சாரல் 18 | Tamil Novel | Jeyalakshmi Karthik Novels

சாரல் 18

எழிலிசையின் பேச்சைக் கேட்டதில் அவள் பல நாட்களாக தன் சேனலை தொடர்ந்து பார்த்து வருவது ரவீந்தரால் உணர முடிந்தது.

அவள் பேசிக்கொண்டிருந்த போது ராகினி அங்கு வந்து சேர்ந்தாள். போகலாமா என்று அவள் வினவ,

"சரி சார் நான் கிளம்பறேன். எப்பவும் அதே சார்ம்மோட உங்க வீடியோஸ் போடுங்க." என்று விடைபெற்ற எழில் ராகினியுடன் அவர்கள் இடத்தின் உள் பக்கம் பார்த்து நடக்கத் துவங்கினாள்.

மிகவும் நல்ல மனதுடைய பெண் என்று ரவீந்தர் எண்ணிக்கொண்டு அன்றைய வேலைகள் முடிந்து விட்டதா என்று கடைசியாக ஒருமுறை பார்வையிட்டு விட்டு வந்தான்.

உடல் அலுப்பு தீர சூடான நீரில் குளித்துவிட்டு வந்தவன் தன் கைபேசியில் பெரியப்பாவின் அழைப்புகள் நான்கு விடுபட்டு இருப்பதைக் கண்டு உடனே அவரை தொடர்பு கொண்டான்.

"என்னாச்சு பெரியப்பா?" என்று எடுத்தும் அவன் பதற்றத்துடன் வினவ,

"ஏன் கண்ணா பதறி போய் பேசுற? ஒன்னும் இல்ல பா. நானும் ஈஸ்வரியும் சேதுமடை வந்துட்டோம். இடம் தெரியல, அதான் உன்கிட்ட லொகேஷன் கேட்க போன் பண்ணினேன்." என்றார் நிதானமாக

"என்ன பெரியப்பா, கிளம்பும்போதே சொல்லி இருக்கலாம்ல?", என்று அவன் வேகமாக சரியான அடையாளத்துடன் முகவரியைக் கூறினான்.

"டிரைவர் இன்னிக்கு தான் ஃப்ரீயா இருந்தாரு. அதான் சரின்னு கிளம்பி வந்துட்டோம். ரிட்டயர் ஆனதுக்கு பின்னாடி கிளம்பணும்ன்னு முடிவு பண்ணினா போதும் பா, ரெண்டு ட்ரெஸ் எடுத்து பையில வச்சா கிளம்ப வேண்டியது தான்." என்றார் சிரித்தபடி.

"ஆமா ரவி, இவருக்கு ரெண்டு ட்ரெஸ் எடுத்து வச்சா போதும், மருந்து மாத்திரை, துண்டு, ஷேவிங் செட், டாய்லெட்டரி செட் எல்லாம் தானா நடந்து பின்னாடி வரும்." என்று பக்கத்தில் அமர்ந்து கேலி செய்தார் வைதீஸ்வரி.

பெரியம்மாவின் பேச்சில் சிரித்த ரவி, "அவருக்கு நீங்க இருக்குற தெம்பு தானே பெரியம்மா ." என்று கூற, "நாங்களும் அது விஷயமா பேச தான் வர்றோம்" என்று ஈஸ்வரி சொன்னதும் ரவி புரியாமல் குழம்பினான்.

"ஈஸ்வரி சும்மா இரு. நேர்ல பேசுவோம். " என்று மனைவியை அடக்கி விட்டு ரவி சொன்ன பாதையை டிரைவருக்கு கூறத் துவங்கினார் ரகுராம்.

அழைப்பு துண்டிக்கப்படாமல் இருந்தாலும் அங்கே யாரும் பேசவும் இல்லை. ஒருவிதமான மௌனம் நிலவியது.

ரவியின் மனதில் பெரியவர்கள் வந்ததும் ராகினிக்கு சொல்லிப் புரியவைத்து, அவள் செய்யப்போகும் ஆர்ப்பாட்டங்களை சமாளிக்க தான் என்னவெல்லாம் செய்யவேண்டும் என்று எண்ணும்போதே தலை சுற்றியது.

அவன் அவர்கள் கார் வரும் வழி பார்த்து மெயின் ரோடுக்கு வந்து நின்றான்.

அப்பொழுது கூட்டமாக பலர் அவர்கள் சாலைக்குள் திரும்பிக்கொண்டே,

"என்னவோ புதுசா இரும்புப் பெட்டில வீடாம், வேன் வச்சிருக்கானாம் அதுக்குள்ளையும் ஆள் தங்க வசதி இருக்காம். என்னனென்னவோ சொல்றான் இங்க வேலை பார்க்க வந்த நம்ம பய, நேத்தே வந்து பார்க்கணும்னு இருந்தேன். வேலையா போச்சு. அதான் இன்னிக்கு ஒரெட்டு பார்த்துட்டே வீட்டுக்கு போவோம்ன்னு வேலை முடிஞ்சதும் கிளம்பிட்டேன்." என்று ஒருவர் சொல்ல,

"நீ சொன்னதும் எனக்கும் ஆச்சரியம் தான் கோபாலு. அதான் பார்க்க நானும் வந்தேன்" என்று சிலர் கூற, அவர்கள் தங்கள் இடத்தை நோக்கித் தான் செல்கிறார்கள் என்று உணர்ந்து,

"சார் நீங்க பார்க்க வந்தது என் வீட்டை தான். இப்போ யாரும் இல்ல. நாளைக்கு வர்றீங்களா?" என்று ரவி தன்மையுடன் கேட்டேன்.

"சும்மா நாங்க வெளில பார்த்திட்டு போயிடுவேன் தம்பி, யாரும் இந்த மாதிரி இடத்துக்கு உள்ள எல்லாம் விட மாட்டாங்க. மேல ஒரு ரிசார்ட்ல வட்ட வட்டமாக வீடு கட்டி இருந்தாங்க, ஆசையா பார்க்க போனோம். காசு இல்லாம உள்ளேயே போக முடியாதாம். அப்படியே வந்துட்டோம். வெளில இருந்து கூட பார்க்க முடியல." என்றார் அவர்.

"இல்லங்க நாளைக்கு வாங்க நான் உள்ள எல்லாமே காட்டுறேன்." என்று சிரித்த முகமாக கூறிய ரவியை அவருக்கு பிடித்துவிட,

"நல்ல இடமா தான் தம்பி வாங்கி இருக்க, கேஸ் ஆனதுனால ரொம்ப நாளா சும்மா கிடந்துச்சு. முன்னாடி அந்த கோடில ஒரு மச்சு வீடு இருக்கும். இப்ப இருக்கோ என்னவோ?" என்று பழைய ஞாபகங்களை தேடிக் கூறியவர், "அப்பறம் அந்த பக்கத்து வீட்டு பொம்பள கூட பேச்சு வச்சுக்காத பா. நீ இவ்வளவு நல்ல பிள்ளையா இருக்கவும் தான் சொல்றேன். சரியான பணப்பிசாசு அது. கொஞ்சம் காசு வந்தாலே ஆட்டமா ஆடும். காசு உள்ளவங்க கூட சேர்ந்தா மனுஷங்களை துச்சமாக தான் நினைக்கும்." என்று சரோஜா பற்றி பற்ற வைத்துக் கொண்டு இருந்தார்.

அவனுக்கு அவர் பேச்சின் சாராம்சம் புரியாமல் போனாலும் சரி என்று தலையசைக்க அந்த மனிதருக்கு அத்தனை மகிழ்ச்சி.

எளிய மக்கள் எப்பொழுதும் அடுத்தவர்களுக்கு நல்லது சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு அவர்கள் பதிலை மிகவும் எதிர்பார்ப்பார்கள். காரணம் தன்னுடைய வார்த்தை மதிக்கப்படுகிறதா என்ற சந்தேகம் தான். ரவியின் தலையசைவு கோபாலுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்க,

"சரிப்பா நாளைக்கு வர்றோம். உள்ள தோட்டம் போடுற எண்ணம் இருந்தா எங்களை கூப்பிடுங்க தம்பி. வெளி வேலைக்கு போகுறதை விட உள்ளூர்ல வேலை இருந்தா சந்தோஷமா வந்து செய்வோம்." என்று அவரது கைபேசி எண்ணையும் கொடுத்துவிட்டு தான் கிளம்பினார்.

அவர் கிளம்பிய சற்று நேரத்தில் ரகுராமின் கார் வந்துவிட, பெரியவர்களை ஆனந்தத்துடன் தன்னுடைய புதிய இல்லத்துக்கு அழைத்துச் சென்றான்.

வெளியில் இருந்து பார்த்ததும் வைதீஸ்வரி, ரவியை முறைத்துவிட்டு,

"என்ன டா இது? இத்துனூண்டு இடத்தில எப்படி டா குடும்பம் நடத்துறது? இடம் இவ்வளவு பெருசா வாங்கி இருக்கல்ல அதே போல பொறுமையா வீட்டையும் கட்டி இருக்கலாம்ல?" என்று கண்டிப்புடன் கூற,

"பெரியம்மா கடைசில மிச்சம் இருந்த காசை வச்சு சென்னையில ஒரு அப்பார்மென்ட் வாங்கி இருக்கலாம். ஆனா என் தொழில்.. என்னால உங்களுக்கு சொல்லி புரிய வைக்க முடியும்னு தோணல அதான் சொல்லாம செஞ்சுட்டேன். இப்போ பாருங்க இடம், இந்த வீடு, போக கொஞ்ச பணம் பேங்க்ல இருக்கு." என்று அவன் கூறவே ரகுராம் மனைவியை அமைதி காக்கும் படி கூறினார்.

"நீ செஞ்சது சரி தான் ரவி. சென்னையில ரெண்டு கோடிக்கு அப்பார்ட்மெண்ட் வாங்குறதை விட இந்த மாதிரி ஊர்ல இடம் வாங்கி, வித்தியாசமா எது செஞ்சாலும் உன்னோட சேனலுக்கு அது நல்லா போகும்" என்று அவனை அறிந்தவராக கூறினார்

"தேங்க்ஸ் பெரியப்பா. நான் ராகினி கல்யாணத்துக்கு கண்டிப்பா இன்னும் ஒரு வருஷத்துல பணம் சேர்த்திடுவேன். அப்பறமா பாருங்க என்னை அன்னைக்கு அவ்வளவு அசிங்கமா பேசின மாமா, சித்தி முன்னாடி அவளுக்கு ஊரே மெச்ச கல்யாணம் பண்ணி கொடுக்கறேன்." என்றவன் குரல் வெகுவாக உடைந்து இருந்தது.

ரகுராம் அவன் தோளில் கை வைக்க அதன் மேல் ஆதரவாக சாய்ந்து கொண்டான் ரவீந்தர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சாரல் 1

சாரல் 2 | Tamil Novel | Jeyalakshmi Karthik Novels

சாரல் 7 | Tamil Novel | Jeyalakshmi Karthik Novels