சாரல் 10 | Tamil Novel | Jeyalakshmi Karthik Novels

சாரல் 10



ராகினி கோபத்துடன் எழில் வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருக்க, உள்ளே எழில் புகழோடு பேசுவது கேட்டது.

"சாப்பிட்டு வீட்டுல இரு புகழ். நான் கொஞ்சம் வெளில போயிட்டு வர்றேன். வந்ததும் நாம கடையை விசாரிக்க போகலாம்" என்று கூற,

"அக்கா நீ எங்க வெளில போற? வேண்டாம் யாரும் எதுவும் சொல்ல போறாங்க. அப்பறம் நீ தான் அழுதுகிட்டு இருப்ப." என்று அவளை தன் அருகில் அமர வைத்தான்.

"இல்ல புகழ் ஊருக்குள்ள போக மாட்டேன். இங்க தான் ஓடைக்கு போறேன். கொஞ்ச நேரம் தான் டா." என்று அவனது தலையைக் கலைத்தவள், "கிளம்புறேன்" என்று புடவை முந்தியை உதறி சொருகிக் கொண்டு வாசலுக்கு வந்து செருப்பை மாட்டினாள்.

திண்ணையில் ராகினி அமர்ந்திருப்பதைப் பார்த்தவள்,

"ராகினி வந்துட்டியா? வா போகலாம்." என்று அவள் கையைப் பற்றி அழைத்துச் செல்ல சின்னப் பிள்ளையின் குதூகலத்துடன் இளையவளும் இணைந்து கொண்டாள்.

சிறு ஓடை தான் என்றாலும் நீரில் சலசலப்பு, பாறைகளின் வழியே நீர் வழியும் அழகு என்று அவ்விடம் கொள்ளை அழகாக இருந்தது.

"தினமும் இவ்வளவு தூரம் வருவீங்களா அக்கா?" என்று ராகினி கண்ணை விரித்துக் கேட்க,

"ம்ம், வீட்டுக்கு நான் கொண்டு வர்ற தண்ணி அவசியம் இல்ல டா. ஆனாலும் எனக்கு தினமும் இங்க வந்து பார்த்து எடுத்துட்டு போறது ஒரு சுகம்." என்று லேசாக குளிரடிக்கவும் தேகம் சிலிர்த்து தன்னையே இறுக்கமாக பற்றிக் கொண்டாள் எழில்.

"நீங்க ஏன் கா இங்க குடி இருக்கீங்க? ஊரு தள்ளி இருக்கும் போல. சொந்த இடமா?" என்று கேள்விகளை ராகினி அடுக்க,

"முன்னாடி ஊருக்குள்ள தான் குடி இருந்தோம். தம்பி காலேஜ் போனதும் வீட்ல பணக் கஷ்டம். இந்த வீடு தான் மலிவு வாடகையில கிடைச்சது. அதுவும் இல்லாம.. எங்க சூழ்நிலைக்கு இது ரொம்பவே ஒத்து வந்தது. அப்படியே இருந்துட்டோம்." என்று எங்கோ பார்த்து ஏதோ நினைவுகள் நெஞ்சில் தளும்ப நின்றிருந்தாள் எழிலிசை.

"எனக்கு இங்க என்ன தான் அழகா இருந்தாலும் பிடிக்கவே இல்ல கா. எங்க வீட்டுக்கு போகணும். என் பெட் பக்கத்துல அம்மாவும் நானும் இருக்குற போட்டோ ஒன்னு இருக்கும், ராத்திரி அதை பார்த்துகிட்டே படுத்தா தான் தூக்கம் வரும்." என்று அவளும் வெளிப்படையாகவே தன் விருப்பம் இல்லாமல் இங்கே இருப்பதைக் கூறினாள்.

"சொல்றேன்னு தப்பா நினைக்காத ராகினி. உன் அண்ணன் உன் கேள்விக்கு பதில் சொல்லலன்னு சொல்ற, அப்ப ஏதோ பிரச்சனைன்னு உனக்கே புரிய வேண்டாமா? அவங்களை கேள்வி மேல கேள்வி கேட்டு நீ ஏன் சங்கடப்படுத்துற? சரியான நேரம் வந்தா சொல்லுவாங்க தானே! உன் அண்ணன் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா?" என்று அவளது கரத்தை தன் கைகளுக்குள் பொத்தி வைத்து வினவினாள்.

"எனக்கு தெரியல அக்கா. ஆனா எனக்கு வீட்டுக்கு போகணும். அங்க இருந்தா தான் அம்மா கூட இருக்குற ஃபீல் இருக்கும். இங்க இருந்தா ரொம்ப பயமா இருக்கு." என்று எழில் தோள்களில் சாய்ந்து அழுதாள்.

அவளுக்கு என்ன ஆறுதல் சொல்வதென்று தெரியாமல் எழில் அவள் முதுகை மட்டும் தட்டிக் கொடுத்தாள்.

அவளே சற்று நேரத்தில் சமாதானமானதும், "பொறுமையா இரு ராகினி. எனக்கு தெரிஞ்சு நீ லைப்ல எந்த கஷ்டத்தையும் பார்த்திருக்க மாட்ட போல, அதான் இடம் மாறினதையே உன்னால ஏத்துக்க முடியல. வாழ்க்கையில நாம ஆசைப்படுறத கொடுக்காட்டி கூட பரவாயில்லை, சில நேரம் எதிர்பார்க்காம பெரிய சிக்கல்ல மாட்டி நம்ம வாழ்க்கையையே புரட்டி போட்டுடும். அதுனால கொஞ்சம் பொறுமையா இரு. எங்க இருந்தாலும் அம்மா மனசு உன்னோட தானே இருக்கும். அப்படி யோசி." என்று அவளை தட்டிக்கொடுத்து வீடு நோக்கி நடந்தாள் எழில்.

அவளை அவர்கள் இடத்துக்கு அனுப்பிவிட்டு திரும்பும்போது தான் போர் போடும் இயந்திரம் வந்திருப்பதை கவனித்தாள்.

'இவளோட அண்ணன் இங்கேயே தங்க முடிவு பண்ணிட்டாரு போல, ஆனா இவ இருக்கவே மாட்டேன்னு அடம் பிடிக்கிறா? என்ன செய்ய போறாரோ?' என்று நினைத்து, 'அம்மா மாசாணி நீ தான் அவருக்கு எந்த கஷ்டமும் வராம பார்த்துக்கணும்.' என்று எண்ணிக்கொண்டு வீட்டிற்கு சென்றாள்.

புகழ் தயாராக அமர்ந்திருக்க, அவனை அழைத்து வீட்டை பூட்டிக் கொண்டு அவனது வாகனத்தில் ஏறினாள்.

இருவரும் ஏதோ பேசிக்கொண்டு பரம்பிகுளம் ரோட்டுக்கு வந்து சேர்ந்திருந்தனர். 

"அக்கா நீ சொன்ன கடை எது?" என்று புகழ் பின்னால் திரும்பி எழிலிடம் வினவ,

"இன்னும் கொஞ்சம் முன்னாடி போ புகழ். அசோக் காம்ப்ளெக்ஸ்ன்னு இருக்கும் பாரு" என்று தம்பிக்கு சொல்லியபடி வழியை கவனமாக பார்த்துக் கொண்டு வந்தாள்.

"அசோக் காம்ப்ளெக்ஸ்னா நம்ம தர்மா அண்ணனோடது தானே? அங்க ஏன் கா பார்க்க சொல்ற? அடிக்கடி தர்மா அண்ணனை பார்க்க வேண்டி வரும். அவர் இன்னும் நம்மளோட பழையபடி பேசுறது இல்லையே! ஏதாவது பிரச்சனை வந்துடப் போகுது கா." என்று தன் தமக்கைக்கு கூறிக்கொண்டே அசோக் காம்ப்ளெக்ஸ் முன்னால் வாகனத்தை நிறுத்தினான்.

"அவர் என்ன வேணாலும் நினைக்கட்டும். இனிமே புதுசா என்ன பிரச்சனை வந்திடப் போகுது புகழ்? எல்லாம் பார்த்தாச்சு, கேட்கக் கூடாதத எல்லாம் கேட்டாச்சு. நீ வா இந்த கடை என்ன விவரம்ன்னு பார்ப்போம்." என்று தம்பியை கைபற்றி அழைத்துச் சென்றாள்

காம்ப்ளெக்ஸ் மேனேஜர் அறையில் வயதான சாலமன் அமர்ந்திருக்க, "தாத்தா" என்று உரிமையாக உள்ளே நுழைந்தாள் எழில்.

"அட எழில் பாப்பா. எப்படி இருக்க? இப்படி உன்னை சிரிச்ச முகமா பார்த்து எத்தனை நாளாச்சு.. ஹ்ம்ம் பார்த்தே நாளாச்சுதே மா" என்று பெருமூச்சு விட்டார்.

"நான் நல்லா இருக்கேன் தாத்தா. நம்ம காம்ப்ளெக்ஸ்ல கடை ஒன்னு வாடகைக்கு இருக்குன்னு கேள்விப்பட்டேன். தம்பிக்கு எலக்ட்ரிகல் கடை வைக்க யோசிச்சுட்டு இருக்கோம். அதான் வாடகை விபரம், அட்வான்ஸ் எல்லாம் கேட்டுட்டு போக வந்தோம்." என்று அவள் சிரித்த முகமாக கூற,

"கடை வாடகைக்கு இல்லயே. இருந்தாலும் உனக்கு தர்ற மாதிரி எனக்கு யோசனை இல்ல. அதுனால நீயும் உன் அருமை தம்பியும் வெளில போகலாம்." என்று பின்னால் இருந்து குரல் வந்தது. 

அது யாரென்று நன்கு அறிந்த எழில் கண்களில் சேர்ந்த கண்ணீரை உள்ளே இழுத்துக்கொண்டு, "தர்மா அண்ணே, நான் இங்க உன்கிட்ட பழகின பழக்கத்துக்கு உதவி கேட்டு வரல. இந்த காம்ப்ளெக்ஸ் கடையை வாடகைக்கு கேட்டு ஒரு கஸ்டமரா வந்திருக்கேன். நீயும் கடை ஓனரா விலை சொல்லு. நம்ம உறவு இங்க ஓனர், வாடகைதாரர் தானே தவிர வேற இல்ல. நீ தான் சொல்லுவ பெர்சனல் வேற, வியாபாரம் வேறன்னு.." என்று திரும்பாமல் கண்களை மூடிக்கொண்டு பேசினாள் எழில்.

"இந்த பேச்சு.. இதை வச்சு தானே எல்லாம்... உன்னை நல்லவனு நம்பி.." என்று ஏதோ ஆரம்பிக்க,

"அக்கா வாங்க போகலாம். எவ்வளவு சொன்னாலும் சிலருக்கு புரியாது. நான் தான் வேண்டாம்னு சொன்னேன்ல?" என்று புகழ் அவள் கையைப் பற்றி இழுக்க,

"யாரு டா பேசுறது? நம்ம தர்மா அண்ணன் தானே? விடு டா. நமக்கு கடை தான் முக்கியம்." என்று உடும்புப் பிடியாக நின்றாள் எழில்.

"ச்ச.." என்று சலித்த தர்மா, "வாடகை பதினஞ்சு, அட்வான்ஸ் பெரிய ஒரு ரூபா. உங்களால கொடுக்க முடியுமா?" என்று நக்கலாக வினவினான்.

"சீக்கிரம் பணத்தோட வர்றோம்." என்று சாலமனுக்கு வணக்கம் வைத்துவிட்டு எழில் வெளியேற, தர்மாவை சாலமன் அதிருப்தியாக நோக்கினார்.

"ஏன் தம்பி, அதுவே சின்ன கடை. வாடகை ஏழு ஆயிரம், அட்வான்ஸ் அம்பது தானே அப்பா சொல்லி இருந்தாரு. நீங்க ரெண்டு மடங்கா சொல்றீங்க?" என்று வருத்தமாக வினவ,

"தாத்தா, அவ யாருன்னு தெரியும்ல? அவளை நான் தினமும் பார்த்து என் நிம்மதி போகணுமா? இந்த விலைக்கு அவ வரவே மாட்டா. அதான் எனக்கு வேணும்." என்று வேட்டியை தூக்கிப் பிடித்துக்கொண்டு தன் அலுவல் அறைக்குச் சென்றான் தர்மா.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சாரல் 1

சாரல் 2 | Tamil Novel | Jeyalakshmi Karthik Novels

சாரல் 7 | Tamil Novel | Jeyalakshmi Karthik Novels