மேற்கே உன் சாரல்மழை 5

 சாரல் 5 



பரசுராம் சென்னையில் விரல் விட்டு எண்ணக்கூடிய மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவர். அவரது அன்பு மனைவி மேகலா. அவரும் பணக்காரக் குடும்பத்தில் சீமாட்டியாக வளர்ந்தவர்.


அவர்கள் திருமணம் நிகழ்ந்தவுடன் ஒரே வருடத்தில் பிறந்தவன் ரவீந்தர். அவனை சரியாக ஏந்தி எடுத்து இரண்டு வருடம் வளர்க்கவே மேகலா வெகுவாக சிரமப்பட்டார். எல்லாவற்றுக்கும் சுற்றி வேலையாட்கள். பகட்டான வாழ்க்கை வாழ்ந்த அவருக்கு வீட்டில் இருந்து எப்பொழுதும் குழந்தையை கவனிக்க முடியவில்லை. அதனால் பிறந்தது முதலே ரவீந்தர் அன்னை தந்தையிடம் இல்லாது வேலையாட்கள் அரவணைப்பில் வளர்ந்தான். அதனாலேயே அவன் யாருடனும் ஒட்டியது இல்லை.


பள்ளியில் இருந்து கல்லூரி வரை ஹாஸ்டல் வாசம். விடுமுறை விட்டாலும் அவனுக்கு பிடித்த பெரியப்பா ரகுராம் வீட்டுக்கு சென்று விடுவான். அவருக்கு குழந்தை இல்லை என்பதால் ரவீந்தர் என்றால் கொள்ளைப் பிரியம்.


அவர் பரசுராம் போல பணக்காரர் கிடையாது. வங்கி வேலையில் இருந்து நல்ல படியாக சேமித்து நிம்மதியாக வாழும் உயர் நடுத்தர வர்க்கம். அவரிடம் அவன் ஒட்டிக் கொண்டதால் பணத்தின் அருமை, சேமிப்பின் அவசியம்,  அத்தியாவசியத்துக்கும் வீண் செலவுக்கான வித்தியாசம் என்று பணத்தின் பண்புகள் தெரிந்து வளர்ந்தான்.


பெரியம்மா வைதீஸ்வரி, சாந்த குணமுடையவர். மைத்துனர் மகன் என்று எண்ணாமல் ரவீந்தரை தான் மகனாகவே பாவித்தார். ஆனாலும் வெளியில் அதனை அவ்வளவாக காட்டிகொள்ள மாட்டார். எங்கே பெற்றவர்கள் சண்டைக்கு வந்து விடுவார்களோ என்ற பயமாகவும் இருக்கலாம்.


படிப்பு முடிந்ததும் பெரியப்பாவின் கட்டாயத்தால் அவனுடைய வீட்டிற்கு வந்தவனுக்கு ஏதோ அந்நிய இடத்தில் இருப்பது போல ஒரு உணர்வு.


தொழிலை கவனித்த தந்தை பரசுராம், அவனுக்கு அதில் விருப்பமா என்று கேட்க, அவருக்கு பதில் சொல்லவே மிகவும் யோசித்தான் ரவி.


அங்கே அவனுக்கு பிடித்த ஒரு விஷயம் என்றால் அவனது குட்டி தங்கை ராகினி. அவனை விட ஏழு வயது சிறியவள். அவன் கல்லூரி முடித்து வந்த போது அவள் ஏழாவது படித்துக் கொண்டிருந்தாள்.


"அண்ணா" என்று ஆசையாக வந்தவளைக் கண்டு புன்னகைத்தான்.


அவன் தன்னுடைய பயண ஆசை பற்றி அமைதியாக தந்தைக்கு விளக்கியவன்,


"ஆரம்பத்துல ஆகுற செலவுக்கு லோன் போட்டுக்கிறேன்" என்றதும் தந்தை பரசுராம் சிரித்து விட்டார்.


"நீ லீவுக்கு கூட அண்ணன் வீட்டுக்கே போய் பழகினதால நம்ம வீட்டு நிலைமை தெரியல ரவி. நீ வேலைக்கு போகணும், பிஸ்னஸ் பண்ணனும் இப்படி எந்த கட்டாயமும் உனக்கு இல்ல டா. உனக்கு பிடிச்ச மாதிரி நீ என்ஜாய் பண்ணு. தப்பு மட்டும் பண்ணாத. எவ்வளவு பணம் தேவைப்படும்னு சொல்லு, நானே தர்றேன்" என்று அவர் ஆரம்பித்து வைத்தது தான் 'தொடரும் பயணங்கள்' யூட்யூப் சேனல்.


ஆசை ஆசையாக கேம்ப்பர் வேனை தயார் செய்து கொண்டே இருசக்கர வாகனத்தில் அருகில் உள்ள அழகிய இடங்களுக்கு சென்று மகிழ்ந்தான்.


மாதம் ஒருமுறை வீட்டிற்கு செல்பவன் நேரம் கிடைக்கும்போதெல்லாம் சென்று தங்குவது பெரியப்பா வீட்டில் தான்.


அதன் பின் வேன் தயாரானதும் அவன் பல ஊர்களுக்கும் சுற்றித் திரிந்து, வீடியோக்களை வலைதளங்களில் பதிவேற்றி ஒவ்வொரு நொடியும் வாழ்வை அனுபவித்தான்.


எல்லாம் போன மாதத்தோடு முடிவடைந்தது. பெரியப்பாவின் வழி நடத்தலில் தந்தையின் முப்பதாவது நாள் சாமி கும்பிட்டுவிட்டு சென்னையில் இருந்து கிளம்பி சேதுமடை வந்து விட்டான். 


ஆனால் இதன் பின்னால் இருக்கும் அவனது எண்ணம் என்ன என்று யாரும் அறிந்திலர்.


ஏன், ரகுராமுக்கு கூட இவன் இங்கே வந்தது இந்த நொடி வரை தெரியாது. சொல்லக் கூடாது என்று அவன் நினைக்கவில்லை. ஆனால் சொன்னால் தடுத்து விடுவாரோ என்ற பயம் இருந்தது. அவர் சொல்லி மறுக்க அவனுக்கு மனம் வராது. அதனால் அவரிடம் பின்னர் சொல்லி புரிய வைத்து கொள்ளலாம் என்று எண்ணிவிட்டான்.


ராகினி அன்னை தந்தை இறந்த அன்று அழுது அழுது ஆர்ப்பாட்டம் செய்து, மயங்கி மயங்கி விழுந்தாள். அவள் எழுந்ததும் பெரியப்பா பேசிய விஷயங்களை பேசலாம் என்று இருந்தவன் அவளது பூஞ்சை செயல்களைக் கண்டு இதெல்லாம் தாங்கும் மனநிலை அவளுக்கு இல்லை என்று உணர்ந்தவனாக தானே முன்னின்று அனைத்தையும் செய்து முடித்தான்.


இந்த இடம் விலைக்கு வருவது பற்றி அவனது சக யூட்யூப் நண்பர் 'உங்கள் விவசாயி' என்ற விவசாய சேனல் நடத்தும் உமாநாத் கூறினார். முதலில் அவனுக்கு தயக்கம் இருந்தாலும் இது ஒன்று தான் வழி என்று எண்ணி இந்த இடத்தை விலை பேசினான்.


இந்த இடம் அவனது பெயரில் வாங்கப்பட்டதும், அவன் கையிருப்பு என்ன என்று கணக்கு பார்த்து, இங்கேயே வந்துவிட முடிவெடுத்து கொண்டான். எப்பொழுதும் கேம்ப்பர் வேனில் தங்கி சுற்றும் அவனுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. 


ஆனால் எப்பொழுதும் ஏசி, கையை காட்டினால் வேலை செய்ய வேலையாள், பிடித்த உணவை சமைத்து தர சமையல்காரர், வேண்டும் மட்டும் ஷாப்பிங் செய்ய கிரெடிட் கார்ட், ஏறுவதும் இறங்குவதும் மட்டும் தான் அவள் வேலை என்பது போல எங்கு சென்றாலும் சொகுசு கார்.  இப்படிப் பழகிய ஒருத்தியை, 'சில நாட்கள் என் கேம்ப்பர் வேனில் தங்கி இருக்கலாம் வா' என்றால் அவள் அவனைப் போட்டுக் குடையாமல் என்ன செய்வாள்?


பெரிய அளவில் மன அழுத்தங்களை சந்திக்காதவன் ரவீந்தர். அவன் வரையில் அவன் சரியாக இருந்தே பழக்கப்பட்டதாலும், ஹாஸ்டல் வாழ்கையில் தங்கள் வேலைகளை தாங்களே கவனித்துக் கொள்ளவேண்டும் என்ற கொள்கையால் அவன் வாழ்க்கை இதுவரை தெளிந்த நீரோடையாக பயணித்துக் கொண்டிருந்தது.


ராகினியின் பிடிவாதம், வறட்டுக் கோபம், ஒருவேளை உணவுக்கு கூட யாராவது ஒருவரை அண்டியும், கெஞ்ச வைத்து அவளை உண்ண வைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் ரவீந்தருக்கு அவளை நினைத்தாலே மலைப்பாக இருந்தது.


இந்த இடத்தின் பத்திரப்பதிவு விஷயமாக பல நாள் கழித்து அவனது நண்பன் பங்கஜை பார்க்க நேர்ந்த போது மனம் விட்டு எல்லாவற்றையும் சொல்லி விட்டான்.


அவனும் நல்ல நண்பன் தான். ஆனால் சில தவறுகள் மனிதனிடம் இருப்பது இயல்பு தானே? அப்படித்தான் அவன் எப்பொழுதும் புகைபிடித்துக் கொண்டிருப்பதும். அவன் வேலை, அதில் இருக்கும் சிரமங்கள், அவன் மனைவியின் தேவைகள் என்று அவன் சுமக்க நிறையவே சுமைகள் இருந்ததால் எப்பொழுதும் புண்படும் அவன் மனதை புகை விட்டு ஆற்றுவான். அதையே நண்பனுக்கு சொல்ல, ஓரிரு முறை அதனை உபயோகித்து இருந்தான் ரவீந்தர்.


ஆனால் இன்று கேட்ட அந்த பக்கத்து வீட்டு பெண்ணின் குரல் சொன்ன விஷயம் அவனுக்கு நியாயமாக தோன்றவே, அதனை குப்பையில் வீசி விட்டான்.


மேலும் சில ஷாட்கள் எடுக்க வேண்டி இருந்ததால், அதை முடித்து, லைவை ஆன் செய்தான். இன்னொரு ஆம்லேட் போட்டு அதனைக் காட்டி தன் நேயர்களுடன் பேசிக்கொண்டிருந்தவன் வீடியோ கேமராவை பார்த்துக்கொண்டே பேசியபடி உணவை உண்டு முடித்தான்.


கடைசியாக, " ஓகே வியூவர்ஸ், என்னோட முதல் நாள் இங்க இப்படி ஆரம்பிச்சு பிரேக்பாஸ்ட் முடிஞ்சுருச்சு. கொஞ்ச நேரத்துல இங்க கட்டிட வேலை செய்ய ஆட்கள் வருவாங்க அப்ப மறுபடி நாம தொடரலாம். இன்னொரு முக்கியமான விஷயம், ஏங்க அழகி எங்க கொஞ்ச நாளா உங்க கமெண்ட்ஸ் எதையும் காணோம்? மெயிலும் வரல. ஏற்கனவே ரெண்டு வீடியோல கேட்டேன், இதுக்கும் நீங்க பதில் சொல்லலன்னா இந்த வேலையெல்லாம் முடிச்சிட்டு நேர்ல உங்களை தேடி வந்திடுவேன். அதுனால சீக்கிரம் ரிப்ளை பண்ணுங்க. ஓகே. அவ்வளவு தான் ஃப்ரெண்ட்ஸ். அடுத்த வீடியோ எடுத்து எடிட் பண்ணி போடுறேன். லைவ் கட் பண்ணிக்கலாம். மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணிடுங்க." என்று சொல்லி வீடியோவைத் துண்டித்தான்.


அவன் வந்து இத்தனை நேரம் ஆகியும் தொந்தரவு தராமல் இருந்த தங்கைக்கு நன்றி சொல்ல, டெண்ட்டின் ஸ்கீரனை அவன் விலக்க, சிறுபிள்ளை போல வாயில் விரல் வைத்து தூங்கிக் கொண்டிருந்தாள் ராகினி.


- பொழியும்

Comments

Popular posts from this blog

மேற்கே உன் சாரல்மழை -1

மேற்கே உன் சாரல்மழை 2

மேற்கே உன் சாரல்மழை 7