சாரல் 52 | Tamil Novels | Jeyalakshmi Karthik Novels
சாரல் 52
பொழுது புலர்ந்தது
தெரியாமல் நல்ல உறக்கத்தில் இருந்தார் சரோஜா. இரவெல்லாம் அவருக்கு சரியான உறக்கம் இல்லாமல்
மனம் எப்படி ரவியை தன் காலில் விழ வைப்பது என்று எண்ணி எண்ணிக் களைத்துப் போய் தூங்கும்
போது விண்மீன்கள் விடைபெறும் நேரமாகியது.
ஶ்ரீதரன் எழுந்து
எப்பொழுதும் போல தன்னுடைய வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தார்.
மகளை மறுவீடு
அழைக்க வேண்டும், மருமகளை மறுவீடு அனுப்ப வேண்டும். இதைப் பற்றி ரகுராம் ஒன்றும் கூறி
இருக்கவில்லை. ஒன்றாக வைத்தே விருந்து சமைத்துக் கொடுக்க நினைத்தார் அவர்.
அவர்கள் நால்வரின்
இடையில் இருக்கும் அன்பை மாமன் மச்சான் செய்முறை, நாத்தனார்கள் சண்டை என்று எதுவும்
பிரித்து விடக் கூடாதென்று எண்ணினார்.
நிதானமாக எழுந்த
சரோஜா வெளியே வர வாசல் வறண்டு போய் கிடந்தது. யோசனையாக சமையலறை வர, அங்கே இரண்டு நாட்களாக
சமைத்த தடமே இல்லை.
நேற்றோடு கல்யாண
கலாட்டாக்கள் முடிந்ததே. இன்று பழையபடி தினசரி வாழ்வுக்கு திரும்பியாக வேண்டும். வேலைக்குச்
செல்ல வேண்டும். அப்பொழுது தான் இந்த மாதத்தின் வட்டிப் பணத்தைக் கட்ட முடியும். யாரோ
என்னவோ செய்யட்டும், கோபம், இயலாமை அனைத்தையும் தாண்டி சரோஜா பயந்தது வட்டியைக் கட்ட
தாமதாகக் கூடாது என்று தான். இல்லாவிட்டால் அவன் ஶ்ரீதரனிடம் அவள் மீண்டும் கடன் வாங்கி
இருப்பதை சொல்லிவிடக் கூடும். முன் போல ஶ்ரீதரன் அமைதியாக இருப்பதில்லை, இதுவும் தெரிந்தால்
என்ன செய்வாரோ என்ற பயம் இருந்தது.
சமையல் அறையை
ஒதுக்கி வேலைகளை ஆரம்பித்தவருக்கு வேலையில் வேகம் வரவில்லை. அவரது மனம் வேலை செய்ய
எழிலைத் தேடியது.
வேகமாக வாசலுக்கு
அவர் வர, கன்டெய்னர் வீட்டின் முன்னே வாயில் அழகாக சுத்தம் செய்யப்பட்டு கலர் கோலம்
பளிச்சிட்டது.
பின் வாயிலுக்கு
வந்து ராகினி இருக்கும் கன்டெய்னர் வீட்டைப் பார்க்க, அதுவோ அமைதியாக இருந்ததோடு
வாயில் முழுவதும் திருமண கூட்டம் இரைத்த குப்பைகள் சிதறிக் கிடந்தது.
முதல் நாளே
இவளிடம் மல்லுக்கு நிற்க சரோஜாவின் மனம் இடம் தரவில்லை. அதனால் தன் மகளை அழைக்க முடிவு
செய்தார்.
"ஏ எழிலு.."
என்று அழைத்தவர் அவள் வராதது கண்டு, "ஏய் காதுல விழலையா இங்க வாடி..."
என்று மீண்டும் அவளின் வீட்டின் அருகே நின்று குரல் கொடுக்க எழில் அழகிய மஞ்சள் பூசிய
முகத்துடன் வந்து நின்றாள்.
அவளை இடித்துக்கொண்டு
வாயில் பிரஷுடன் வந்த ரவி, "என்ன மாமியாரே காலைல என் வீட்டு வாசல்ல சுப்ரபாதம்
பாட வந்தீங்களா? உங்க பொண்ணு நேரமே எழுந்துட்டா. நீங்க உங்க வேலையை கவனிங்க. எங்களைப்
பத்தி கவலைப்படாதீங்க." என்று நக்கலாக கூறியதோடு மனைவியின் தோளில் கை போட்டு உள்ளே
இழுத்துச் சென்றான்.
அவனது செய்கையில்
கடுப்பான சரோஜா, "ஏய் எழிலு!" என்று மீண்டும் அழைக்க,
"ஒருதடவை
சொன்னா புரியாதா?" என்று ரவி உள்ளிருந்து குரல் கொடுக்க கடுப்புடன் அங்கிருந்து
அகன்றார் அவர்.
வீட்டில் வந்து
பாத்திரங்களை உருட்டி அவரது கோபத்தை அவர் வெளிப்படுத்திக் கொண்டிருக்க,
"அம்மா
டீ" என்று வந்து திண்ணையில் அமர்ந்தான் புகழ்.
மகனை கண்டு
உள்ளே எழுந்த கோபத்தை மறைக்காமல் வாயிலை நோக்கி ஒரு பாத்திரத்தை விட்டு எறிந்தார்.
அது வந்து விழுந்த
வேகம் பார்த்த புகழ் எழுந்து தள்ளி நிற்க,
"மச்சான்"
என்று ரவி அழைக்கவே அவர்கள் வீட்டை நோக்கி நடந்தான்.
வெளியே இருந்த
காபி டேபிளில் ரவி வந்து அமர, அவர்கள் இருவருக்கும் தேநீர் கொண்டு வந்தாள் எழில்.
"அக்கா"
என்று பாசமாக அழைத்த தம்பியின் முகத்தில் தெரிந்த வெட்கம் அவனது மகிழ்ச்சியான வாழ்வின்
ஆரம்பத்தை தமக்கைக்கு சொல்லாமல் சொல்ல, நிறைவுடன் அவன் தலையை கோதி தேநீர் கோப்பையை
கொடுத்தாள்.
"என்னக்கா
அம்மா இவ்வளவு கோபமா இருக்காங்க? பாத்திரம் பறந்து வருது தெரியுமா?" என்று
அப்பாவியாக அவன் கூற,
"நீ செஞ்ச
வேலைக்கு அம்மா உன்னை கொஞ்சுவாங்களா?" என்று எழில் சிரித்தபடி வினவினாள்.
"ச்சே
அதை எப்படி மறந்தேன்? நேத்து நடந்தது எதுவும் நினைவுல இல்லாம நான் தான் எப்பவும் போல
டீ கேட்டு போயிட்டேன்." என்று தலையில் தட்டிக் கொண்டான்.
"அப்பறம்
மச்சான், எங்க என் தங்கச்சி?" என்று அவர்கள் வீட்டை நோக்கி அவன் பார்வையை திருப்ப,
"தூங்கிட்டு
இருக்கு மாமா." என்று மெல்லிய நாணம் இழையோட கூறினான் புகழ்.
"ஓ சரி.
நாளைக்கு கடைக்கு பொருள் எல்லாம் வாங்க டிஸ்ட்ரிபியூட்டர் கிட்ட போயிட்டு வந்திடுவோமா?"
என்று ரவி வினவ,
அவர்கள் பேச்சு
தொழில் சார்ந்து இருக்க, எழில் நகர்ந்து வீட்டினுள் சென்றவள் வரும்பொழுது கையில் இரண்டு
கூடையுடன் வந்தாள்.
"இசை என்ன
அது?" என்று ரவி வினவ, புகழும் புரியாத பார்வை பார்த்து நின்றான்.
"இல்ல
ராகினிக்கு சமைக்க தெரியாது, எங்கம்மா முழுசா சமையல் செஞ்சு பல வருஷம் ஆச்சு. அதான்
சாப்பாடு.." என்று தயக்கமாக இழுத்தாள் எழில்.
"ம்ம்."
என்று பெருமூச்சு விட்ட ரவி,
"என்கிட்ட
கொடு நான் அத்தை கிட்ட கொடுத்துட்டு வர்றேன். அப்பறம் மாமாவை எப்ப வேணாலும் கூப்பிட்டு
இங்க சாப்பிட சொல்லு, உங்க அம்மா கொஞ்சம் சரியாகுற வரைக்கும் நீ செல்லம் கொடுக்காம
இரு புரியுதா?" என்று அண்பாகவே கூறினார் ரவீந்தர்.
"அக்கா
மாமா சொல்றது சரி தான். ராகினி சமையல் தெரியாம இத்தனை நாள் இருந்தது தப்பில்லை. ஆனா
இப்படி நீ பழக்கினா அவ அண்ணி இருக்காங்கன்னு இனியும் எதுவும் கத்துக்க மாட்டா. இன்னியோட
இந்த சாப்பாடு பார்சலை விடு. நாளைல இருந்து அவளுக்கு தெரிஞ்சத அவ சமைக்கட்டும்."
என்று கூறிய புகழ் மற்றொரு சாப்பாடுக் கூடையை வாங்கிக்கொண்டு சென்றான்.
ரவி சரோஜா வீட்டு
வாயிலில் நின்று, "மாமியாரே!" என்று சத்தமாக அழைக்க,
வேக நடையோடு
வந்த சரோஜா, "மருமகனுக்கு என்ன சீர் வேணும்? எதுக்கு மாமியாரை கூவிக் கூவி அழைக்கணும்?"
என்று நக்கலாக வினவ,
"தோ பாரு
டா மாமியாருக்கு நக்கலை! பாவம் கல்யாண வேலைல டயர்டா இருப்பாங்கன்னு வேலை இல்லாம என்
பொண்டாட்டியை சமைக்க சொல்லி சாப்பாடு கொண்டு வந்தா, இங்க நக்கல் கணக்கு வழக்கு இல்லாம
வருதே! அப்ப சமையலும் நீங்களே சமாளிச்சு செய்வீங்க. இதை நான் கொடுக்க வேண்டாம் தானே?"
என்று கூடையை அவர் முன் அவன் ஆட்டி ஆட்டி வினவ,
வெடுக்கென்று
பறித்துக்கொண்டு நகர இருந்த சரோஜாவை அழைத்த ரவி,
"இன்னிக்கு
ஒருநாள் தான் என் பொண்டாட்டி கொடுப்பா. அவளைக் கட்டிக் கொடுத்துட்டீங்க. அதை மறக்க
வேண்டாம். காலைல கண்ணு முழிக்கும் போதே அவளை வேலை செய்ய தேடுறத இன்னியோட நிறுத்திக்கோங்க."
என்று எச்சரிக்கையாக சொல்லிவிட்டு நகர, சரோஜா கோபத்தில் முகம் சிவக்க நின்றிருந்தார்.

கருத்துகள்
கருத்துரையிடுக