சாரல் 75 | Tamil Novels | Jeyalakshmi Karthik Novels

 

சாரல் 75



 

வீட்டின் கட்டுமானப் பணிகள் துவங்கி பதினைந்து நாள் முடிந்திருந்தது.

 

தங்கள் வீட்டை தோட்டத்தின் நடுவே அமைக்க முடிவு செய்து ஏற்கனவே அவ்விடத்தை தொடாமல் விட்டிருந்தனர் எழிலும் ரவியும். இப்பொழுது அது அவர்களுக்கு மிகவும் எளிமையாக வேலையை நிறைவு செய்யப் பயன்பட்டது.

 

வீடு கட்ட தேர்ந்தெடுத்த இடம் சமதளம் என்பதால் அவர்களுக்கு மிகவும் வசதியாக இருந்தது. கான்கிரீட், சிமெண்ட், கம்பி, ஜல்லி இல்லாத இயற்கை சார்ந்த மரபு வீட்டை கட்டுவதே அவர்கள் நோக்கம் என்பதால் பொருட்களும் அதிக அளவில் அவர்களுக்கு தேவைப்படவில்லை.

 

கருங்கல் அஸ்திவாரம், கருங்கல் கொண்டு அமைத்த பீம்கள்(தூண்) சுடாத செம்மண்ணால் ஆன கற்கள், மஞ்சனத்தி (நுனா) மரத்தால் ஆன கூரை தாங்கு கட்டைகள் என்று ஆரம்பிக்கும் முன்பே தெளிவாக அதனைப் பற்றிய புரிதல் ரவியிடம் இருந்தது

 

ரகுராம் முதலில் மண்ணால் ஆன வீடு! என்று கூறியதும் திகைத்தார்.

 

"எப்படி ரவி, மழை வந்தா கரைஞ்சு போயிடுமே!" என்று சந்தேகம் கொள்ள,

 

"எப்படி ரவி சிமெண்ட், கம்பி ஜல்லி இல்லாம வீடு கட்ட முடியும்?" என்று வைதீஸ்வரியும் அவருடன் இணைந்தார்.

 

"பெரியம்மா முதல்ல இடத்தை தேர்வு செய்துட்டு வீட்டோட பிளானுக்கு ஏத்தது போல நாலு அடி தோண்டி கருங்கல் கொண்டு நாம அஸ்திவாரம் போடப் போறோம். அதுவும் ஒரு கல்லும் இன்னொன்னும் இண்டர்லாக் ஆகுற மாதிரி பண்ணணும். கூடவே தரைக்கு மேல மூணு இல்ல நாலு அடி அஸ்திவாரத்தை உயர்த்திட்டா நம்மளால அந்த இடத்தில மூணு மாடி வரை தாராளமா கட்டிடம் கட்ட முடியும். இந்த அஸ்திவாரத்தை ஒருவேளை சிமெண்ட் மாதிரி ஒண்ணு வச்சு இணைச்சிட்டா நல்லா இருக்கும்ன்னு உங்களுக்கு தோனுச்சுன்னா தாராளமா சுண்ணாம்பு, கடுக்காய், கருப்பட்டி வச்சு பூசிக்கலாம்".

 

"சரி வீட்டையே எப்படி மண்ணுல கட்டுவ?" என்று ராகினி வினவ,

 

"நல்ல செம்மண்ல கம்பிரசஸ்ட் பிளாக் நாமளே தயாரிக்கலாம். இதுக்கு செங்கல் சூளை தேவையில்ல. சுடாத அந்த மண்ணுல உள்ள ஓட்டைகள் இருக்காது. அதுவும் இல்லாம நல்ல அழுத்தம் கொடுத்து காய வைக்கிறதால ரொம்ப உறுதியா இருக்கும். கரையவே கரையாது. இந்த செங்கல் செய்ய நாலு பேர் இருந்தா போதும். செய்து காய வச்சு அடுக்கினா அப்படியே கடகடன்னு சுவரை எழுப்பிடலாம்.

 

வீட்டு வாசல், நிலை, தூண் எல்லாத்துக்கும் ஸ்க்ராப்ல மரத்தை வாங்கி செய்துக்கலாம்.  இல்லன்னா பழைய வீடு இடிச்சு பொருளை விற்பனைக்கு கொடுத்திருந்தா அங்கேயும் வாங்கிக்கலாம்".

 

"சரி மாமா. கல்லு ஓகே. ஆனா பூசணும்ல?" என்று புகழ் வினவ,

 

"அதுக்கு சிமெண்ட் தேவையில்ல புகழ். செம்மண்ணை நல்லா தண்ணில ஊற விட்டு காலால மிதிச்சு பேஸ்ட் மாதிரி மாத்திட்டா அதுக்கு பேர் தான் மட் மார்டர் (mud morter). இதை வச்சு செங்கல்லுக்கு இடைப்பட்ட சந்துல பூசி லேசா தேச்சுட்டா அது நல்ல இறுக்கமா பிடிச்சுக்கும்.  இதே மரக்கட்டை மேல சின்ன குச்சி வச்சு வீடா கட்டி பூசினா முழு வீடும் தயாராகும். நமக்கு அந்த மாதிரி வேண்டாம். அதுனால கல்லு மாடலுக்கே போகலாம்".

 

"இதுவும் ஓகே. ஆனா டெரஸ் போடணும்ல? அதுக்கு கம்பி சிமெண்ட் இல்லாம எப்படி?" என்று ராகினி மீண்டும் வினவ,

 

"முன்ன எல்லாம் கட்டக்குத்து வீடு இருக்கும். அது என்ன சிமெண்ட் வச்சு செய்ததா?" என்று வைதீஸ்வரி தன் பழைய நினைவுகளில் இருந்து எடுத்து வந்தார்.

 

"சூப்பர் பெரியம்மா. 'மெட்ராஸ் ரூஃபிங்' ன்னு சொல்ற கட்டக்குத்து வீடு மாடலும் பண்ணலாம். அதுக்கு தேக்கு, பலா மரக்கட்டையை அடுக்கி குறுக்கு வாக்குல சின்ன சைஸ் செங்கல் வச்சு சுண்ணாம்பு பூசி காரை முடிக்கலாம். இல்லன்னா நுனா மரம் இருக்குல்ல, அதான் மஞ்சனத்தி மரம் அதுல குறுக்கு கட்டை போட்டு மேல வீடு கட்ட உள்ள இதே செங்கல்லை அடுக்கி பூசி தளம் போடலாம்".

 

"சரி தரைக்கு டைல்ஸ்?" என்றாள் ராகினி சிணுங்கலாக.

 

“அது எதுக்கு? அழகா பூசி ஆக்சைட் புளோரிங் பண்ணின குளு குளுன்னு இருக்கும். இல்லன்னா அழகா வேணும்ன்னா ஆத்தங்குடி டைல்ஸ் பயன்படுத்தலாம்" என்று எல்லாவற்றையும் சொல்லித்தான் வீட்டை கட்டத் துவங்கினர்.

 

தினப்படி வேலை, தோட்டம், கோழி என்று ஆயிரம் வேலை இருந்தாலும் ரவி, எழில், ரகுராம், வைதீஸ்வரி, ராகினி ஐவரும் வீட்டின் கட்டுமான வேலைகளில் சரியாக காலை ஆறு மணிக்கு இணைந்து விடுவர்.

 

அனைவரும் ஆச்சரியப்பட்டது ராகினியின் மாற்றத்தைக் கண்டு தான். வேலைக்கு சுணங்காமல் புதிய விஷயங்களை கேட்டு அறிந்து செய்தாள். எழில் அவளை சற்று நேரம் இளைப்பாறச் சொன்னாலும்,

 

“எப்படியும் கொஞ்சம் வெயில் கூடினாலும் அண்ணா உங்களையும் என்னையும், பெரியம்மா, பெரியப்பாவையும் உள்ள அனுப்பிட்டு வேலைக்கு உள்ள ஆட்களை தான் கூப்பிட்டுக்கும். இதுக்கு இடையில என்ன ஓய்வு?” என்று அவள் நிற்காமல் வேலை செய்வாள்.

 

ஏனென்று புகழ் அவளை விசாரிக்கவில்லை. ஏனெனில் அவன் அவளுடன் மனமொத்து வாழ்கிறான். அவள் செய்தாலும் அவன் மகிழ்வான், செய்யாவிட்டாலும் குறை கூற மாட்டான். ஆனால் ரவிக்கு தான் ஆச்சரியமும் கேள்வியும் மிகுந்தது.

 

"இதுல ஆச்சரியப்பட என்ன இருக்கு அண்ணா? இங்க வரும்போது என் மனநிலை என்ன? சென்னையில அவ்வளவு பெரிய வீடு சொத்து எல்லாம் இருக்கு. சிட்டி, பார்ட்டி இதான் சந்தோஷம்ன்னு நினைச்சேன். ஆனா பணம் இல்லன்னு தெரிஞ்சப்ப நீ எப்படியாவது எனக்கு பழைய வாழ்க்கையை கொடுக்கணும்னு உன்னை எதிர்பார்த்தேன். அதையே தான் புகழ் கிட்டயும் எதிர்பார்த்தேன். ஆனா நான் அதுக்கு என்ன முயற்சி செஞ்சேன் சொல்லு? ஒன்னும் இல்ல. ஆனா அண்ணி, உன் ஆசைக்காக, உன் கனவுக்காக அவங்க உழைப்பை கொடுத்தாங்க. ஒரே மாசத்துல அதோட பலனை நான் கண்ணெதிர்ல பார்த்தப்ப ஆச்சரியமா இருந்தது.

 

என்னையும் புகழோட தொழில் வளர அண்ணி உதவி செய்ய சொன்னாங்க. அங்க போனா தான் தெரியுது ஒவ்வொரு ரூபா சம்பாதிக்கவும் இவங்க படுற கஷ்டமும் சில இடங்களில் கிடைக்குற அவமானமும். அப்ப புரிஞ்சுது அண்ணி சொன்ன வார்த்தை. 'புருஷன் சம்பாதிச்சிட்டு வந்தா பணத்தை வாங்கி நகை மாட்டி அழகு பார்க்க வலிக்காத நமக்கு, அவங்க அங்க படுற கஷ்டத்தை பார்த்தா தான் அந்த நகை ஒரு பொருட்டே இல்லன்னு தோணும்'ன்னு.

 

எனக்கும் தோணுச்சு அண்ணா சென்னையிலிருந்து வந்ததும் கண்டிப்பா ஒருநாள் அப்பா சொத்தெல்லாம் திரும்பக் கிடைக்கும்ன்னு சொன்னீங்க. ஆனாலும் எனக்கு அது மேல் ஆசை வரல. ஏன்னா அது அப்பாவோட உழைப்பு. அது கிடைச்சா அப்பா நினைவா ஏதாவது நல்லது செய்யணும். ஆனா பணம்ன்னா இனிமே அது புகழும் நானும் சேர்ந்து சம்பாதிக்க போற பணம் தான் நிரந்தரம்ன்னு எனக்கு புரிஞ்சுது." என்று கூற ரவீந்தர் தன் தங்கையை அன்போடு அணைத்துக் கொண்டான்.

 

அவளிடம் இத்தகைய மாற்றத்தை அவன் எதிர்பார்க்கவில்லை.

 

இதோ இப்படியும் அப்படியுமாக இரண்டு மாதங்கள் கழித்து விட்டது. வீட்டையும் கட்டி முடித்து விட்டனர்.

 

வாயிலில் பெரிய திண்ணை, உள்ளே நுழைந்ததும் முற்றம், சுற்றி காற்றோட்டமான இடம், அதைக் கடந்தால் நான்கு அறைகள் வலபுறமும், இருபுறமும் பிரிந்து கடைசியில் பொதுவான கழிப்பிடம்.

 

முன் அறையின் மூலையில் மாடிப்படி அதுவும் சிறுசிறு தேக்குக்கட்டை கொண்டு பழைய இரும்பால் ஆன கைப்பிடி கொண்டு பார்க்கவே அழகாக இருந்தது.

 

மாடியில் ஒருபுறம் முழுவதும் சமையலறை, மறுபுறம் உணவு உண்ணும் அறை, அதைத் தாண்டி காலியான காற்றோட்டமான அறை அதில் பெரிய ஊஞ்சல். கீழே தங்கிக் கொள்ளவும், மேலே குடும்பமாக கூடி மகிழ்வும் வீட்டை அத்தனை அம்சமாக வடிவமைத்திருந்தான்.

 

வீட்டின் கிரகப்பிரவேசம் வைக்க கன்டெய்னர் வீட்டின் வாயிலில் அனைவரும் அமர்ந்து நல்ல நாள் பார்த்துக் கொண்டிருந்தனர்.

 

வைதீஸ்வரி ஒரு தேதி சொல்ல, அதை ராகினி அவளுக்கு சரிவராத நாள் என்று தள்ளினாள்.

 

அவள் கூறியதை ரவி யாரையோ சந்திக்க சில மாதங்களுக்கு முன்னே சந்திப்புக்கு நேரம் வாங்கிவிட்டதாக கூறினான்.

 

ஶ்ரீதர் அவர்கள் தேதி கூறினால் ஊராரை கூப்பிட்டு விடலாம் என்று பேசிக்கொண்டிருக்க, வாயிலில் நிழலாடியது.

 

நிமிர்ந்த அனைவர் முகத்திலும் குழப்பம். அங்கே அவர்கள் யாரும் எதிர்பாராத நபரான சரோஜா நின்றிருந்தார்.

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சாரல் 1

சாரல் 2 | Tamil Novel | Jeyalakshmi Karthik Novels

சாரல் 7 | Tamil Novel | Jeyalakshmi Karthik Novels