சீக்கிரம் வேலையை முடி ஊருக்கு போவோம். எனக்கு சென்னை தான் செட் ஆகும்." என்று சொல்லிவிட்டு போனும் கையுமாக வேனில் அமர்ந்து கொண்டாள்.
அவளது வாடிக்கை இது என்று ரவியும் அவளை கண்டுகொள்ளாது விட்டுவிட்டான்.
முதலில் டாய்லெட் கட்டுவதற்கு எக்ஸ்கவெட்டர்( ஜேசிபி என்பது அந்த இயந்திர நிறுவனத்தின் பெயர்) கொண்டு ஆழமான குழி தோண்டப்பட்டதும் ஒரு லாரி மூலமாக பயோ செப்டிக் டேங்க் கொண்டு வரப் பட்டது
இது வாழ்நாள் முழுவதும் நிறையவே நிறையாத கழிவு நீர் தொட்டி என்று அதன் உற்பத்தியாளர் சொல்லவும் முதலில் ஆச்சரியம் அடைந்தான். ஏனெனில் சென்னை பெருநகரில் ஒவ்வொரு வீட்டின் செப்டிக் டேங்க்கும் வருடத்திற்கு இருமுறையேனும் கழிவு நீர் ஊர்தி கொண்டு காலி செய்யப்படும். அதுவே அப்பார்ட்மெண்ட் என்றால் அதன் எண்ணிக்கை பொறுத்து, வாரம், ஏன் தினமும் கூட கழிவு நீர் அகற்றம் நடைபெறும். அப்படியிருக்க அவர்கள் குறிப்பிட்ட பயோ செப்டிக் டேங்க்கின் மீது ஆர்வம் ஏற்பட்டு அதனை பற்றி விசாரித்து திருப்தியான பின் இதோ வாங்கி விட்டான்.
நான்கு பிரிவுகள் கொண்ட இந்த டெங்கை மண்ணில் பதித்து விட்டு அதற்கு பேக்டீரியா இன்ஸ்டால் செய்து விட்டால் அதன் பின் வாங்கியவர்களுக்கு வேலை கிடையாது என்றது நிறுவனம்.
அவன் வரையில் அது நல்ல செயல்பாடாக தோன்றவே வாங்கி விட்டான். இதை மட்டுமா அவன் புதுமையாக செய்தான்? அவனது இந்த இடம் வாங்கும் திட்டம் முதல் குடிபெயர்ந்த பின் செய்ய அவன் எடுத்த அனைத்துமே புதுமை தான்.
ஒவ்வொன்றும் அவனது கேமராவில் வீடியோவாக பதிவாகி கொண்டு இருந்தது தனி கதை. ஏனெனில் இன்றைய தேதியில் அவனது வருமானம் இந்த யூடியூப் சேனல் தானே!
எந்த விளக்கமும் அளிக்காமல் ஊமைப்படமாக வீடியோ மட்டும் பதிவாகிக் கொண்டு இருந்தது.
இதை அனைத்தையும் தொலைவில் இருந்து பார்த்தபடி எம்பிராய்டரி போட்டுக் கொண்டிருந்தாள் எழில்.
அவளது பார்வையை கவனித்த புகழ், "அக்கா என்ன பார்த்துட்டே இருக்க?" என்றதும்,
"அது பயோ செப்டிக் டாங்க் இன்ஸ்டலேஷன் டா புகழ். பரவாயில்லை எப்பவும் போல ரவி சார் இதுலையும் புத்திசாலின்னு நிரூபிச்சுட்டார்." என்று அவளை மறந்து வார்த்தைகளை வெளியிட்டு விட்டாள்.
"அக்கா அவரை உனக்கு தெரியுமா?" என்று புகழ் ஆச்சரியமும் அதிர்ச்சியுமாக வினவ,
"அவரை தெரியாத யூடியூப்வாசி யாரு டா இருக்கா? அவர் பிரபலம் டா." என்று சொல்லிவிட்டு எழுந்து கொள்ள முயன்றாள்.
"அக்கா நீ என்ன சொல்ற?" என்று அவளை பிடித்து அமர்த்தினான்.
"டேய் நமக்கு தெரியாததை தெரிஞ்சுக்க யூடியூப் பாக்கற யாரும் சும்மா காமெடி ரீல்ஸ் மட்டும் பார்த்து பொழுதை ஓட்ட மாட்டாங்க. என்ன புது தொழில்நுட்பம் வந்திருக்கு, எந்த இடத்தில எது பேமஸ் இப்படி ஆளுக்கு ஒரு ஆர்வம் இருக்கும். அதை பூர்த்தி செய்யற சேனலை அவங்க பார்ப்பாங்க. அப்படி நான் பார்த்த ஒரு சேனல் ரவி சாரோடது. மத்தபடி ஒன்னும் இல்ல." என்று எழுந்து சென்றாள்.
வித்தியாசமான அணுகுமுறை கொண்ட ரவியிடம் தான் வேலைக்கு சேர்ந்தால் என்ன என்று அவன் சிந்திக்கும் நேரம் பெரிய லாரி ஒன்று அவர்கள் வழியில் திரும்பியது.
அதில் கன்டெய்னர் இருக்க, இவ்வளவு பொருளை இவர் இங்கே வைக்கப் போகிறார் என்று அவன் யோச பார்த்துக் கொண்டிருக்க, ஒரு நிமிடத்தில் கிரேன் கொண்டு இரண்டு நாட்களுக்கு முன்னால் அவன் ஏற்படுத்தி வைத்த கான்கிரீட் அடித்தளத்தில் அந்த கன்டெய்னரை வைத்தார் கிரேன் ஆபரேட்டர்.
அதிர்ச்சியாக புகழ் வாய்பிளந்து அதனை பார்த்துக் கொண்டிருக்க, அவனுக்கு குடிக்க மோர் எடுத்து வந்த எழில்,
"நெனச்சேன். இனிமே இவர் சேனல் ரொம்ப ரீச் ஆகும்." என்று மனம் விட்டு பாராட்டவும்,
"என்ன கா சொல்ற? இவ்வளவு சாமானை வச்சு என்ன செய்வார்?" என்று அவன் விழிக்க,
"டேய் அதுல சாமான் இல்ல. அது கன்டெய்னர் ஹோம். ஒரு வீடு டா. ரெடிமேடா செஞ்சு கொண்டு வந்திருக்காரா? இல்ல இனி தான் செய்யப் போறாரா தெரியல" என்று சொல்லும்போது இன்னொரு கன்டெய்னர் அதன் மேல் வைக்கப்பட்டது.
இரண்டு ஆட்கள் வந்து சின்ன லாரியில் இருந்து ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் படிகளை இறக்கி கன்டெயினர்களின் ஒரு புறம் நிறுத்தி வேகமாக ஸ்கிரூ போட, சில நிமிட நேரத்தில் தரைத்தளம், முதல் தளத்துடன் கூடிய வீடு தயாராகி விட்டது.
ரவீந்தர் சோர்வாக நிற்பதை கவனித்த எழில் ஒரு சொம்பில் மோரை நிறைத்து, "இதை அவர் கிட்ட கொடுத்துட்டு வா புகழ்" என்று சொல்லிச் சென்றாள்.
புகழுக்கும் ரவிடம் நேரடியாக சென்று பேச தயக்கம் இருந்தது. அக்கா மோரைக் கொடுத்ததும் சாக்காக அதனை வைத்து ரவிடம் பேசச் சென்றான்.
டாய்லெட் மட்டும் தனியே கான்கிரீட் போட்டு கட்டிக் கொண்டு இருந்த வேலையாட்களை மேற்பார்வை பார்த்து நின்றிருந்த ரவியிடம் வந்தான் புகழ்.
"ஹலோ சார். மைசெல்ஃப் புகழேந்தி. எலக்ட்ரிகல் இன்ஜினியர். பக்கத்து வீட்டுல தான் இருக்கேன்." என்று அறிமுகம் செய்து கொள்ள,
"ஓ. ஹாய் புகழ். நான் ரவீந்தர்." என்று அவன் கைநீட்ட,
"உங்களை தெரியாதா சார். எவ்வளவு பிரபலமான யூடியூப்பர்?" என்று அவன் கூறியதும்,
"என்னை தெரியுமா? ஓ மை." என்று ஆச்சரியம் காட்டி விட்டு, அவனிடம் வேறு என்ன பேச என்று அமைதியான ரவியிடம் மோரை நீட்டினான் புகழ்.
"அக்கா நீங்க சோர்வா இருக்கறத பார்த்து கொடுத்து விட்டாங்க." என்று சொம்பை நீட்ட, நன்றி கூறி வாங்கிக் கொண்டான்.
அதிகம் வெயில் இல்லை என்றாலும் குளிரும் இல்லை. வறண்ட வானிலை அன்று நிலவியதால் அதிக தாகம் எடுத்தது மிகவும் சிரமத்தில் இருந்த ரவிக்கு அந்த மோர் அமிர்தமாக தோன்றியது.
"அக்கான்னா.. உங்களுக்கு அட்வைஸ் பண்ணுவாங்களே அவங்களா?" என்று நினைத்ததை புகழிடம் கேட்டு விட்டான் ரவி.
முதலில் விழித்த புகழ், பின் '' என்று தலையசைத்து,
"அவங்க உங்க சேனலுக்கு சப்ஸ்கிரைபர் சார். இப்போ கூட இந்த பயோ செப்டிக் டேங்க், கன்டெய்னர் ஹோம் எல்லாமே உங்க புத்திசாலித்தனமான ஐடியான்னு புகழ்ந்துட்டு இருந்தாங்க" என்று கூறியதும்,
குரலை மட்டும் கேட்ட அப்பெண்ணை பார்க்க முதல் முறை ஆசை பிறந்தது ரவியின் மனதில்.
Comments
Post a Comment