சாரல் 19 | Tamil Novel | Jeyalakshmi Karthik Novels

சாரல் 19


எழிலும் ராகினியும் அந்த கரடு முரடான பாதையில் நடந்து கொண்டிருந்தனர்.

"என்னக்கா இவ்வளவு முள்ளுச்செடியா இருக்கு. எனக்கு இதெல்லாம் பிடிக்காது, வாங்க திரும்பிப் போகலாம்." என்று முகத்தை சுருக்கிப் பேசிய ராகினியைக் கண்டு மெல்லச் சிரித்தாள் எழில்.

"உனக்கு எப்பவும் எல்லா இடத்திலும் நீ எதிர்பார்க்கற விஷயம் மட்டுமே கிடைக்காது ராகினி. அதுக்காக போக வேண்டிய தூரத்தை கடந்து போகாம இருந்தா வாழ்க்கை தேங்கி போயிடும். சின்ன சின்ன தடைகளை தாண்டி போய் ஜெய்க்கிறது தான் வாழ்க்கை." என்று சொல்லி அவள் முன்னே நடக்க,

"அக்கா வழி இல்லன்னு சொன்னதுகெல்லாம் வாழ்க்கை பாடம் எடுக்காதீங்க கா" என்று சிணுங்கினாள்.

"நம்ம வாழ்க்கையோட ஒவ்வொரு நாளும் நமக்கு பாடம் தான் ராகினி. எப்ப என்ன வரும்னு தெரியாத இந்த சுவாரசியமான வாழ்க்கை தான் நம்மளை உயரத்துக்கு கொண்டு போகும். ஏறி ஏறி இறங்கி போற ஈசிஜி தான் உயிரோட மதிப்பு சொல்லும். நேர்கோடா போனா செத்துட்டதா அர்த்தம்." என்று எழில் மீண்டும் தத்துவம் பேச,

"ஏன் இப்படி அறுக்குறீங்க இன்னிக்கு?' என்று தலை மேல் கை வைத்து வராத அழுகையோடு வினவினாள்.

"உங்க அண்ணனை பார்க்கும் போது பெரிய பிரச்சனையில் இருக்குறது போல தோணுது ராகினி. உன் வயசுக்கு அவரோட கஷ்டம் தெரிஞ்சு நீ அவருக்கு உதவணும். அதுக்கு தான் சொன்னேன்." என்றாள் நிதானமாக.

"என்னக்கா சொல்றீங்க? என் அண்ணனுக்கு கஷ்டமா? அவன் சின்ன வயசுல இருந்து தனியா ஜாலியா வளர்ந்தவன், அம்மா அப்பா போனதும் நான் அவனுக்கு பொறுப்பா சேர்ந்துட்டேன்னு நினைக்கிறான். வேற எந்த கஷ்டமும் அவனுக்கு இருக்க வாய்ப்பே இல்ல." என்றாள் உறுதியாக.

"சரி அப்படி கஷ்டம் இல்லாத மனுஷன் ஏன் மா இந்த மாதிரி யாருமில்லாத இடத்தில நிலம் வாங்கி , புதுசு புதுசா ஏதேதோ செய்துட்டு இருக்காரு?" என்றபடி அந்த சிறுகுன்றின் மேட்டுப் பகுதிக்கு வந்தாள்.

"அக்கா அவனுக்கு இதெல்லாம் ட்ரீம். வீட்ல தாங்காம வெளில இப்படி ஊர் சுத்திட்டு இருக்க தான் அவனுக்கு பிடிக்கும். சென்னையில மட்டும் எங்களுக்கு மூணு பங்களா, ரெண்டு அபார்ட்மென்ட், அங்கங்க நிறைய சொத்து இருக்கு. இதுக்கு மேல எங்கப்பாவோட பிஸ்னஸ் இருக்கு. அது இவனுக்கு தான் வரணும். ஆனா இவன் அதை என் மாமா கிட்ட கொடுத்துட்டு வந்து இப்படி காட்டுல உட்கார்ந்து இருக்கான்." என்று குற்றம் கூறினாள்.

அவள் பேச்சில் அமைதியான எழில், குன்றின் மேல் வேல் பத்தித அந்த குன்றுவேல் கோவிலுக்கு வந்தாள்.

"இது தான் நான் சொன்ன வேல் ராகினி. உன் ஆசையை வேண்டிக்கோ. கண்டிப்பா இந்த முருகன் அதை நடத்திக் கொடுப்பான். " என்று கண்களை மூடிக் கொண்டவள்,

ரவியின் பிரச்சனை எதுவாக இருந்தாலும் அவை யாரும் பரிதி கண்ட பனியாய் விலகிட வேண்டினாள். புகழின் கடையை துவங்க நல்ல வழி காட்டுமாறு அவள் எண்ணும் போதே சட்டென்று வழியொன்று அவள் மனதில் தோன்றியது.

கண் திருந்து பார்த்த எழில், அங்கே ராகினி குளிரை ரசித்து நின்றிருப்பதைக் கண்டாள்.

"உனக்கு சாமி மேல பக்தி அதிகம் இல்லையோ?" என்று கேட்க, அவளோ,

"அம்மா நிறைய பாட்டு, சோஸ்திரம் எல்லாம் சொல்லுவாங்க. எனக்கு பெருசா பழக்கம் இல்ல. கன்னத்துல போட்டுட்டு நகர்ந்து போயிடுவேன்." என்றாள் சாதாரணமாக.

"வேண்டிக்க கூட மாட்டியா?" என்று வியப்பாக வினவிய எழிலைக் கண்டு சிரித்தவாறே,

"நமக்கு ஏதாவது வேணும்ன்னா தானே சாமி கிட்ட கேட்கணும்? எங்கம்மா தான் எல்லாமே எனக்கு கொடுத்திடுவாங்களே. அப்பறம் சாமி கிட்ட எனக்கென்ன வேலை?" என்றாள்.

ஆக, கடவுளை வேண்டுவது என்பது தன்னலமாக தனக்கு வேண்டியதை கேட்டுப் பெறத்தான் என்று நினைக்கும் இவளை எந்த கணக்கில் சேர்ப்பது என்று எண்ணியபடி அவளோடு மீண்டும் வீட்டை நோக்கி பயணப்பட்டாள்.

ராகினி கால் வலி என்று மெதுவாக நடக்க, சீக்கிரம் வீட்டிற்கு சென்று தன் மனதில் தோன்றிய யோசனை பற்றி தந்தையிடம் பேச எண்ணிய எழிலுக்கு அது பெரும் சங்கடமாக இருந்தது.

கன்டெய்னர்களும் வேனும் கண்ணுக்கு புலப்படும் தூரம் வந்ததும்,

"ராகினி அப்பா வீட்டுக்கு வந்திருப்பார். நான் போய் தான் சமைக்கணும். நீ மெதுவா நடந்து போயிக்க முடியுமா? நான் வேகமாக வீட்டுக்கு போகணும்." என்றதும்,

"அக்கா நான் ஊருக்கு போகற வரைக்கும் எங்க வீட்டுக்கு வந்து சமையல் பண்ணி தர முடியுமா?" என்று கேட்டாள் தயங்காமல்.

"ஏன் ராகினி, நான் எங்க வீட்ல செஞ்சு உனக்கு பாக்ஸ்ல தர்றேன், இல்ல நீயே வந்து சாப்பிட்டு போ." என்றாள் எழில் அவளது எண்ணம் புரியாமல்.

"இல்லக்கா, இங்கன்னா திங்ஸ் எல்லாம் அண்ணா வாங்கி வச்சிடுவான். எனக்கும் அங்க வர கொஞ்சம் சங்கடமா இருக்கு. சமைச்சு தர பணம் வேணாலும் வாங்கிக்கோங்க கா" என்று அவள் கூறியதும் எழிலுக்கு சட்டென்று எல்லாம் அறுந்து போனது.

அவளுக்கு பதில் தர விரும்பாதவளாக, "பார்த்து போ" என்றதுடன் அங்கிருந்து சற்று வேகமாக நடக்கத் துவங்கினாள் எழில்.

அவள் ராகினிக்கு உதவக் காரணம் அவள் ரவீந்தரின் தங்கை என்ற ஒன்று மட்டுமே. ஆனால் அவன் குணத்துக்கும் அவளுக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது என்பதை ஒரு நொடியில் நிரூபித்து விட்டாள் அவள் என்று எண்ணினாள்.

நேராக வீடு நோக்கி நடந்தாள்.

வாசலில் சரோஜா முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு அமர்ந்திருக்க, உள்ளே ஶ்ரீதரன் கோபமாக இருப்பது அவர் செருப்பு வாசலில் கிடக்கும் விதத்தில் அவளுக்குப் புலப்பட்டது. சாதாரண நாளாக இருந்திருந்தால் நிதனமாக என்னவென்று விசாரித்திருப்பாள்.

ஆனால் ராகினி தனக்கு சம்பளம் தருவதாக கூறவே மனதில் தோன்றிய வலியுடன் இருந்தவள், தந்தையிடம் சென்று,

"அப்பா உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்." என்றதும்,

ஒரு நெடிய மூச்சை எடுத்து தன்னை சமன் செய்தபடி, "சொல்லு செல்லம்" என்றார்.

"பரம்பிகுளம் ரோட்ல ஒரு கடை பார்த்திட்டு வந்தோம் நானும் புகழும். என்ன வாடகை அட்வான்ஸ் எல்லாம் கொஞ்சம் கூட சொல்லுது தர்மா அண்ணன். கொஞ்சம் பேசி சரி பண்ணி எல்லாமே எண்பது ஆயிரம் வர்ற மாதிரி ரெடி பண்ணிட்டா தம்பிக்கு கடை வச்சு கொடுத்திடலாம்" என்று நிதானமாக கூறினாள்.

அவரோ, "இப்ப அவனுக்கு அந்த கடை ஒன்னு தான் கேடா செல்லம்? எண்பது ஆயிரம் இருந்தா உனக்கு ஆசையா நான் ஏதாவது செய்வேன். ஆனா அதுவே என்கிட்ட இல்லாதப்ப அவனுக்கு எங்கிருந்து கொடுக்கிறது?" என்றார் விரக்தியாக.

"இல்லப்பா, அந்த எம்பிரய்டரி.." என்று அவள் ஆரம்பிக்க,

"உனக்கு சொன்னா புரியாதா செல்லம்? உனக்குன்னு ஏதாவது வச்சுக்கோ. உங்க அம்மா, தம்பி எல்லாம் நம்பி காசை விட்டா, காலத்துக்கும் நாம கடங்காரனா தான் இருக்கணும்." என்றார் கோபத்துடன்.

"ஆமா யா. நான் போட்டு மினுக்க தான் கடன் வாங்கினேன் பாரு" என்று வேகமாக வாசலில் இருந்து எழுந்து வந்தார் சரோஜா.

"பேசாம போய்டு. உன்னால இன்னிக்கு ஆஸ்பத்திரில நான் பட்ட அவமானம் கொஞ்சமில்ல. இந்நாள் வரைக்கும் எவனும் என்னை மரியாதையா நடத்தாம போனாலும், எதுவும் அசிங்கமா பேசாமலாவது இருந்தான். இன்னிக்கு உன்னால அதுவும் போச்சு." என்று அவர் கத்த,

"எல்லாம் உன் பொண்ணால வந்தது தானே. நான் சொன்னபடி அன்னைக்கு அவ சம்மதிச்சு இருந்தா இன்னிக்கு இந்த நிலை நமக்கு வருமா?" என்று சரோஜா குதிக்க,

அவர் மீண்டும் பழையதை கிளறிய கோபத்தில் "அம்மா" என்று கோபத்தில் கத்தினாள் எழில்.

அவள் முகத்தில் அத்தனை கடுமை.

"வாயை மூடு. நீ சொன்னதை நான் செஞ்சு இருந்தா இந்நேரம்.." என்றவள் பேசப் பிடிக்காமல் வேகமாக வீட்டின் பின்னால் சென்று விட்டாள்.

"நீயெல்லாம் அவளுக்கு அம்மான்னு வெளில சொல்லாத. ச்சீ " என்று கத்திய ஶ்ரீதர் வெளியே வர,

வாசலில் இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த புகழ் அவமானத்தில் முகம் சுருங்கி நின்றான்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சாரல் 1

சாரல் 2 | Tamil Novel | Jeyalakshmi Karthik Novels

சாரல் 7 | Tamil Novel | Jeyalakshmi Karthik Novels