மேற்கே உன் சாரல்மழை 8
சாரல் 8
செல்ஃபி ஸ்டிக்கை மடித்து உள்ளே வைத்த ரவீந்திருக்கு பின்னே வந்து நின்றாள் ராகனி.
"அண்ணா எப்ப சென்னை போறோம்?" என்றாள் கோபமாக,
அவளுக்கு அவன் பதிலளிக்க வாய் திறந்த நேரம், நேற்று அவன் காட்டிய இடத்தில் குழி தோண்டி கான்கிரீட் போட்டு விட்டுப் போனதை சரிபார்த்து நீர் விட அந்த மேஸ்திரி வேலியின் உள்ளே நுழைந்தார்.
"வணக்கம் தம்பி" என்று மரியாதை நிமித்தம் கூறியவர்,
"பின்னால உள்ள ஓடையில தண்ணி எடுத்துட்டு வர்றேன் தம்பி. இங்க உங்க தேவைக்கு தண்ணிக்கு என்ன செய்ய போறீங்க? ஏற்பாடு பண்ணியாச்சா?" என்று கரிசனையாக விசாரித்தார்.
அவர் பேச்சில் ராகினி முகம் சுருங்கி, இவன் இப்பொழுது தனக்கு பதிலளிக்க மாட்டான் என்று கோபம் கொண்டு வேகமாக அங்கிருந்து வெளியே சென்றாள்.
அவன் அவரிடம், "ஆமா அண்ணா, இன்னிக்கு போர் போட ஆள் வர்றாங்க. இந்த கான்கிரீட் எப்ப அண்ணா செட் ஆகும்? ஏன்னா நான் அப்ப தான் கம்பெனில சொல்லி ஷிப்மெண்ட் பண்ண சொல்ல முடியும்" என்று யோசனையாகக் கூறினான்.
"இன்னும் ஒரு நாள்ல எல்லாமே செட் ஆகிடும் தம்பி. நீங்க தான் வெறும் பேஸ்மட்டம் போட்டா போதும்ன்னு சொல்றீங்க. அது கூட எப்பவும் போடுற ஆழம் இல்லாம, இத்தனை சின்னதா நான் இதுவரை போட்டதே இல்ல. என்ன கணக்கு தம்பி உங்களோடது?" என்று புரியாமல் அவர் அவனிடம் வினவினார்.
"நாளைக்கு நீங்களே பாருங்க அண்ணா" என்று சிரித்தான் ரவீந்தர்.
இது அவனின் பல நாள் கனவு. ஆனால் அதற்கு அவன் வைத்திருந்த காலக்கெடு தான் மிகவும் சீக்கிரம் வந்துவிட்டது.
என்ன தான் அவன் அதனை விரும்பி இருந்தாலும், அவன் அதிகம் ஆசைப்பட்டது உலகம் சுற்றும் வாலிபனாக இருக்க வேண்டும் என்பதே.
இவன் இங்கே வேலையில் கவனமாக இருக்க அங்கே மெல்ல நடந்து அந்த வீட்டின் திண்ணை முன்பு வந்து நின்றாள் ராகினி.
உள்ளே வேலையாக இருந்த எழிலிசை வாசலில் ஏதோ நிலழாடுவது போல உணர்ந்து வெளியே வந்தாள்.
ராகினியைக் கண்டவள் முகத்தில் மலர்ந்த புன்னகையுடன்,
"உள்ள வர்றீங்களா? தயங்காம வாங்க." என்று அழைக்க,
குரல் கேட்டு திரும்பிய ராகினி அழகோவியமாக நின்ற எழிலைக் கண்டு,
"வாவ்.. நீங்க தானே செம்ம கியூட்டா நேத்து தண்ணி குடத்தோட நடந்து போனது" என்று நினைவு வைத்து வினவினாள்.
"நான் தான் எப்பவும் ஓடையில் இருந்து தண்ணி எடுத்துட்டு வருவேன். ஆனா நீங்க என்னைத் தான் பார்த்திங்களான்னு தெரியலையே!" என்று புன்னகைத்தாள் எழில்.
"உங்க சிரிப்பு ரொம்ப அழகா இருக்கு." என்று திண்ணையில் அமர்ந்தாள் ராகினி.
"உங்க பேர் என்ன?" என்று அவளுக்கு எதிர் திண்ணையில் அமர்ந்து எழில் விசாரிக்க,
"என் பேர் ராகினி. சும்மா நீ வான்னு பேசுங்க. எனக்கு இங்க செமையா போர் அடிக்கிகுது." என்று சலிப்பாக கூறினாள்.
"பின்னாடி உள்ள ஓடை, அதோ அந்த குன்று எல்லாம் போய் பாரு ராகினி. ரொம்ப அழகா இருக்கும். அந்த குன்றுல ஒரு வேல் இருக்கும். அங்க வேண்டினா எல்லாமே நடக்கும்ன்னு சொல்லுவாங்க." என்று புதிய பெண்ணிடம் பேசுவது போல இல்லாமல் எழில் சரளமாக பேசிக்கொண்டிருந்தாள்.
ராகினி அவளை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். சென்னையில் தான் பழகும் வட்டம் அனைவரும் முகத்தில் மேக் அப் இல்லாமல் தங்கள் படுக்கையறையை விட்டு வெளி வர மாட்டார்கள். ஆனால் இவரோ முகத்தில் சின்னதாக பவுடர் பூச்சு கூட இல்லாமல் இத்தனை அழகாய் ஜொலிக்கிறார். பேச்சில் தெரிந்த நட்பு ராகினி யின் முகத்தில் புன்னகையை உறைய வைத்தது.
"நீங்க சொல்றது உண்மையாவே அழகா இருக்கலாம். பார்த்தா பொழுது கூட போகலாம். ஆனா தனியா போய் என்ன பண்ணட்டும்?" என்று சிணுங்கினாள் ராகினி.
"இன்னொரு அரை மணி நேரம் பொறுத்தா நானும் வர்றேன்." என்ற எழிலின் குரலில் பழைய உற்சாகம். ஆனால் எல்லாம் உள்ளிருந்து சரோஜாவின் குரல் கேட்கும் வரை தான்.
"என்ன டி வாசல்ல ஒரே பேச்சு சத்தம்? யார் கிட்ட பல்லைக் காட்டிக்கிட்டு இருக்க? ஏற்கனவே ஊரு தாறுமாறா பேசுது. இன்னும் வேற எனக்கு இம்சையை இழுத்து வைக்காத." என்று வெளியே தலையை நீட்டினார்.
அங்கே ராகினியை கண்டதும், "நீயா பாப்பா?" என்று அவர் தான் அனைத்து பல்லையும் காட்டினார்.
ஏனோ ராகினிக்கு அவரை பார்த்தவுடன் பிடிக்கவில்லை. நேற்றைய சந்திப்பில் தோன்றாத கசப்புணர்வு இன்று தோன்றி விட,
"அக்கா நான் அங்க தான் டென்ட்டுல இருப்பேன். நீங்க வேலையை முடிச்சிட்டு வர்றீங்களா?" என்று எழிலிடம் சொல்லிவிட்டு எழுந்து சென்றாள்.
"என்ன டி நான் வந்ததும் மூஞ்சியை தூக்கிட்டு போறா. என்னத்த சொன்ன?" என்று எழிலையே கேள்வி கேட்டார்.
எழில் பதில் சொல்லாமல் உள்ளே செல்ல, "ரொம்ப தான்." என்று தாடையை தோளில் இடித்துக் கொண்டு தன் மதிய உணவுப் பையுடன் வேலைக்கு கிளம்பினார்.
அவர் கிளம்பியதும் வாசலில் வந்து அமர்ந்த எழில், புகழ் வந்ததும் அவனுக்கு உணவை கொடுத்துவிட்டு ராகினியுடன் வெளியே செல்ல எண்ணினாள்.
அரை மணி நேரம் கடந்தும் அவன் வராமல் போக, எழுந்து டென்ட்டுக்கு அருகே இருந்த வேலியோரம் நின்று ராகினியை அழைத்தாள்.
"சொல்லுங்க கா" என்று ஆசையாக வந்தவளிடம்,
"என் தம்பி இன்னும் சாப்பிட வரல. வந்ததும் வர்றேன். நேரமாச்சுன்னா நாளைக்கு போகலாம்" என்று தயக்கமாக கூறினாள்.
"எனக்கு இங்க ரொம்ப போர் அடிக்குது கா. நான் உங்க கூட அங்க வந்து இருக்கலாம்ன்னு நெனச்சேன். ஆனா உங்க அம்மா.. அம்மா தானே? இல்ல சித்தியா?" என்று அவள் சந்தேகமாக கேட்டதும் சிரித்து விட்டாள் எழிலிசை.
"என் அம்மா தான் ராகினி. என்னோட சின்ன சண்டை. அதான்." என்று அவள் பதிலுரைக்க,
"என் அம்மா என்னை அவ்ளோ கொஞ்சுவாங்க அக்கா. ஒரு தடவை கூட திட்டினதே கிடையாது. அதான் அவங்க உங்களை திட்டவும் அம்மா இல்லையோன்னு நெனச்சேன்." என்று கண்களை சிமிட்டி சிரித்தாள்.
"அம்மாவாவே இருந்தாலும் எப்பவும் கொஞ்சிக்கிட்டே இருக்க மாட்டாங்க ராகினி. தப்பு பண்ணினா கண்டிக்க தானே செய்வாங்க?" என்று வேலிக்காக ஊனிய கல் தூணில் சாய்ந்து நின்றாள் எழில்.
"நான் தப்பே பண்ணினாலும் அம்மா எனக்கு தான் சப்போர்ட் பண்ணுவாங்க. அவங்களுக்கு என்னை அவ்வளவு பிடிக்கும். ஆனா இப்போ தான் அம்மா இல்ல. இருந்திருந்தா என்னை இப்படி காட்டுக்குள்ள கொண்டு வந்து விட்டுட்டு அண்ணா செல்ஃபி ஸ்டிக்கோட அலையுமா?" என்று கண்களின் ஓரம் துளிர்த்த கண்ணீரைத் துடைத்தாள்.
'அவர்கள் அன்னை இறந்து விட்டாரா?' என்று திடுக்கிட்ட எழில்,
"அம்மாக்கு என்ன ஆச்சு ராகினி?" என்று கேட்க, அவளுக்கு தெரிந்ததை சொல்லத் துவங்கினாள்.
- பொழியும்
Comments
Post a Comment