மேற்கே உன் சாரல்மழை 4

சாரல் 4




தங்கள் கேம்பர் வேன் பின்புறம் அவனது டெண்டை விரித்து, தங்கை அமர்ந்து கொள்ள ஒரு மடக்கு சேரை எடுத்துப் போட்டான்.


"அண்ணா இப்போ சொல்லப் போறியா இல்லையா? என்னை ஏன் அண்ணா இங்க கூட்டிட்டு வந்த? " என்று பழைய பல்லவியை பாட ஆரம்பித்தாள் ராகினி.


"காலைல இருந்து எத்தனை தடவை தான் ராகினி இதே கேள்வி கேட்ப? " என்று சலித்துக்கொண்ட ரவீந்தர் உணவு சமைக்க தேவையானவற்றை பின்புறம் இருந்த சேமிப்பு பெட்டிகளில் இருந்து வெளியே எடுத்து அடுக்கினான்.


ஒரு மடக்கு டேபிளை மேலிருந்த கம்பார்ட்மெண்டில் இருந்து இறக்கி வைத்து அடுப்பை அதன் மேல் வைத்து  சிறு தோசை தவாவை வைக்க,


"அண்ணா தோசையா?" என்று முகம் சுருக்கினாள் ராகினி.


"இல்ல டா. உனக்கு ஆம்லேட் போடுறேன்." என்று சொன்னதும் பல்லைக் காட்டியவள் "நான் பல தடவை கேட்கறது மட்டும் தான் உன் மனசுல பதியுது ஆனா நீ எனக்கு பதிலே சொல்லாம இருக்கிறது தெரியலையா?" என்று அவன் முதுகில் வந்து சாய்ந்ததும்,


"எல்லாமே உனக்கு சொல்லித்தான் தெரியணுமா ராகினி? நீ ஒன்னும் குழந்தை இல்லையே? ஏன் கூட்டிட்டு வந்தன்னு கேட்குற நீ, நான் விட்டுட்டு வந்தா எங்க இருப்ப? யார் பார்த்துப்பாங்க? நீ தெரியாம பேசுறியா? இல்ல.. உனக்கு எதுவும் ஆயிடுச்சா?" என்று நிதானமாக வினவினான்.


"அப்பா அம்மா இப்போ இல்ல. நான் ஒத்துக்கறேன். அதுக்காக நீ என்னை எங்க போனாலும் கூட்டிகிட்டு போவியா?" எரிச்சல் மிகுந்து வந்தது இளையவள் குரலில்.


அவளை கண்டிப்பான பார்வை ஒன்று பார்த்தானே தவிர எதுவும் பேசவில்லை.


அவளுக்கு ஒரு தட்டில் ஆம்லேட்டை வைத்து அவளுக்கு கொடுத்துவிட்டு, ஆரஞ்சுப் பழங்களை எடுத்து சாறு பிழிந்தான்.


"அண்ணா அவ்வளவு தானா? இதான் டிபனா?" என்று அவள் சிணுங்க, 


"என்னவோ தனியா இருப்பேன்னு சொன்ன? அப்ப இது கூட இல்லாம தானே இருந்திருப்ப? இங்க பாரு ராகினி, அம்மா உன்னை இத்தனை நாளும் எப்படி பார்த்தாங்களோ எனக்கு தெரியாது. நிறைய செல்லம் கொடுத்தாங்க அது மட்டும் தெரியும். அதை நான் கண்டிப்பா தர மாட்டேன். ஏன்னா அவங்க அம்மா, நான் அண்ணன். உனக்கும் இருபது வயசு ஆகுது, படிச்சிருக்க, நல்லாவே பேசத் தெரியுது. சும்மா என்கிட்ட செல்லம் கொஞ்சாத புரியுதா?" என்று கண்டிப்பாக கூற,


"அதானே பார்த்தேன், என்ன டா நம்ம மேல பாசம் வந்து கூட்டிகிட்டு வந்துட்டானோன்னு. அம்மா அப்பா இருந்த போதே மாசம் ஒருநாள் தான் வீட்டுக்கு வருவ. இப்போ அவங்களும் இல்ல. தனியா என்னை விட்டா பெரியப்பா சண்டைக்கு வருவாரு. இந்த டிரிப்புக்கு என்னை கூட்டிகிட்டு வந்து, நான் இதெல்லாம் எனக்கு ஒத்து வராதுன்னு சொல்லிட்டா அப்படியே என்னை கழட்டி விட்டுட்டு உன் வேலையை பார்க்க போக தானே பிளான் போடுற. எதுக்கு இவ்வளவு கஷ்டம்? என்னை வீட்ல விடு. நான் மேனேஜ் பண்ணிப்பேன்." என்று வேகமாக பேசினாள்.


அவள் பேசப் பேச தலையில் கை வைத்துக் கொண்டவன்,


"உன் கற்பனை ரொம்ப ஓவரா இருக்கு. நான் எப்பயும் யாருக்காகவும் என்னை மாத்திக்க மாட்டேன். பெரியப்பா பேச்சுக்கு பயந்து உன்னை பார்த்துக்க நீ குழந்தையும் இல்ல. பெரியப்பா டெரர் பீசும் இல்ல. அதனால கண்டதை பேசாம டெண்ட்ல போய் இரு. எனக்கு கொஞ்சம் ஷூட் பண்ணனும்." என்று அவளை உள் நோக்கி கை காட்டினான்.


அவன் மேசையில் வைத்திருந்த ஆரஞ்சுப் பழச் சாறை எடுத்துக்கொண்டு கோபமாக உள்ளே சென்றாள் ராகினி.


அவள் போனதும் மனதில் இத்தனை நேரம் அடக்கி வைத்திருந்த கோபத்தை 'உப்' என்று ஊதி வெளியே அனுப்பியவன், வேலியோடான இரும்புக் கதவிடம் வந்து நின்றான்.


கைகள் தன்னிச்சையாக பேன்ட் பாக்கெட்டில் இருந்த சிகரெட் பெட்டியைத் தடவியது.


இந்த பழக்கம் ஒரு வாரமாகத் தான் அவனிடம் வந்து ஒட்டிக் கொண்டுள்ளது. அதுவும் ராகினி இப்படி கேள்வியால் குடையும் போது மட்டுமே.


அன்னையும் தந்தையும் இப்படி அவர்களை விட்டுச் செல்லாமல் இருந்திருந்தால் ரவீந்தர் இந்நேரம் மேகாலயாவில் இருந்திருப்பான்.  ஆனால் போன மாதம் அவர்கள் வாழ்வில் புயல் வீசி குடும்பத்தை மொத்தமாக உருக்குலைத்து விட்டது.


சிகரெட் பெட்டியை எடுத்து அதில் இருந்த ஒன்றை அவன் உருவ, வேலிக்கு அந்த பக்கத்தில் இருந்து கேட்டது ஒரு பெண் குரல்.


"இங்க பாரு புகழ் உன்னோட இயலாமைக்கு ஏதேதோ காரணம் சொல்லி நீ குடிக்க ஆரம்பிச்சு இப்போ குடியே குடிக்கு காரணமா ஆக்காத. நீ வளர்ந்துட்ட. நான் நல்லது தான் சொல்ல முடியும். உன்னை கண்டிக்க தான் முடியும். உன்னை காவல் காக்க முடியாது. யோசி. ஒரு பலவீனம் உனக்கு எந்த பலத்தையும் கொடுக்காது. இந்த குடி உனக்கு வாழ்க்கையில எந்த நல்லதையும் அண்ட விடாது. போய் ஊரை சுத்து, லேட்டா வா, வேலைக்கு போகாத, அதெல்லாம் பரவாயில்ல. ஆனா இன்னிக்கும் ராத்திரி நீ குடிச்சிட்டு வராத. அப்படி வந்தா இனி நான் உன் அக்கான்ற எண்ணத்தை மறந்திடு". என்று சொல்லி விட்டு ஒரு பெண் வீட்டினுள் செல்வது தெரிந்தது.


அந்த பெண்ணின் முகத்தைப் பார்க்க முடியவில்லை. அவள் பேசிய வார்த்தைகளை கேட்ட புகழ் என்றவன் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை. அவன் வண்டியை வேகமாக விரட்டிக் கொண்டு ரவீந்தரைக் கடந்து சென்றான்.


கையில் இருந்த சிகரெட்டை வேலிக்கு அந்த பக்கமாக வீசியவன், அந்த பெட்டியையும் தூக்கி எறிந்தான்.


எல்லாம் அந்த பாழாய் போன பங்கஜ் கற்றுக் கொடுத்ததால் வந்தது.


போன மாத ஆரம்பத்தில் அவன் மட்டும் தனியே எப்பொழுதும் போல தன்னுடைய பயணத்தில் மகிழ்ச்சியாக இருக்க, இடியென வந்தது அந்த செய்தி.


அவனது அன்னையும் தந்தையும் சென்ற கார் விபத்துக்கு உள்ளானதாக தகவல் வரவே விரைந்து அவன் சென்னையை அடைந்த போது தந்தை பரசுராம் அவர்களை விட்டுச் சென்றிருந்தார்.


அன்னை மேகலாவோ உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சையில் இருந்தார்.


அவனைக் கண்ட அவனது பெரியப்பா ரகுராம் அனைவர் முன்னும் ஆறுதலாக பேசிவிட்டு தனியே அழைத்துச் சென்று  அவன் தலையில் மிகப்பெரிய குண்டைத் தூக்கிப் போட்டார்.


தந்தைக்கு காரியம் செய்ய கிளம்பியவனை அன்னை அழைப்பதாக செவிலியர் சொல்ல, ஓடோடி வந்தவனிடம் ராகினியைக் காட்டிவிட்டு கண் மூடினாள் மேகலா.


முடிந்தது. அவன் வாழ்கையில் பெயருக்காவது பெற்றோர் என்று இருந்த இரண்டு உறவும் ஒருங்கே முடிவுக்கு வந்தது.


அன்னை தந்தை இருவருக்கும் ஒரே நேரத்தில் காரியம் செய்து முடித்தவனுக்கு தன் முன்னே இருந்த பிரச்சினையின் வீரியம் தாள முடியவில்லை. 


அதைக் கூட பெரியப்பாவுடன் சேர்ந்து சமாளித்தவனால் ராகினியைச் சமாளிக்க முடியவில்லை.


அவளது பழக்க வழக்கம் எதுவும் அறியாத அண்ணன் அவன்.


அண்ணனின் அன்பை உணர்ந்து கொள்ளாத தங்கை அவள்.


- பொழியும்

Comments

Popular posts from this blog

மேற்கே உன் சாரல்மழை -1

மேற்கே உன் சாரல்மழை 2

மேற்கே உன் சாரல்மழை 7