மேற்கே உன் சாரல்மழை 3

 சாரல் 3



அன்னை வேலைக்கு கிளம்பிச் சென்றதும் வீட்டின் இதர வேலைகளை செய்து முடித்துவிட்டு வெளித் திண்ணைக்கு அருகே கதவடியில் அமர்ந்து கொண்டாள் எழிலிசை.


கையில் எம்பிராய்டரி ஃப்ரேமில் பாதி வரையப்பட்ட ஓவியம் அவளுக்காகக் காத்திருக்க, பென்சிலைக் கொண்டு மீதியை வரைந்தாள்.


அந்த ஓவியத்துக்கு ஏற்ற வண்ணங்கள் கொண்ட நூலை நேற்றே அவள் எடுத்து வைத்திருக்க, அதனை ஊசியில் கோர்க்கும் நேரம் வண்டியில் வந்து இறங்கினான் புகழேந்தி.


அவனைக் கண்டதும் எழுந்த பெருமூச்சை அடக்குவது சிரமமாக இருந்தது எழிலுக்கு.


"அக்கா சாப்பாடு எடுத்து வை முகம் கழுவிட்டு வர்றேன்." என்று அவன் பின்னால் சென்றான்.


காலையில் எழுந்து வெளியே சென்றால் அப்பா வேலைக்கு சென்ற பின் வீட்டுக்கு வந்து சாப்பிடும் தம்பி இன்று காலை சீக்கிரம் வந்தபோது எழிலுக்கு ஏதோ சரியில்லை என்று தோன்றியது. அப்பா வெளியே வந்ததும் வண்டியை எடுத்துக்கொண்டு சென்றவன் இதோ இப்பொழுது தான் மீண்டும் வருகிறான்.


உணவை கொடுத்தால் உண்டு ஒரு மணி நேரம் படுத்து எழுந்து மீண்டும் வெளியேறி விடுவான். மறுபடி அவனை இரவு அப்பா தூங்கிய பின்னால் தான் பார்க்க முடியும்.


அப்பாவுக்கும் அவனுக்கும் ஏழாம் பொருத்தமானது இன்று நேற்று நடந்த கதையல்ல. ஆனால் இந்த ஓராண்டாக இவன் தந்தையிடம் விளையாடும் கண்ணாமூச்சி ஆட்டம் தான் அவளை அதிகம் சிந்திக்க வைத்தது.


அவள் யோசித்துக்கொண்டே ஹாலில் அவனுக்கு உணவு எடுத்து வைத்து அவன் வரவுக்காக காத்திருந்தாள்.


"பக்கத்து இடத்தில கட்டடம் கட்டப் போறாங்க போல அக்கா" என்று தகவல் சொல்லிகொண்டே அமார்ந்தவன், அவளது யோசனை முகத்தைப் பார்த்து


"என்னக்கா நீயும் அம்மா மாதிரி ஏதாவது கேள்வி கேட்க போறியா?" என்று தட்டை லேசாக நகர்த்த,


"முதல்ல சாப்பிடு டா. அன்னத்துக்கு முன்னாடி கோபப்பட்கூடாது." என்று தட்டில் அவள் சாதம் போட,


"இன்னிக்கு நீ சமையல் பண்ணலையா?" என்று குழம்புப் பாத்திரத்தை கண்டதும் ஏமாற்றமாக வினவினான்.


"காலைல ரெண்டு தடவை ஓடைக்கு தண்ணி எடுக்க போனேன்ல, அதான் அம்மாவே குழம்பை கூட்டிட்டாங்க."என்று அதனை ஊற்ற அவள் கரண்டியை எடுக்க,


"எனக்கு வேண்டாம் கா. நீ தயிர் இருந்தா ஊத்து." என்று முகத்தைத் தூக்கினான்.


அவனை சங்கடமாக பார்த்தவள், உள்ளே இருந்த சிறு பாத்திரத்தில் அவள் கூட்டி வைத்த மோரை எடுத்து வந்து, "இது தான் புகழ் இருக்கு." என்றதும்,


"நான் இந்த வீட்ல ஒரு நேரம் தானே சோறு தின்கிறேன். அதை கூட ஒழுங்கா போட மாட்டாங்களா? ஒருத்தன் வேலைக்கு போகலன்னா சொந்த அப்பா அம்மாவே இப்படி நடத்துவாங்களா அக்கா?" என்று தட்டை வேகமாக அவன் தள்ள, சாதம் சிதறும் முன் அதனை தடுத்து நிறுத்தினாள்.


"உனக்கு இப்போ என்ன வேணும் புகழ்? குழம்பு இருக்கு, சாப்பிட மாட்டேன்னு சொல்ற, மோர் இருக்கு அதுவும் வேண்டாம்னு சொல்ற. நாங்க மூணு பேரும் இதை தானே புகழ் சாப்பிடுறோம். நீயும் வீட்டு கஷ்டம் தெரிஞ்சு நடந்துக்க." என்று அழுத்தமாக கூறிய அக்காவை இயலாமையோடு பார்த்தான் புகழேந்தி.


"ஏன்கா என்னைப் பார்த்தா வீட்டு கஷ்டம் புரியாதவனா தெரியுதா உனக்கு? ஒரு நாளைக்கு ஒரே தடவை தான் சாப்பிடுறேன். வீட்ல இருக்குறதே இல்ல. சம்பாதிக்கல தான். ஆனா அதுக்கு நானா காரணம்? அப்பா தானே வேலைக்கு போயிட்டு இருந்த என்னை இங்க இழுத்துக்கிட்டு வந்தாரு? இந்த ஊர்ல வேலை செய். இல்லன்னா வீட்ல இருன்னு சொல்லிட்டாரு. இந்த ஊருல என்னக்கா நான் வேலை செய்வேன்?" என்று முகத்தை தூக்கினான் புகழேந்தி.


"வீட்டு சாப்பாடு சாப்பிடாம பெட்ரோலுக்கு காசு வாங்கி ஊர் சுத்திக்கிட்டு இருக்க. அதுக்கு இந்த பேச்சு பேசலாமா புகழ்? அப்பா உன்னை ஏன் கூட்டிட்டு வந்தாருன்னு அம்மாவுக்கு தெரியாம இருக்கலாம். ஆனா எனக்கு தெரியும் புகழ்." என்றதும் புகழின் தலை கவிழ்ந்தது.


"அதனால வீட்ல இருக்குற இவளுக்கு என்ன தெரியப் போகுதுன்னு நினைச்சு பேசாத. இந்த ஊர்ல வேலை இல்லன்னு நீ தான் சொல்ற. கொஞ்ச தூரம் போனா டூரிஸ்ட் ஸ்பாட். எத்தனை கெஸ்ட் ஹவுஸ், எத்தனை கடைங்க, மேல ஹைட்ரோ பிளான்ட் இருக்கு. நீ நெனச்சா தாராளமா வேலைக்கு போகலாம். ஆனா உனக்கு விருப்பம் இல்ல." என்று சொல்லி, குழம்பை ஊற்றி சாத்தை அவனுக்கு ஊட்ட ஆரம்பித்தாள்.


"அக்கா எனக்கு இந்த ஊர்ல இருக்க பிடிக்கல அக்கா. நான் சென்னை, பெங்களூரு எங்கயாவது போய் வேலை செய்யறேன் கா" என்ற அவனின் கெஞ்சலைக் கேட்டு,


"உனக்கு ஊர் பிடிக்கல போறேன்னு சொல்ற. என்னால இந்த ஊர்ல இருக்க முடியல. நான் எங்க டா போவேன்?" என்றவள் கண்களில் கண்ணீர் சேர, இமை தட்டி அதனை அடக்கினாள்.


"அக்கா.." என்று பதறினான் புகழேந்தி.


"எனக்கு தெரியும் புகழ் நீ நல்ல பையன் தான். ஆனா ஏன் சிட்டி வாழ்க்கைக்கு ஆசைப்படுறன்னு தான் புரியல. அங்க எல்லாம் ரசனையா இருக்குற மாதிரி தோணும். ஆனா எல்லாமே மாயை டா புகழ். அதுக்குள்ள நீ புதைஞ்சு போனா உன்னால வெளில வர முடியாது." என்று கடைசி கவள உணவை அவனுக்கு கொடுக்க,


"அப்ப வெளியூர் போய் வேலை செய்யறவன் என்ன கேனையா? சென்னையில பெங்களூருல உள்ளவன் எல்லாம் கெட்டு நாசமா போனவன் தானா? அப்பா மாதிரி பேசாத கா." என்று எழுந்து கொள்ள இருந்தவனை கை நீட்டி தடுத்தாள்.


"நல்லது எது கெட்டது எதுன்னு பகுத்துப் பார்த்து வாழத் தெரிஞ்சவன் எங்க இருந்தாலும் பொழைச்சுக்குவான். உன்னைப்போல மினுக்குறது எல்லாம் தங்கம், வைரம்ன்னு நம்புறவன் அங்க தாக்குப்பிடிக்குறது கஷ்டம் டா தம்பி. உனக்கும் வயசு இருபத்தி ரெண்டு ஆகுது. இப்படியே இருந்தா எப்படி? அக்கா சொல்றத கேளு. பரப்பிகுளம் ரோட்டுல ஒரு கடை வாடகைக்கு  வருதாம் நான் அப்பாகிட்ட பேசி பிடிச்சு தர சொல்றேன். கடை வச்சு உட்காரு தம்பி. கொஞ்ச நாள்ல எல்லாம் சரியா போயிடும்." என்று குழந்தைக்கு சொல்வது போல அவன் தலை கோதி கூறினாள் எழில்.


"அப்பா கிட்ட கேட்டு எனக்கு எதுவும் வேண்டாம். அதுவும் இல்லாம கடை பிடிச்சு நான் என்ன வியாபாரம் பண்ணுவேன்? நான் என்ஜினியர் கா." என்று பெருமையாக கூறியவனை சலிப்பாக நோக்கினாள்.


"எலக்ட்ரிக்கல் என்ஜினியரிங் தானே டா படிச்ச, எலக்ட்ரிக்கல் கடை வை." என்று அவள் சாதாரணமாக சொல்லிவிட,


"நான் என்ன படிப்பு வராம போனவனா? ஸ்க்ரூ ட்ரைவர், சால்ட்ரிங் அயர்ன் வச்சு எலக்ட்ரிக்கல் வேலை பார்க்க. இதுக்கா நான் கஷ்டபட்டு இன்ஜினியரிங் படிச்சேன்?" என்று வீராவேசமாக பேசிய தம்பியை மனதிற்குள் எழுந்த வெறுமையுடன் நோக்கினாள்.


அவள் பன்னிரெண்டாம் வகுப்பில் ஆயிரத்து நூற்றி பத்து மார்க். என்ஜினியரிங் இல்லாவிட்டாலும் அவளுக்கு அறிவியல் படிக்க ஆசை இருந்தது . ஆனால் அன்னை அவளை  அனுமதித்தது ஆர்ட்ஸ் காலேஜில் தான். தந்தையும் அவரோடு எத்தனையோ போராடிப் பார்த்தார். முடியவில்லை. அப்பொழுதெல்லாம் அப்பா தான் அம்மாவைக் கண்டு அடங்கிப் போவார். இன்று தான் நிலை மாறி விட்டது.


அதை இழுத்துக் கொண்டவர் சரோஜா தான் என்பதால் அதைப் பற்றி கருத்து கூற எழில் என்றும் விழைந்ததில்லை.


சரோஜா இவன் வாங்கிய எட்நூத்தி அறுபத்து ஏழு மார்க்குக்கு அவனை என்ஜினியரிங் சேர்க்க கணவரோடு மல்லுக்கு நின்றார். ஆனால் ஶ்ரீதரனோ நிர்தாட்சண்யமாக தன்னிடம் சுயநிதி கல்லூரியில் சேர்க்கும் அளவுக்கு பணமில்லை என்று சொல்லிவிட்டு, எழிலுக்கு மூன்று வருடம் செலவு செய்து படிக்க வைத்த பி. ஏ  தமிழுக்கு ஆனா செலவை மொத்தமாக அன்னை கையில் கொடுத்து தன் கடமை முடிந்தது என்று விலகிக் கொண்டார்.


அன்று சரோஜாவுக்கு ஆரம்பித்தது தலைவலி. அவர் வேலைக்கு செல்ல ஆரம்பித்தார். புகழேந்தி படிப்பென்ற பெயரில் வீட்டின் நிம்மதியை ஆட்டம் காண வைத்தான். வறுமை வேகமாக வீட்டிற்குள் வந்து பாய் போட்டு படுத்துக் கொண்டது.


- பொழியும்

Comments

Popular posts from this blog

மேற்கே உன் சாரல்மழை -1

மேற்கே உன் சாரல்மழை 2

மேற்கே உன் சாரல்மழை 7