சாரல் 11

சாரல் 11
 
வீடு நோக்கிய எழில் மற்றும் புகழின் பயணம் அமைதியாகவே கழிந்தது.
 
எழிலை வீட்டு வாயிலில் இறக்கி விட்ட புகழ், "அக்கா அந்த கடை விஷயத்தை மறந்திடு. நான் உள்ளூர்ல வேலை கிடைக்குமான்னு பாக்கறேன்." என்று சொன்னதும்,
 
"நீ உனக்கு சரின்னு படுறத செய். நானும் அப்படித் தான். ஏதாவது ஒன்னு சரியா அமைஞ்சாலும் நம்ம வீடு தானே சந்தோஷமா இருக்கப் போகுது?" என்று அவன் தலையை ஆதுரமாக தடவினாள்.
 
"தர்மா அண்ணன் பேசினது எதையும் மனசுல போட்டு வருத்தப்படாத. எல்லாம் போக போக புரிஞ்சுக்குவாங்க." என்றான் பெரிய மனித தோரணையுடன்.
 
"நீ எப்பவும் இப்படி ஒரு புகழு. எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா?" என்று அவன் கன்னத்தில் கை வைத்து வருடினாள்.
 
"நீ இப்படி செய்யும் போது பள்ளிக்கூட பையன் போல தோணுது கா எனக்கு." என்று அவனும் தான் தோளோடு அவளது கையை கன்னத்துடன் அழுத்தினான்.
 
"ரொம்ப நடந்து போச்சுல்ல டா. எல்லார் மனசும் ரணமா இருந்திருக்கு. நமக்கு நாமளே ஆறுதல் சொல்லிக்கல பாரு." என்று தட்டிக் கொடுத்து அவனை சென்று வரும்படி தலையசைத்தாள்.
 
புகழுக்கு அந்த நாளுக்கு நினைவுகள் பயணிக்க துடித்தது. அன்னை தனக்காக என்னவெல்லாம் செய்தார் என்று எண்ணியவனுக்கு இந்த நொடி எழிலை நினைத்தால் அவன் எவ்வளவு சுயநலமாக இருந்துவிட்டான் என்று குற்றவுணர்வாக இருந்தது.
 
அவன் பக்கத்து இடத்தை கடக்கும் போது போர் போடும் லாரியில் அவனது சிநேகிதன் மைக்கேல் அமர்ந்திருந்தான்.
 
"டேய் புகழ்" என்று அவன் அழைக்க, இவனும் வாகனத்தை நிறுத்தி வைத்துவிட்டு அவனிடம் வந்தான்.
 
"என்ன மைக் இங்க?" என்று விசாரிக்க,
 
"டேய் யாரோ பெரிய ஆள் போல டா இங்க தோட்டம் போடப் போறாரு போல. நம்ம கம்பெனில தான் போர் போட்டு தர்றோம்." என்று விபரம் கூறினான்.
 
"அப்படியா?" என்றவன் தயக்கத்துடன், "மைக் எனக்கு இங்க ஏதாவது வேலை கிடைக்குமா டா?" என்று கேட்டபோது அவனை வித்தியாசமாக நோக்கினான் மைக்கேல்.
 
"விளையாடுறியா புகழ்? போன வருஷம் நடந்தது உனக்கு வேணா சீக்கிரம் மறந்து போகலாம். ஆனா ஊர்க்காரங்க ஒருத்தர் கூட மறக்க மாட்டாங்க டா. உன்னை சைக்கிள் கடையில கூட வேலைக்கு சேர்க்க மாட்டாங்க மச்சி. நான் சொல்றது உனக்கு சங்கடமா தான் இருக்கும். ஆனா உண்மை அது தான் டா. உன் அம்மா எல்லார் வாயிலையும் விழுந்துடுச்சு. ஏதோ ஓம் முருகா எண்டர்பிரைஸ் ஓனருக்கு பல வருஷ பழக்கம் இருந்ததால இன்னும் அம்மா அங்க தொடர்ந்து வேலை செய்யறாங்க. உங்க அப்பாவை ஆஸ்பத்திரியில எத்தனை பேர் குத்தலா பேசுறாங்க தெரியுமா?" என்று நிறுத்தாமல் பேச,
 
கையெடுத்து கும்பிட்டான் புகழ். "தெரியாம கேட்டுட்டேன் மைக்." என்று சொன்னவன் குரல் உடைந்து விட்டது.
 
"டேய் உன்னை கஷ்டபடுத்த சொல்லல. நிலவரம் இது தான். பேசாம இந்த புது ஆள் கிட்ட ஏதாவது வேலை செய். அவரு வேலை கொடுத்தா யாரும் ஒன்னும் சொல்ல மாட்டாங்க." என்று யோசனை கூறினான்.
 
"பார்ப்போம் மைக்" என்று அவனிடம் விடைபெற்றான் புகழ்.
 
அன்றைய பகல் கழிந்து மாலை வெயில் அனைவருக்கும் வணக்கம் சொல்லி பகலை வழியனுப்பி இரவை ஆசையோடு அழைத்துக் கொண்டிருந்தது.
 
போர் போடும் வேலை முழுவதும் முடிவடைந்தது . அந்த சத்தம் பொறுக்காமல் கேம்பர் வேனுக்குள் தலையணைக்கு கீழே தலையை வைத்து படுத்திருந்த ராகினி, சத்தம் நின்றதும் எழுந்து வெளியே வந்தாள்.
 
அவர்களுக்கு பணம் கொடுத்து விட்டு திரும்பிய ரவீந்திரன் தங்கையைக் கண்டு முறுவலித்தான்.
 
"சார் காலைல வந்து மோட்டார் போட்டு பைப்லைன், டேங்க் எல்லாம் செட் பண்ணி கொடுக்கிறோம்." என்று சொல்லிவிட்டு புறப்பட்டனர் அந்த குழுவினர்
 
"அண்ணா" என்று அருகே வந்தவள் அங்கிருந்தவர்கள் செல்லும் வரை பொறுமை காத்து,
 
"நீயும் உன் மனசை டைவர்ட் பண்ண தான் வந்து இதெல்லாம் செஞ்சுட்டு இருப்ப போல, அதே போல நானும் செஞ்சா சரியா போயிடுவேன்னு நீ நினைக்கலாம். ஆனா எனக்கு அம்மா இருந்த இடத்தில இருந்தா தான் பெட்டரா ஃபீல் ஆகும். உன்னை சும்மா குடைய மாட்டேன். ஆனா சீக்கிரம் இதெல்லாம் முடிச்சிட்டு வா நம்ம வீட்டுக்கு போகலாம்." என்று சொல்லிவிட்டு அவன் மீது சாய்ந்து நின்றாள்.
 
இந்த மாற்றமே ரவீந்தருக்கு அதிசயமாகத் தோன்றியது.
 
"நாளைக்கு எங்கயாவது சைட் சீயிங் போகலாமா? நீயும் வி-லாக் போடுவல்ல?" என்ற உரிமையாக கேட்ட தங்கையை வாஞ்சையாக நோக்கியவன்,
 
"நாளைக்கு மோட்டார் போடுறவங்க, டாய்லட் கட்ட வர்ற ஆளுங்க எல்லாம் வருவாங்க. இன்னும் ரெண்டு நாளைக்கு வேலை இருக்கு ராகினி. வெள்ளிக்கிழமை பெரியப்பா வர்றேன்னு சொன்னாரு. எல்லாரும் சேர்ந்து போவோம்." என்று கூறவும் சட்டென்று ராகினி முகம் மாறியது. அதை கவனித்த ரவீந்தர்,
 
"இங்க பாரு ராகினி, நான் பெரியப்பா கூட அதிகம் நெருக்கமா இருக்க காரணம் பெரியப்பா பெரியம்மா கிடையாது. நம்ம அப்பா அம்மா தான். உனக்கு வேணும்னா அவங்க நல்ல பேரெண்ட்ஸா இருந்திருக்கலாம். ஆனா ஆரம்பத்துல வேலைக்காரங்க மத்தியில மட்டுமே நான் வளர்ந்துட்டு இருந்தேன். முதல் முதல்ல எனக்கு அம்மா பாசம் காட்டினது என் பெரியம்மா. அப்பாவா கையை பிடிச்சு நல்லது கெட்டது சொல்லிக் கொடுத்தது பெரியப்பா. அவங்களுக்கு குழந்தை இல்லன்னு அவங்க ஒன்னும் என்னை அம்மா கிட்ட இருந்து பிரிக்கல. நான் தான் சொந்த அம்மா அப்பா கிட்ட அன்பை உணர்ந்துக்க முடியாம அவங்க கிட்ட போனேன். அம்மா சொன்னாங்க, அப்பா சொன்னாருன்னு இனிமே பெரியவங்களை நீ மனவருத்தப் பட வைக்காத. நமக்கு உள்ள ஒரே சொந்தம் அவங்க தான்." என்று அவளுக்கு புரியும் படி எடுத்துக் கூறினான்.
 
"அது எப்படி? தாய் மாமா இருக்காரு, சித்தி இருக்காங்க.." என்று அவள் ஆரம்பிக்க,
 
"உனக்கு நிறைய விஷயம் தெரியல. புரியவும் இல்ல. ஒன்னு சொல்றத கேளு, இல்லன்னா பட்டு தான் தெரிஞ்சுக்கணும். அது ரொம்ப வலிக்கும் ராகினி." என்று சொல்லிவிட்டு வேனுக்கு சென்றான்.
 
ஏனோ ராகினிக்கு அவன் கூற்று விளங்கவில்லை. ஆனாலும் காலையில் எழில் கேட்ட கேள்வி அவள் மனதில் பெரிய மாற்றத்தை கொண்டு வந்திருந்தது.
 
'அவர் உன்னோட அண்ணன், அவரை நீ நம்பலையா?'
 
'அவனை நம்பாம இனிமே யாரை நம்ப முடியும்? அவன் ஒருத்தன் தானே இனிமே குடும்பம். மத்தவங்க எல்லாம் சொந்தக்காரங்க. அவ்வளவு தானே!' எண்ணிக் கொண்டு எழிலைக் காண அவ்வீடு நோக்கி வந்தவள் சரோஜாவின் குரல் கேட்டு வேலி ஓரமே நின்றாள்.
 
"என்ன நெஞ்சழுத்தம் இருந்தா நீ அந்த தர்மாவை போய் பார்த்து பேசிட்டு வருவ? இன்னிக்கு என்னை பஸ் ஸ்டாப்ல வச்சு அசிங்கமா கேட்டுட்டான். உங்க குடும்பத்துக்கு கடை ஒரு கேடான்னு. இப்படி அவன் வாயில விழ வச்சுட்டல்ல?" என்று கத்த, எழில் பதிலே சொல்லாமல் அரிசியை புடைத்துக் கொண்டிருந்தாள்.
 
"ஏய் உன்னைத் தான் டி" என்று அவள் முன்னே அவர் ஆவேசமாக வர,
 
"அம்மா உன்னை எதுவும் பேசக் கூடாதுன்னு ஒரு முடிவுல இருக்கேன் மா. என்னை பேச வைக்காத. தர்மா அண்ணன் என்னை குத்தம் சொல்ல நீ தான் காரணம்னு உன்னோட சண்டை போட எனக்கு எவ்வளவு நேரம் ஆகும்? ஆனா என் எண்ணம் அது இல்ல. நீயும் இப்படியெல்லாம் நடக்கும்னு நெனச்சு செய்யல. அதனால தான் நான் அமைதியா போறேன். தப்பு பண்ணிட்டேன்னு இல்ல. நான் தப்பும் பண்ணல. உன் மனசாட்சிக்கு தெரியும் நான் என்ன பண்ணினேன்னு." என்று எழுந்து உள்ளே போனாள்.
 
'பாவம் இந்த அக்கா. நிறைய பிரச்சனை இருக்கும் போல. ஆனாலும் இந்த லேடி ஓவரா பேசுது, உண்மையிலேயே அந்தக்கா சொன்ன மாதிரி அம்மா தானா? இல்ல இவங்களுக்கு தெரியாம அவங்க சித்தியா இருப்பாங்காளோ?' என்று எண்ணிக்கொண்டு டென்ட்டை நோக்கி நடந்தாள் ராகினி.

 

Comments

Popular posts from this blog

மேற்கே உன் சாரல்மழை -1

மேற்கே உன் சாரல்மழை 7

மேற்கே உன் சாரல்மழை 2