சாரல் 6 | Tamil Novel | Jeyalakshmi Karthik Novels
சாரல் 6
இரவு நேரத்து வானில் நிலவு பாலாய் உருகி வெளிச்சத்தை பரப்பிக் கொண்டிருந்தது. தந்தைக்கு கூடத்தில் அமர்ந்து உணவு பரிமாறிக் கொண்டிருந்தாள் எழில்.
"ஏன்மா நூல் எல்லாம் சரியா இருந்ததா? எல்லாமே நீ சொன்ன கலர் தானே? இன்னிக்கு வேலை பார்க்கும் போது சவுகரியமா இருந்ததா?" என்று ஶ்ரீதரன் மகளை கேட்டுக்கொண்டே உணவை ஒரு கவளம் எடுத்து வாயில் வைத்தார்.
"ஆமா பெரிய பட்டும் பவுசும் தான். இவ போடுற எம்பிராய்டரிக்கு இந்த பேச்சு." என்று சமையலறையில் பாத்திரங்களை உருட்டி நொடித்துக்கொண்டார் சரோஜா.
எழில் தலை தாழ்த்தி அமர்ந்து விட, "அவ கிடக்கறா விடு செல்லம்" என்று மகளை சமாதானம் செய்தவர் மனைவியை கண்டிக்க முடியாத தன் நிலையை எண்ணி வருந்தினார்.
முன்பெல்லாம் சரோஜா என்ன பேசினாலும் கேட்டுகொள்வார், ஏனெனில் அவருக்கு வரும் சொற்ப வருமானத்தை வைத்து இரு பிள்ளைகளை வளர்த்த சரோஜாவின் சாதுர்யம் தனக்கு வராது என்று அவர் எண்ணியதுண்டு.
ஆனால் அது எல்லாமே புகழின் படிப்பை முதன்மையாக வைத்து அவர் பிள்ளைகளுக்குள் பேதம் பார்த்த போதே சுக்கு நூறாக உடைந்து போனது.
அதிலும் அதன் பின் சரோஜா செய்த காரியங்கள் சிலவற்றால் வீட்டின் நிம்மதி பறிபோனது மட்டுமின்றி ஊரில் இருந்த நல்ல பெயர் கெட்டு, இதோ எழில் இப்படி ஒடுங்கிப் போக, ஶ்ரீதரன் அதற்கு மேல் பொறுமை இல்லாமல் சரோஜாவை கண்டித்து பேசி விட்டார்.
அதற்கும் சரோஜா எதிர்த்துப் பேச, அன்று முதல் அவரிடம் பேசுவதை தவிர்த்து விட்டார்.
அன்றில் இருந்து அவரது தேவைகளை கவனித்துக் கொள்வது எழில் தான். சமையல் யார் செய்தாலும் எழில் தான் அவருக்கு பரிமாற வேண்டும். சரோஜாவுக்கு தன்னை அவர் தவிர்ப்பது கோபத்தை அதிகரித்தது.
வேலைக்கு சென்ற மகனையும் இழுத்து வந்து விட்டார் என்று மேலும் அவர் சீற, ஒருநாள் ஶ்ரீதரன் வீட்டில் ஆடிய ருத்ரதாண்டவத்தில் வாயை மூடிக் கொண்டவர் தான். இன்று வரை அவர் முன்னே எதுவும் பேசுவதில்லை. சில நேரம் புலம்பி விடுவார், அல்லது எழிலை குத்தி பேசிவிடுவார்.
"அப்பா.." என்று எழில் ஆரம்பிக்க துவங்கி பின் தயங்கி நிறுத்தினாள்.
"என்னம்மா? அப்பா கிட்ட கேட்க என்ன தயக்கம்?" என்று மகளை அவர் ஆதுரமாக நோக்க,
"புகழை அவன் இஷ்டத்துக்கு வெளியூர் வேலைக்கு அனுப்பி விடுங்க பா" என்று தயங்கிக் கூறினாள்.
"ஏன் மா அவனுக்கு அவ்வளவு சாமர்த்தியம் இருந்திருந்தா நான் ஏன் மா அவனை கூட்டிகிட்டு வந்திருக்க போறேன்?" என்று தன் வருத்தத்தை அவர் தெரிவிக்க,
"எத்தனை நாள் அவனை கட்டிப்போட்டு இப்படி வச்சிருக்க முடியும் பா? அவனுக்கும் வயசாகுது. வெளியுலக அறிவு நாலு தடவை அடிபட்டா தான் வரும். விடுங்க பா. விழுந்து எழுந்து கத்துக்கட்டும்." என்றவளை தந்தை கூர்ந்து நோக்க, மறைக்க முடியாமல் மெல்ல காரணத்தை சொல்ல ஆரம்பித்தாள்.
"இங்கேயும் அவன் சேர்க்கை சரி இல்ல பா. தினமும் ராத்திரி தண்ணி பழக்கம் போல தெரியுது. ஒன்னும் இல்லாம விரக்தியில அவன் கெட்டுப் போறதுக்கு, அட்லீஸ்ட் அவன் மனசுக்கு பிடிச்சதை செஞ்சிட்டு என்னவோ பண்ணட்டும் பா." என்று அவரது இடது கையை அழுத்தமாகப் பற்றிக்கொண்டாள்.
அவர் கண்களில் தெரியும் வலியை உணர்ந்தவள், "நான் இருக்கேன் பா உங்களுக்கு." என்று சொன்னதும்,
உடைந்த அவர் மனதை அவள் வார்த்தைகள் எத்தனை இதமாய் வருடியதென்று அவர் மட்டுமே அறிவார்.
தந்தை மகள் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த சரோஜா, "நல்லா சொல்லு டி எழிலு. அவன் நாலு மாசம் கஷ்டபட்டு காலை ஊனிட்டு பணத்தை அனுப்பி இருப்பான். இவரா போய் அவனை இழுத்துக்கிட்டு வந்து இத்தனை நாளா அவன் வாழ்க்கையை கெடுக்கறார். " என்று குறுக்கே பாய, சாப்பிட்டு முடித்து கை அலம்ப எழுந்து கொண்டிருந்த ஶ்ரீதரன் தன் கையில் இருந்த தட்டை சரோஜாவை நோக்கி விசிறி அடித்தார்.
"உங்க அம்மாவை வாயை மூடிக்கிட்டு போக சொல்லு. வர்ற கோபத்துக்கு அடுத்து எதை எறிவேன்னு தெரியாது." என்று நகரப் போனவரை நிறுத்தினாள் எழில்.
"போய் அந்த தட்டை எடுங்க பா. அம்மா மேல கோவம்னா அதை அவங்க கிட்ட காட்டுங்க, நீங்க சாப்பிட அன்னைத்தை ஏந்தின தட்டை விசிறி அடிக்கிறது உங்களுக்கு உதவி செய்யறதை அவமதிக்கிறது மாதிரி இருக்கு." என்று கண்டிப்புடன் கூற,
"சாரி செல்லம். நான் வேணும்ன்னு பண்ணல கோபத்துல யோசிக்காம செஞ்சிட்டேன்." என்று அதனை எடுத்து கழுவி வைத்துவிட்டுச் சென்றார்.
"அவனை போக சொல்லு செல்லம். ஆனா நாளைக்கே எதுவும் பிரச்சனை வந்தா அப்பா இருக்காரு காப்பாத்துவாருன்னு கனவு காணக் கூடாதுன்னு சொல்லிடு. அவன் வீட்டுக்கு காசு கொடுக்கலன்னு அவனைத் தேடி நான் போகல. அவனைப் பத்தி எனக்குத் தெரிஞ்சு போன் பண்ணி சொன்னதால் தான் போய் கூட்டிகிட்டு வந்தேன்." என்று மனைவிக்கும் கேட்கும்படி கூறினார் ஶ்ரீதரன்.
சரோஜா முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி. இனி தன் மகன் வெளியூர் போய் சம்பாதித்து வந்து தன் கடனை எல்லாம் அடைத்து விடுவான் என்று மனப்பால் குடிக்க ஆரம்பித்தார்.
தம்பியைப் பற்றி நன்கறிந்த எழில், "அவனை கொஞ்சம் சரி பண்ணனும். நானே அவன் கிட்ட சொல்றேன். நீ அவசரப்பட்டு சொல்லி அவன் வாழ்க்கையை கெடுத்துடாத மா." என்று மெல்லிய குரலில் சொன்னதும்,
"வரவர உனக்கு வாய் கூடத்தான் இருக்கு எழிலு." என்று முகத்தை தோளில் இடித்துக்கொண்டு நகர்ந்தார் சரோஜா. ஏனென்றால் இதற்கு மேல் நின்றால் கண்டிப்பாக கணவர் அடுத்த கட்ட கோபத்தை காட்டி விடுவார் என்பதை இந்த சில காலத்தில் நன்கறிந்து இருந்தார்.
எப்பொழுதும் போல பின்னால் சென்று அமர்ந்து வானத்தை வெறிக்க ஆரம்பித்தாள் எழில். முன்பெல்லாம் எழிலிசை இப்படி தனிமையை நாடுபவள் கிடையாது. ஆனால் சமீப காலமாக அவள் தனிமையை கொண்டு தன்னை மெல்ல மெல்ல தேற்றி வருகிறாள்.
இரவு நேரத்தில் பக்கத்து நிலத்தில் வெளிச்சம் தெரிவதைக் கண்டு அவர்கள் இன்னும் கிளம்ப வில்லையா என்று அந்த வேலியோரம் நின்று பார்த்தாள் .
அங்கே ரவீந்தர் தன் அடுப்பில் எதையோ வைத்து சமைத்துக் கொண்டு இருந்தான்.
தன் தந்தையை அழைத்தவள், "அப்பா பக்கத்து இடம் வாங்கினவங்க வெறும் இடத்தில தங்கி இருக்காங்க போல. போய் என்னனு பார்த்துட்டு ஏதாவது உதவி வேணுமான்னு கேட்டுட்டு வாங்க." என்று அனுப்ப முனைய,
"நமக்கு எதுக்கு மா இந்த வீண் வேலை? அது எத்தனை ஏக்கர் நிலம்ன்னு உனக்கு தெரியும்ல? ஓடை வளைஞ்சு அவங்க நிலத்துக்குள்ள ஓடுது மா. பின்னாடி தெரியுது பாரு சின்ன குன்று அதுவும் கூட அவங்களுது தான். அப்ப அவங்க பெரிய பணக்காரங்களா இருப்பாங்க. நமக்கு ஏன் மா அவங்க சவகாசம்?" என்று தயங்கினாலும் உண்மை நிலையை மகளுக்கு விளக்கினார்.
"அப்பா நான் அதெல்லாம் தெரிஞ்சு தான் சொல்றேன். சும்மா யாரோ வந்திருந்தா சொல்ல மாட்டேன். வயசு பொண்ணு இருக்கு பா. அதான் அவங்க எப்படி இருந்தாலும் நாம உதவி செய்ய நினைப்போம்ன்னு சொன்னேன். தப்பா அப்பா?" என்று அவர் முகத்தை நோக்க, வேகமாக ஹாலுக்கு வந்து ஆணியில் மாட்டி இருந்த சட்டையை எடுத்து போட்டுக்கொண்டு வெளியே நடந்தார்.
'தனக்கு என்ன நடந்தாலும் யாருக்கும் கஷ்டம் வரக்கூடதுன்னு நினைக்கிற என் பொண்ணு மனசுக்கு அவளுக்கு எப்பவும் நல்லதை மட்டுமே செய் மாசாணியம்மா' என்று வேண்டிக் கொண்டு பக்கத்து நிலத்தின் வேலியை நெருங்கினார்.
- பொழியும்

கருத்துகள்
கருத்துரையிடுக