மேற்கே உன் சாரல்மழை -1
சாரல் 1
பனி போர்வை பேர்த்திய மலை முகடுகளும் இருள் விலகாத வானமும் சில்லென்று மேனியை தழுவிடும் தென்றல் காற்றும் சலிக்காமல் ஒவ்வொரு நாளும் புத்துணர்வை வாரி வாரி வழங்கிக் கொண்டிருந்த அதிகாலை வேளை.
வாசலில் அன்னை நீர் தெளித்து விட்டிருக்க, கோலமிட வெளியே வந்து இயற்கையை தனக்குள் மென்மையாக உள்வாங்கிக் கொண்டிருந்தாள் எழிலிசை.
தந்தை பின்னால் உள்ள குளியலறையில் குளிக்கும் சத்தம் கேட்டதும், அன்றைய நாளின் அடுத்தடுத்த வேலைகள் வரிசை கட்டப் போவதை உணர்ந்தவளாய், கோலமாவை லாவகமாக வளைத்து வளைத்து கோலம் போட்டு விட்டு அதனை சற்று தள்ளி நின்று ஒரு பார்வை 'சரியாக இருக்கிறதா?' என்று பார்த்தாள்.
திருப்தியாக மனதிற்குத் தோன்ற, முன்வாசல் வழியாகச் செல்லாமல் பக்கவாட்டில் உள்ள சந்தில் அவள் நுழைய இருந்த நேரம் அவர்கள் வீட்டின் அருகில் ஹார்ன் ஒலி சற்று அதிகமாக ஒலிக்கவே கவனம் கவரப்பட்டு அவ்விடம் தன் பார்வையைத் திருப்பினாள்.
ஒரு காரும் அதைத் தொடர்ந்து பெரிய லாரி ஒன்றும் வருவது மட்டுமே அந்த பனிக்கு இடையில் தெரிந்தது.
யாரேனும் இந்த வழியாக செல்லக் கூடும் என்று ஒதுக்க முடியாது. ஏனெனில் இது ஒன்றும் பெரிய வீதி அல்ல. பல வீடுகளும் இங்கில்லை. இந்த சுற்று வட்டத்தில் இருப்பது அவர்கள் வீடும் அருகே இருக்கும் வெட்டவெளி நிலமும் தான்.
அதனை பல வருட போராட்டத்துக்கு பின் நீதிமன்றம் மூலமாக தன் பங்காக வாங்கி இருந்தார் ஒரு ஆகிருதியான மனிதர்.
அவர் ஆட்களோடு அவ்வப்போது இங்கு வருவது சில மாதங்களாக வழக்கமாவே இருந்தது. ஆனால் வரும் வாகனத்தைப் பார்த்தால் அவரது வாகனமாகத் தோன்றவில்லை என்று அவள் எண்ணும்போதே அதில் இருந்து சோம்பல் முறித்தப்படி இறங்கினாள் ஒரு நவயுக நங்கை.
பெண்பிள்ளை என்றதும் எழிலிசைக்கு ஆர்வம் வந்து விட, துடைப்பத்தையும் கோலமாவையும் அவர்கள் வீட்டு ஜன்னல் திண்ணையில் வைத்துவிட்டு இடுப்பில் சொருகி இருந்த புடவையை தளர விட்டவள், முன்னோக்கி இரண்டு அடி வைத்தாள்.
ஆனால் ஓட்டுநர் இருக்கையில் இருந்து இறங்கியவனைக் கண்டதும் அவளது கால்கள் நடையை நிறுத்தியது.
அவனது முகம் பரிச்சையமாக இருப்பதைக் கண்டு சில வினாடி உற்று நோக்கியவள் அவன் யாரென்று அறிந்ததும் அமைதியாக தன் உடமைகளுடன் வீட்டின் பின் பக்கமாகச் செல்ல ஆரம்பித்தாள்.
அந்த வெற்று நிலத்தை இவன் வாங்கி இருப்பான் போல என்று எண்ணிக் கொண்டவள், அவன் இங்கே என்ன வேலையாக வந்திருப்பான் என்று எண்ணியபடி சற்று தொலைவில் செல்லும் ஓடையில் ஒரு குடம் நீரை எடுத்து வீட்டை நோக்கி வந்தாள்.
வாசலில் அக்குடத்தை இறக்கி வைத்தவள் தான் வரைந்த கோலத்தை மீண்டும் பார்க்க, சரியாக அதன் மேல் தன் வண்டியை கொண்டு வந்து நிறுத்தினான் அவளது உடன்பிறந்தவனனான புகழேந்தி .
"ஏன் இப்படி பண்ணுற புகழ்? கோலத்துக்கு மேல வண்டி ஏத்தாதன்னு எத்தனை தடவை சொல்லி இருக்கேன்?" என்று தன்மையாகவே அவள் கண்டிக்க,
"நானும் தான் உன்னை இப்படி சிக்கு கோலம் போடாதன்னு சொல்றேன். நீ மட்டும் கேட்டுட்டு தான் மறுவேலை பார்த்த மாதிரி பேசுற. ஏற்கனவே வாழ்க்கை இந்த கோலம் மாதிரி சிக்கலா இருக்கு. இதுல இந்த கோலம் ஒன்னு தான் கேடு" என்று அவள் கொண்டு வந்த குடத்து நீரை அவள் வரைந்த கோலத்தின் மீது ஊற்றினார் அவளது அன்னை சரோஜா.
ஆழ்ந்த மூச்சை அவள் எடுக்க மேற்குத் தொடர்ச்சி மலையின் ஈரக் காற்று அவள் நுரையீரலை நிறைத்து மனதில் அன்னை ஏற்படுத்திய வெம்மையைத் தணித்தது.
ஏதும் பேசாமல் அவள் மீண்டும் குடத்தை எடுத்துக்கொண்டு பின்னால் சென்றாள்.
"எப்பவும் எரிஞ்சு எரிஞ்சு விழாத மா. பாவம்ல அக்காவை ஏம்மா ஏதாவது சொல்ற?" என்று அவள் தலை மறைந்த பின் கேட்ட மகனை முறைத்த சரோஜா,
"நீ ஒழுங்கா வேலைக்கு போய் வீட்டை காப்பத்தினா நான் ஏன் டா எல்லார் மேலையும் எரிஞ்சு விழப் போறேன்?" என்று கத்தியவர், இடுப்பில் துண்டுடன் வந்து வெளி மாடத்தில் இருக்கும் சாமிப் படத்திற்கு கற்பூரம் காட்டிய கணவரைக் கண்டு வாயை மூடிக் கொண்டார்.
மகள் போடும் கோலத்தை எப்பொழுதும் ஒரு பார்வை பார்க்கும் ஶ்ரீதரன் அன்று அங்கே நீர் கொட்டி இருக்கும் அழகை வைத்தே மனைவியின் மனநிலை அறிந்தவராக தேதியை நோக்கினார்.
மாதத்தின் இரண்டாம் நாள். அவருக்கு சம்பளம் ஐந்தாம் தேதி வரும். ஆக இன்னும் இரண்டு நாட்கள் வீடு போர்க்கோலம் பூண்டிருக்கும் என்று உணர்ந்தவராய் அமைதியாக அங்கிருந்து உள்ளே சென்றார்.
வாசலில் வண்டியை நிறுத்திய புகழேந்தி, "பக்கத்து இடத்தை யாரோ வாங்கி இருந்தாங்கன்னு சொன்னேன்ல, போன வாரம் கூட வேலி போட்டாங்களே, அவங்க இன்னிக்கு இங்க வந்திருக்காங்க மா." என்று அன்னைக்கு தகவல் சொல்லியபடி அந்த பக்கமாகக் கண்ணைப் பதித்தான் புகழேந்தி.
"மகராசன் போக வர இருந்த ஒத்தயடிப் பாதையை வேலி போட்டுட்டான். ஒரு வாரமா கடைக்கு நான் சுத்தி தான் போறேன். இதுல இன்னும் என்னென்ன செய்ய காத்திருக்கானோ?" என்று புலம்பிக் கொண்டு உள்ளே சென்றார்.
அவர் சொன்ன மகராசன் தன் தங்கையுடன் காரிலிருந்து இறங்கி போன வாரம் அமைப்பட்ட வேலியோடு கூடிய இரும்புக் கதவைத் தள்ளித் திறந்தான்.
அவனுடன் நடந்து வந்த அவன் தங்கை ராகினி குளிர் காரணமாக சிவந்த தன் நாசியை விரல்கள் கொண்டு சூடு பரவ விட்டுக் கொண்டிருந்தாள்.
அவளுக்கு புதிய இடத்தின் சீதோஷண நிலை பிடித்திருந்தாலும் முகத்தில் லேசான சோகம் இழையோட தன் அண்ணனின் வலது கரத்தைப் பற்றிக் கொண்டு வந்தாள்.
அவளது ஐந்தடி ஒரு அங்குல உயரத்துக்கு மூன்று அங்குல ஹீல்ஸ் செருப்பை போட்டு உயரமாக அவள் காட்டிக் கொண்டு மகிழ, அது இந்த மணற்பரப்பில் அவளுக்கு கை கொடுக்காமல் தடுக்கித் தடுக்கி விட்டது.
"ராகினி, அந்த ஹீல்சை கார்லையே கழற்றி போடச் சொன்னேன்ல?" கண்டிப்புடன் வந்த வார்த்தைகளைக் கேட்டு சலிப்பாக அண்ணனை நோக்கினாள்.
"பழகிடுச்சு அண்ணா" என்று ராகமாக அவள் பதிலளிக்க,
"பழக்கத்தை மாத்திக்கப் பழகு ராகினி." என்று மேலும் கடுமையாக வந்தது ரவீந்தரின் குரல்.
"ஆமா எங்க உன் செல்ஃபி ஸ்டிக்கை காணோம்?" என்று அவள் கேலி செய்ய, அவளை மேலும் கீழும் கண்டிப்பான பார்வை ஒன்றை பார்த்துவிட்டு,
"கிண்டல் பண்ணுறதா நினைச்சு நீ பேசினா, ஐம் வார்னிங் யூ. ஸ்டாப் ரைட் ஹியர். அதே போல அன்பான அண்ணனா நான் சொல்றது, உன் பிடிவாதத்தையும் கேலியையும் விட்டுட்டு ஒழுங்கா இருக்கப் பாரு" என்று சொல்லி காருக்கு திரும்பி வந்தான்.
"இந்த அத்துவான காட்டுல என்ன அண்ணா பண்ணப் போற?" என்று அவள் கேட்டதைக் கண்டு கொள்ளாமல் தன் செல்ஃபி ஸ்டிக்குடன் வந்தவன்,
தன்னுடைய டி.எஸ்.எல் ஆர் கேமராவை அதில் பொருத்த ஆரம்பித்தான்.
"இந்த கேமராவுக்கு செல்ஃபி ஸ்டிக் வச்சு இருக்குற ஒரே கிறுக்கு நீ தான்." என்று தங்கை மறுபடி கேலி செய்ய, இம்முறை கோபம் காட்டாமல்,
"என்ன தான் மொபைல்ல கிலாரிட்டி இருந்தாலும் ஒரிஜினல் கேமரால எடுக்கற அழகும் சுகமும் தனி ராகினி." என்று கூறினான்.
அவள் அவனை கவனிக்காமல் சுற்றி வேடிக்கை பார்க்க, தொலைவில் வேலிக்கு அந்த பக்கமாக இடுப்பில் குடத்துடன் நடந்து சென்று கொண்டிருந்தாள் எழிலிசை.
"வாவ் இந்த பட்டிக்காட்டுல ஒரு பெர்பெக்ட் பியூட்டி இருக்கு பாரு அண்ணா" என்று எப்பொழுதும் போலவே அவள் பேச,
தன் வேலையில் கவனமாக இருந்த ரவீந்தர் அவள் காட்டிய திசையில் ஒரு நொடி பார்த்துவிட்டு தன் வேலையைத் தொடர்ந்தான்.
எல்லாம் சரியாக இருப்பதை உறுதி செய்து கொண்டவன்,
"வணக்கம் வியூவர்ஸ்... நீங்க பார்த்துட்டு இருக்கிறது உங்க ஃபேவரட் 'தொடரும் பயணங்கள்' யூட்யூப் சேனல். நான் உங்க ரவீந்தர் பரசுராம். இன்னிக்கு நாம இருக்கிறது மேற்குத் தொடர்ச்சி மலையில உள்ள ஆனைமலை பக்கத்துல இருக்குற சேதுமடை" என்று தன் பார்வையாளர்களுக்கு வரவேற்பு கொடுத்து பேசிக்கொண்டிருந்த ரவீந்தர் பரசுராம் ஒரு பிரபல டிராவலாக் யூட்யூபர்.
அவனது சேனலான 'தொடரும் பயணங்கள்' இதுவரை பத்து லட்சம் பின் தொடர்பவர்கள் கொண்டு பல லட்சம் பார்வையைப் பெற்ற பல காணொளிகளை உள்ளடக்கியது .
அவனது இந்த மேற்கு மலையின் பயணம் அவன் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்களை விதைக்க காத்திருக்கிறதோ!
- பொழியும்
Comments
Post a Comment